News Update :

Tuesday, February 12, 2019

TamilLetter

பிரதேச வாதத்தை கடந்து மட்டக்களப்பில் கால் பதிக்கும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹரீஸ்
உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகித அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டீ.எஸ்.பி) ஊடாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திக்கு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பெருமளவிலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகளை இனம்காணும்வகையிலான கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் அவரது பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அப்துல் மஜீட், எல்.டீ.எஸ்.பி திட்ட பணிப்பாளர் தர்சன சமரகோன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்சாத், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி. பிரகாஸ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே. சித்திரவேல், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, உள்ளிட்ட மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய நகர சபைகள் மற்றும் ஏறாவூர் பற்று (செங்கலடி), கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி), மண்முனை மேற்கு (வவுனதீவு), கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று வடக்கு (வாகரை), போரைதீவுப்பற்று (வெல்லாவெளி), மண்முனைப்பற்று (ஆரயம்பதி), மண்முனை தெற்கு ஏறாவூர் பற்று (களுதாவளை), மண்முனை தென் மேற்கு (கொக்கட்டிச்சோலை) ஆகிய பிரதேச சபைகள் ஆகியவற்றின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டீ.எஸ்.பி) கீழ் இராஜாங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள், வாராந்த சந்தை, வடிகான்கள், சுகாதார மத்திய நிலையம், வாகன தரிப்பிடம், பல்நோக்கு கட்டடம், சிறுவர் பூங்கா, நீர் விநியோக திட்டங்கள், விளையாட்டு மைதானம், கிராமிய வியாபார நிலையங்கள் போன்றன அமைக்கவும் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் விடயங்களுக்குட்பட்ட பயன்பெறும் திட்டங்களை முன்னெடுக்கவும் முடியும் எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் சனத்தொகை பரம்பலுக்கு அமைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார். இவ்வபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஏப்ரல் மாதமளவில் ஆரம்பித்து 4 வருடங்களுக்குள் பூரணப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சில உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பயன்படுத்துவதற்கான வாகன வசதிகள் இல்லாமல் இருப்பது பெருங்குறைபாடாக தெரிவிக்கப்படுகின்றன. எனவே அவற்றின் அவசியத் தன்மையினை கருத்திற்கொண்டு மக்கள் நலன்சார் சேவைகளை திறண்பட செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக இவ்வாண்டிற்கான வரவு செலவுதிட்டத்தின் பின்னர் அதற்கான வாகனகொள்வனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்த வேண்டிய தேவைப்பாடு உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தரமுயர்த்துவதற்கான தமது சபை அனுமதியினை பெற்று தங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக தனக்கு சமர்பிக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

இதன்போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் எடுத்துரைப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களின் வினாக்களுக்கான பதில்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-