News Update :

Saturday, February 2, 2019

TamilLetter

தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்

தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்

AL.Ramees
தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனும் கொள்கையில் பயனிப்பது அதாஉல்லாவின் பாணி

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமோடு  முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேறினார்.

வெளியேறிய அதாஉல்லாவுக்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் ஆதரவு பலமாக இருந்ததனால் 2004 ம்; ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்  வெற்றிலைச்; சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இதனைத் தொடரந்து 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட அதாஉல்லா ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார்.

இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குறைந்தளவிலான வாக்கு வித்தியாசத்தில் ரணிலை தோற்கடித்து வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார.தமது வெற்றிக்காக உழைத்த அதாஉல்லாவுக்கு பலம் பொருந்திய அமைச்சை  வழங்கினார்.இவ் அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அக்கரைப்பற்றில்  அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தினார் அதாஉல்லா.

இக் காலகட்டத்தில் மஹிந்தவின் விசுவாசியாக தன்னை முழுமையாக அடையாளப்படுத்திய அதாஉல்லா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்து கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கோசத்தையும்  எழுப்பினார்.

இதற்கிடையில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமான சமாதான ஒப்பந்தம் முறிவடைந்து இறுதி யுத்தத்திற்கு அது வழி கோலியது. 

அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடித்து 2009ம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அரசாங்கத்தின் வெற்றிக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்த,அதாஉல்லா,கருணா அம்மான்,பிள்ளையான்,ஹிஸ்புல்லா ஆகியோர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவாக செயற்பட்டனர்;.

யுத்தம் முடிவடைந்த கையோடு 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினார் மஹிந்த ராஜபக்ஷ. வழமை போன்று இத் தேர்தலிலும் அதாஉல்லா,ஹிஸ்புல்லா,டக்களஸ்,கருணா,பிள்ளையான் ஆகியோர் மஹிந்தவின் வெற்றிக்காக பாடுபட்டனர். இதில் மஹிந்த ராஜபக்ஷ 19 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி அவரை சர்வதிகார போக்குக்கு ஈட்டுச் சென்றது. தன்னை எதிர்க்க இந் நாட்டில் யாருமே இல்லையென்ற நிலமை மேலோங்கியிருந்தது. 2030ம் ஆண்டு வரை தனது பரம்பரையே ஆட்சியில் இருக்குமென சூழுரைத்தார். இது சிறுபான்மை மக்களுக்கான அச்சுறுத்தலாகவே அப்போது பார்க்கப்பட்டிருந்தது. சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்கள் முழுவதும் இராணுவ கெடுபிடிகளும் உளவாளிகளும்; சாதாரணமாக உலாவித் திரிந்தனர்.

வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்களை குறிவைத்து பல சதித் திட்டங்கள் அரங்கேறப்பட்டன. இம் மக்களின் பொருளாதாரங்களை முடக்குவதற்கு மேல் மட்டங்களிலிருந்து திட்டங்கள் தீட்டப்பட்டன.

அளுத்கம வன்முறை சம்பவங்களும் தலைநகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அதே போல் பள்ளிவாசல்களில் காடைத்தனமான தாக்குதல்கள் நாடு பூராகவும் நடந்தேறின.

இப்படியான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தேறிக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாகவிருந்த அதாஉல்லா மௌனம் காத்து வந்தார்.

 தினமும் தாக்குதல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருந்த  முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த மீதும் அவரைச் சார்ந்தோர் மீதும் வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தனர்;. அரசாங்கத்திற்கு எதிராக அரபு நாட்டுத் தூதுவர்கள்; ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா போன்ற நாடுகளிடமும்; முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் முறையிட்டனர்.

இவ் வேளையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கத்தக்க ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினார் மஹிந்த. இப்போதைக்கு தேர்தலை நடாத்த வேண்டாம் என்று சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களும் அதிகாரிகளும் ஆலோசகர்களும் ஆலோசனை வழங்கிய போதும்  யாருடைய கருத்துக்களையும் கேட்கும் மனநிலையில் மஹிந்த இருக்கவில்லை. திட்டமிட்டபடியே 2015ம் ஆண்டு தேர்தலை நடாத்தினார்.

முஸ்லிம் பிரதேசங்களின் முகவர்களாக அதாஉல்லா  மஹிந்தவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

மஹிந்தவின் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு  அக்கரைப்பற்று மக்களும் அவரின் கட்சியின் முக்கியஸ்தர்களும் பல அழுத்தங்களை கொடுத்த  போதும் அதாஉல்லா தான் மஹிந்தவின் விசுவாசி என்றும் மீண்டும் மஹிந்ததான் ஜனாதிபதியாக வருவார் எனறும்; அழுத்திக் கூறினார்.

முஸ்லிம் சமூகம்; அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும்; புறக்கணிக்க தொடங்கினர்.இதன் விளைவாக 98 சதவீதமான சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் மஹிந்தவுக்கு எதிராகவே அளிக்கப்பட்டன.   அதாஉல்லாவின் சொந்த ஊரிலே மஹிந்த படுதோல்வியடைந்தார்.

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணையோடு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது.     

சுமார் ஆறு மாத காலம் கடந்த நிiயில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இப் பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு தேசிய காங்கிரஸ் இணைந்து மூன்று வேட்பாளர்களை நிறுத்தியது. இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை தன் வசப்படுத்தியது. இதில் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த அதாஉல்லா,மன்சூர்,வசூர்கான் ஆகியோர் குறைந்த விருப்பு வாக்குகளைப் பெற்று  தோல்வியடைந்தனர்.

தனது தோல்விக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அதிகாரமற்ற நிலையில் தமது கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதற்கிடையில் இவ்வருடம் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரயிருக்கும் நிலையில் அதாஉல்லா எப்படி இத் தேர்;தலை முகம் கொடுப்பார் என்ற கேள்வி அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

தான் ஸ்தாபித்த தேசிய காங்கிரஸில் இதுவரை போட்டியிடாத தலைவராக அதாஉல்லா இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் வசைபாடும் நிலையை தகர்த்தெறிந்து எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிட முனைவாரா?

அப்படி தனித்து களமிறங்கினால் அவரால் வெற்றி பெற முடியுமா?
அம்பாரை மாவட்டத்தில்  ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கு ஒரு கட்சி சுமார் 40 ஆயிரம் வாக்குகளையாவது பெற வேண்டிய சூழலில் தேசிய காங்கிரஸ் இம் மாவட்டத்தில் எத்தனை வாக்குகளை தன்வசம் கொண்டுள்ளது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் மாவட்ட முழுவதும் சுமார் 25 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படியாயின் 25 ஆயிரம் வாக்குகளுடன் இன்னும் 15 ஆயிரம் வாக்குகளை மேலதிகமாக  தேசிய காங்கிரஸால் தனித்து நின்று பெற முடியுமாயின் ஒரு உறுப்பினரை பெற முடியும்.

அத்தோடு அவரின் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை எதிர்த்தரப்பிற்கு தாவும் பட்சத்தில் அட்டாளைச்சேனை வாக்குகள் உட்பட இன்னும் சில வாக்குகள் தேசிய காங்கிரஸை விட்டு பிரிவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்பது கூறிப்பிடப்பட வேண்டியதொன்று.

அம்பாரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் வாக்குப் பலத்துடன் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி வலம் வந்து கொண்டிருக்கின்றது. இக் கட்சியோடு தேசிய காங்கிரஸ்   கூட்டிணைந்து போட்டியிட முன் வந்தால் இரண்டு ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேவேளை கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி  அனுபவம் இம் முறையும் விருப்பு வாக்குகளினால் ஏற்படுமா? என்பதை அதாஉல்லா பரிசீலித்து பார்க்க வேண்டும்.

 முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பாராளுமன்றம் செல்வதாயின் ஏதோ ஒரு கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் அது சாத்தியமாகும் அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவது.

இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விக்கு தன்னை வீழ்த்திய மைத்திரியோடு மஹிந்த கூட்டுச் சேர்ந்தததைவிட வேறு உதாரணம் நமக்கு தேவையில்லை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-