News Update :

Monday, August 14, 2017

TamilLetter

அக்கரைப்பற்று பதூர் வித்தியாலயத்திற்குப் பூட்டு; தவம் தீர்வுக்கு களத்தில்...அக்கரைப்பற்று பதூர் வித்தியாலயத்திற்குப் பூட்டு; தவம் தீர்வுக்கு களத்தில்...
இன்று காலை (14.08.2017)அக்கரைப்பற்று பதூர் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வி ஆசிரியர் தட்டுப்பாடு தொடர்பில், பெற்றார்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரால் பாடசாலை மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

அக்கரைப்பற்று பதூர் பிரதேசம் பின்தங்கிய பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் கல்வியில் அதிக ஆர்வமில்லாமல் இருந்து வந்தனர். கௌரவ.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இருந்த காலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மேற்படி பாடசாலையின் மீள்நிர்மானம் தொடக்கம் கல்வியில் கவனம் செலுத்தி வந்ததோடு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

அவர் மாகாண சபை உறுப்பினரானதும், ‘’கரையோரப் பாடசாலைகளில் மேம்பட்ட நிலை உருவாகாத வரைக்கும் அக்கரைப்பற்றின் ஒட்டுமொத்தக் கல்வியை விருத்தி செய்ய முடியாது’’ என்ற தனது கொள்கையின் பிரகாரம், மேற்படி பாடசாலையின் அதிபர் தொடக்கம் ஆசிரியர்கள் வரும் வரை உகந்த மாற்றங்களைச் செய்து, தற்போது அப்பாடசாலை அக்கரைப்பற்றுக் கல்விக் கோட்டத்தில் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஒரு வருடமாக அப்பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மூன்று பேருக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால், மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டி வளர்க்கப்படும் இப்பாடசாலையின் கல்வியில் தொய்வு நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக பல்வேறு வேண்டுகோள்களை அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும், அக்கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. அதனால், இன்று அப்பாடசாலையின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, பாடசாலைக்கும் தங்களது பிள்ளைகளை அனுப்பாமல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவ்விடயம் வலயக்கல்விப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அங்கு பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்த போதிலும்,அப்பாடசாலையின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரை ஒரு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு முடியாத நிலை காணப்பட்டது. அதனால், வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் அவர்கள் ஸ்தலத்தில்இருந்த வண்ணம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரை தொலைபேசியில் அழைத்து இப்பிரச்சினையைத் தீர்க்க களத்திற்கு வருமாறு வேண்டிக்கொண்டார்.

தவம் அவர்கள் அங்கு சென்று, வலயக்கல்விப் பணிப்பாளர், பொலிஸ்அதிகாரி, அதிபர், ஆசிரிய ஆலோசகர் போன்றோரோடு முதலில் பேச்சுவார்த்தை நடாத்தினார். பின்னர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் என்போரை அழைத்து மேற்படி அதிகாரிகளோடு சேர்த்து இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
அதன் பிரகாரம், தற்போது உயர் தர பரீட்சைகள் இடம்பெறுவதால், இப்பிரச்சினைகளை அவசரமாகத் தீர்க்க முடியாது எனவும், பரீட்சை முடிவடைந்து மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்ததும் இப்பாடசாலைக்குத் தேவையான ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மூன்று பேரையும்தான் நியமித்துத் தருவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் வாக்குறியளித்தார். மேற்படி உடன்பாடு மீறப்படுமாக இருந்தால் தாம் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என்ற நிபந்தனையோடு, நாளை முதல் பாடசாலைக்கு தங்களது  பிள்ளைகளை அனுப்புவது என்ற உடன்பாடு காணப்பட்டு இச்சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

நேரடியாகக் களத்திற்கு வந்து இப்பிரச்சினைக்குத் தீர்வு பெறுவதற்கு தங்களுக்கு ஆதரவு வழங்கியகிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம், கல்விப் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர், கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-