News Update :

Tuesday, September 19, 2017

TamilLetter

நான் மீண்டும் பிரதம மந்திரியாக வருவேன்” - நேர்காணலின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ

ஆசியப் பிராந்தியத்தில் உள்ள வித்தியாசமான ஜனாதிபதிகளில் ஒருவர்  என்று கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது போட்டியாளர்களிடமிருந்து எதிர்கொள்ளும் அரசியல் தாக்குதல்களுக்கு மத்தியில், தான் தன்னால் இயன்றளவு சிறந்தவற்றை நாட்டுக்காகச் செய்திருப்பதாகவும் மற்றும் அதற்காகத் தன்னை தற்காத்துக்கொள்ள தன்னால் முடியும் என்று தெரிவித்தார். அவர் மேலும் சுட்டிக்காட்டியது சீனர்களின் பிரசன்னம் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு மட்டுமே இருந்தது மற்றும் அவர்கள் வேறுவகையில் தன்மீது செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதை.

ஸ்ரீலங்காவின் அடுத்த பிரதமராக வருவதுபற்றி முன்னாள் ஜனாதிபதி சொன்னது, “ நான் அடுத்த பிரதமராக வருவதை அரசியலமைப்பு அனுமதிக்கிறது. முதலாவதாக நாங்கள் வெற்றி பெறவேண்டும் மற்றும் அதன்பின் யார் பிரதமராக வருவது என்பதைப்பற்றி நாங்கள் முடிவு செய்வோம்” என்று.
அந்த நேர்காணலின் சில பகுதிகள்:

கேள்வி: ஸ்ரீலங்கா எதிர்நோக்கிய பிரதான நெருக்கடிகளில் ஒன்று வெளிநாட்டுக் கடன்கள். தற்போதைய அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அதற்காக உங்கள்மீது பழி சொல்கிறார்கள். உங்கள் பதில் என்ன?

பதில்: சீனா, ஜப்பான், உலக அபிவிருத்தி வங்கி மற்றும் பிற வளங்களில் இருந்து நாங்கள் வாங்கிய கடன்களை நுகர்வுக்காகப் பயன்படுத்தவில்லை ஆனால் நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட்டது. நீங்கள் நாடு முழுவதும் சுற்றி வந்தால் வீதி வலையமைப்பு,பாடசாலைக் கட்டிடங்கள் போன்றவற்றை அமைத்திருப்பதைக் காணலாம். கொழும்புத் துறைமுகத்தின் முன்னேற்றம், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுமானம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற திட்டங்கள் என்னுடைய அரசாங்க காலத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டன.
 
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை, கடன்களை நுகர்வுக்குப் பய்படுத்துவதுதான். அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்காகக் காண்பிப்பதற்கு ஒரு அபிவிருத்தி வேலைகளும் அவர்களிடம் இல்லை. வெளிநாட்டு நாணயத்தில் அமெரிக்க டொலர் 14 பில்லியன் பெறுமதியான தொகையை  வர்த்தக வட்டி விகிதத்தத்தில் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் 
 இரண்டரை வருட காலத்தில் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

கேள்வி: இப்போது நீங்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்த திட்டங்களை இலாபகரமானதாக மாற்றியிருப்பீர்களா?

பதில்:எல்லா புதிய திட்டங்களும் இலாபகரமானதாக மாறுவதற்கு சிறிது காலம் எடுக்கும். முழு நோக்கமும் இந்த திட்டங்களை மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்துவதுதான். இந்த சொத்துக்கள் யாவற்றினதும் அடுத்த கட்ட அபிவிருத்திகள் ஆரம்பிப்பதற்கு முன்பே எங்களை வெளியேற்றுவதற்காக வாக்களிக்கப்பட்டது.

கேள்வி: தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை குறிப்பாகச் சீனாவுடனான வெளியுறவுக் கொள்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே, என்னுடைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் குறிப்பாகச் சீன நிதி உதவியுடனான திட்டங்களை நிறுத்தினார்கள். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு இந்த திட்டங்களை சீனா முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். நான் நினைத்தேன் அவர்கள் இந்தத் திட்டங்களை சீனாவிடம் இருந்து எடுத்து இந்தியா அல்லது ஜப்பானிடம் கொடுப்பார்கள் என்று, ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆனால் இறுதியாக எதுவித காரணமும் இன்றி இந்த திட்டங்களின் வேலைகளை அவர்கள் நிறுத்தியுள்ளார்கள்.

கேள்வி: துறைமுக நகரம் தொடர்பாக உங்கள் அரசாங்கம் சீனர்களிடம் சரியாகப் பரிந்துரைத்தது என்ன?

பதில்: துறைமுக நகரத்தை அமைப்பதற்காக அதன் 450 ஏக்கர் பரப்பளவிலிருந்து கிட்டத்தட் 50 ஏக்கர்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கினோம். இந்த திட்டத்துக்காக கடன் எதுவும் பெறப்படவில்லை மற்றும் கட்டணம் செலுத்தவேண்டிய தேவையும் இல்லை. மீட்கப்பட்ட நிலத்தின் மீதமுள்ளவை உள்ளுர் நிறுவனங்கள் மற்றும் ஜப்பான், அமெரிக்கா அல்லது இந்தியா போன்ற நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இது ஒரு வர்த்தக முயற்சி.

கேள்வி: அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஆட்சிக்க வந்தால் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை நீங்கள் மாற்றுவீர்களா?

பதில்: எங்களுடன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து அரசாங்கங்களுடனும் விதிமுறைகள் பற்றி நாங்கள் எப்போதும் பேச்சு வார்த்தைகள் நடத்தலாம். தற்போது உள்ளவர்கள் செய்வது போல வேலைகளை நான் நிறுத்த மாட்டேன் ஆனால் பேச்சு வார்த்தைகளுக்கு அங்கு இடம் உள்ளது.

கேள்வி: உங்கள் கருத்துப்படி, இந்த அரசாங்கம் கூட மற்ற நாடுகளுடன் இல்லாமல் சீனாவுடன் மட்டும்தான் வியாபாரத்தை நடத்துகிறது அப்படித்தானே?

பதில்: எங்கள் காலத்தின்போது சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகள் இந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் பங்கு பற்றின. சீனர்கள் மிக விரைவாக முடிவு எடுக்கும் முறையை கொண்டுள்ளார்கள் அது அவர்களுடன் வியாபாரங்களை மேற்கொள்வதை மிகவும் சுலபமாக்குகிறது.

கேள்வி: ஆனால் கடன் நெருக்டியைப் பார்த்தால், ஜப்பான் கூட இப்போது ஸ்ரீலங்காவுக்கு இனிமேல் எந்தவொரு கடனும் கொடுக்கக்கூடாது என்கிற கருத்தில் உள்ளது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீhகள்?

பதில்: நான் முன்பு சொன்னதைப் போல இந்த அரசாங்கம் வெறும் இரண்டரை வருடங்களுக்குள் 14 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு வெளிநாட்டு நாணயத்தில் வர்த்தகக் கடன்களை வாங்கியுள்ளது. எனவே உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஸ்ரீலங்கா கடன் நெருக்கடியில் உள்ளது என்பது தெரியும். சர்வதேச நாணய நிதியம் ஸ்ரீலங்காவுக்கு புனர்வாழ்வு வழங்க முயற்சிக்கிறது என்பதை நிதிச் சந்தைகள் நன்கு அறியும்.

கேள்வி: ஆனால் இந்தக் கடன் பொறி உங்களால்தான் ஏற்பட்டது மற்றும் தற்போதைய அரசாங்கம் அதிக கடன்களை வாங்கி அதைத் தீர்க்க மட்டுமே முயற்சிக்கிறது இல்லையா?

பதில்: 2005ல் நான் பொறுப்பேற்றபோது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் விகிதம் 96 விகிதமாக இருந்தது. எனது அரசாங்கம் அதை 70 விகிதத்துக்கு கொண்டு வந்தது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ்  ஒரு வருடத்துக்குள் இது திடீரென 83 விகிதத்துக்கு உயர்வடைந்தது. இப்போது சர்வதேச நாணய நிதியம் கடனுக்கான  மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 2021க்குள் திரும்பவும் 70 விகிதத்துக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தில் விட்டுள்ளது. எனவே சர்வதேச நாணய நிதியத்தின் முயற்சிகள் யாவும் 2014ல் நான் விட்டுச்சென்ற மட்டத்துக்கு திரும்பவும் கொண்டுவருவதே ஆகும்.

கேள்வி: திரும்பவும் ஆட்சிக்கு வருவதற்கான உங்களது உத்திகள் என்ன?

பதில்: நாங்கள் ஒரு தேர்தலுக்காக காத்திருக்கிறோம்.

கேள்வி: அவர்கள் அதைப் பிற்போடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீhகள்?

பதில்: ஏனென்றால் அவர்கள் வாக்களிக்கும் பொது மக்களுக்குப் பயப்படுகிறார்கள்.

கேள்வி;: அடுத்த பிரதமராக வரும் நோக்கம் உங்களுக்கு உண்டா?

பதில்: அவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் உடனடியாகச் செய்த முதல் வேலை ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுப்பதுதான். கோட்டபாயா, பசில்  ஏன் நாமல் கூட போட்டியிடுவதை தடுக்கும் என அவர்கள் எண்ணும் வகையான சட்டங்களை  அவர்கள் அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் நான் பிரதம மந்திரியாவதற்கு எதுவித சட்டத் தடைகளும் கிடையாது.

கேள்வி: ஆகவே நீங்கள் பிரதம மந்திரியாக வர விரும்புகிறீர்கள்?

பதில்: அரசியலமைப்பு அதை அனுமதிக்கிறது. முதலில் நாங்கள் வெற்றி பெறவேண்டும் மற்றும் அதன் பின் யார் பிரதம மந்திரியாக வருவது என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

கேள்வி: நீங்கள் போட்டியிடாவிட்டால, யார் வேட்பாளராக இருப்பார்?

பதில்: நேரம் வரும் பொழுது, ஜனாதிபதி தேர்தலுக்குரிய சிறந்த வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்.

கேள்வி: அது உங்கள் சகோதரர் கோட்டபாயாவாக இருக்க முடியுமா?
பதில்: தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தனக்கு ஆர்வம் இல்லையென்று அவர் சொல்கிறார்

கேள்வி: ஆனால் நீங்கள் அடுத்த பிரதமராக வருவதை நோக்கியே வேலை செய்கிறீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் எண்ணம் தவறானதா?

பதில்: அதைப்பற்றி நாங்கள் பிறகு பார்ப்போம். தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி அளவுக்கு மீறிய அதிகாரங்களைக் கொண்டுள்ளார் மற்றும் பிரதமரைத் தலைவராக்குவதன் மூலம் நாங்கள் அதைப் பாராளுமன்றத்துக்கு திருப்ப வேண்டும் என்று சொன்னார். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. இப்போது ஜனாதிபதி, நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக ஸ்ரீ.ல.சு.க வினர் சொல்கிறார்கள்.

கேள்வி: எந்தச் சின்னத்தின் கீழ் நீங்கள் போட்டியிடுவீர்கள்? அதைப்பற்றி 
 முடிவு செய்து விட்டீர்களா?

பதில்: அதை அந்த நேரத்தில் முடிவு செய்வோம். பல தெரிவுகள் உள்ளன. அடுத்த தேர்தலை நாங்கள் எதிர்கொள்ளும்போது கூட்டு எதிர்க்கட்சிதான் எங்கள் அடித்தளமாக இருக்கும்.

கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் தோல்வியுற்றபோது அது ஒரு சர்வதேச சதி என்று நீங்கள் குற்றம் சாட்டினீர்கள். இப்போதும் நீங்கள் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?

பதில்: ஆம், குறிப்பிட்ட சில வெளிநாட்டுக் கட்சிகள் அந்த தேர்தலில் தலையிட்டன என்பது வெளிப்படை

கேள்வி: போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் பற்றி நீங்கள் சரியான முறையில் தீர்வு காணவில்லை என்று மேற்குடன் சேர்ந்து நீங்களும் உணர்வதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?

பதில்: இல்லை.அவை எல்லாம் முட்டாள்தனம். இங்கு யுத்தக் குற்றங்கள் கிடையாது. அது சீனா பற்றிய ஒரு காரணி. நாங்கள் சீனாவுடன் நெருங்கி வருகிறோம் என எல்லோரும் நினைத்தார்கள். நல்லது, நான் எனது நாட்டை அபிவிருத்தி செய்வது பற்றி எண்ணவேண்டி இருந்தது. நான் எப்போதும் அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதற்கான முதல் தெரிவாக இந்தியாவையே தேர்வு செய்வேன். ஆனால் அவர்களது முறை மிகவும் தாமதமானது.அதனால்தான் நான் சீனாவை அணுகினேன்.

கேள்வி: இப்போது இந்தியாவுடனான உங்கள் உறவு எப்படியுள்ளது? பிரதமர் மோடி அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் உங்களிடம் வருகை தந்தார் அல்லவா?

பதில்: முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்துடன் நாங்கள் கொண்டிருந்த புரிதலைப் போல, தற்போதைய இந்திய அரசாங்கத்துடன் ஒரு பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு என்னுடைய அரசாங்கத்தின்போது நேரம் இருக்கவில்லை என்றுதான் நான் சொல்ல வேண்டும். சிவ்சங்கர் மேனன் அவருடைய அரசாங்கத்துடன் நாங்கள் கொண்டிருந்த புரிந்துணர்வு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: இரண்டரை வருடங்களுக்குப் பின்பும் இந்த அரசாங்கம் மக்கள் நலனுக்கான எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப் படுவார்கள் என்று நிச்சயமாக நம்புகிறீர்களா?

பதில்: மாற்றத்துக்காக வாக்களித்த மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் மற்றும் தோற்பதற்கான சாத்தியம் உள்ளதால் அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதில்லை.

கேள்வி: எனவே, வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு உங்களுக்கு உள்ளது?

பதில்: நிச்சயமாக

கேள்வி: அரசாங்கத்தில் உள்ள கூட்டணி பங்காளிகள் இடையே பிளவு உள்ளதை நீங்கள் காண்கிறீர்களா?
பதில்: ஆம். அவர்கள் ஏற்கனவே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

கேள்வி: நான் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவை பேட்டி கண்டுள்ளேன், அரசாங்கம் அமைக்கும் எந்த நீதி மன்றத்திலும் போர்க்குற்றங்கள் பற்றி சாட்சியமளிக்க தான் விருப்பமுடன் இருப்பதாக அவர் சொன்னார் அதே நேரம் ஜெனரல் சரத் பொன்சேகா போர்க்குற்றங்களுக்காக ஜெனரல் ஜயசூரியாமீது குற்றம் சுமத்துவதுடன் தானும் சாட்சி வழங்க முடியும் என்று சொல்கிறார். இந்த போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் இந்த பழிகூறும் விளையாட்டையும் நாம் எப்படி தீர்க்க முடியும்?

பதில்: பொன்சேகாவின் அறிக்கையால் எல்லோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு இராணுவ தளபதி இப்படி நடந்துகொள்ளக் கூடாது. நான் நினைக்கிறேன் ஜகத் ஜயசூரியாவுடன் நீங்கள் நடத்திய நேர்காணல்தான் சரத் பொன்சேகாவுக்கு உரிய பதில் என்று.

கேள்வி: ஜெனரல் சரத் பொன்சேகா என்ன செய்ய வேண்டும்?

பதில்: அவர் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

கேள்வி: கூட்டு எதிர்க்கட்சி ஏன் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறது?  அதை எதிர்ப்பதற்கு முன்பு புதிய அரசியலமைப்பு பற்றி நீங்கள் பார்த்தீர்களா?

பதில்: அரசியலமைப்பு சபை அது பற்றிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது, புதிய அரசியலமைப்பு எப்படியிருக்கும் என்று அது தெளிவு படுத்துகிறது. ஏன் எங்களுக்கு புதிய அரசியலமைப்பு தேவையாக உள்ளது? தற்போதுள்ள அரசியலமைப்பில் ஏதாவது பிரச்சினை இருந்தால் முறையான திருத்தங்களை நாங்கள் மேற்கொள்ளலாம். பிரதான பிரச்சினை நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவதுதான். அங்கிருந்துதான் அது ஆரம்பமானது. தற்பொழுது உள்ள ஜனாதிபதி தான் திரும்பவும் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்.
அரசியலமைப்பை மாற்றுவதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-