News Update :

Saturday, August 19, 2017

TamilLetter

வரலாற்றில் இழிவான அரசியல்வாதியாக அதாவுல்லா பதியப்பட்டுள்ளார்– ஏ.எல்.தவம்


வரலாற்றில் இழிவான அரசியல்வாதியாக அதாவுல்லா பதியப்பட்டுள்ளார்– ஏ.எல்.தவம் -தன்னுடையமகனை மாநகர மேயராக ஆக்குவதற்காக தன்னோடு உயிருக்குயிராக தோள்கொடுத்து நின்ற எனக்கு முதுகில் குத்திய அதாவுல்லா இன்று நியாய தர்மங்களைப் பற்றிப்பேசுவது ‘’சாத்தான் வேதம் ஓதுவதைப்’’ போன்றுள்ளது என்று கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புத்துறைச்செயலாளருமான ஏ.எல்.தவம் அவர்கள்.

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்புப் பிரதேசத்தில் நடந்த ‘’சமகால அரசியல்’’ என்ற தலைப்பிலான  மக்கள் விழிப்பூட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தவம் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

இந்த முழு அக்கரைப்பற்றும் பார்த்துக்கொண்டிருக்கும் போது கடந்த2011 ஆண்டு நடந்த அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் தனது கட்சியிலே என்னைப் போட்டியிட வைத்து விட்டு.பகிரங்கமேடைகளில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியவர் அதாவுல்லா.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரைக்குமுள்ள எந்த அரசியல் தலைவர்களும் தனது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாமென பகிரங்கமாகச் சொன்னதே கிடையாது. அப்படிச் சொன்ன ஒரேயொருவர் அதாவுல்லா மாத்திரமே. அப்படிச் சொன்னதுனூடாக வரலாற்றில் இழிவான அரசியல் தலைவராக அவர் தன்னைத் தானே பதிவு செய்து கொண்டுள்ளார். அவர் என்ன செய்தாலும் இனி அதனைஅழிக்க முடியாது. நான் மன்னிக்க முடியும். ஆனால், மறக்க முடியாது.

இவ்வாறு பகிரங்க மேடைகளில் சொன்னதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, அல்லாஹ்வுடைய இல்லமான அக்கரைப்பற்றுப் பட்டின ஜும்ஆ பள்ளிவாயலுக்குள் தேர்தல் தினத்திற்கு முந்திய தினம் சட்டவிரோதமான கூட்டத்தைக் கூட்டி அங்கு எனக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கூறினார்.அந்தத் தேர்தலில் அவருடைய மகனுடைய தெரிவு இலக்கமாகிய ஒன்றைக் குறிக்குமுகமாகஒரு விரலை நீட்டிக் காட்டி,யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தெரியும்தானே என்று கேட்டார். என்னுடையதெரிவுஇலக்கமான ஐந்தைக் குறித்துக் காட்ட ஐந்துவிரல்களையும் விரித்துக்காட்டி, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று தெரியும்தானே எனவும்கூறினார்.

இது அல்லாஹ்வினுடைய இல்லமே, இதற்குள்ளிருந்து கொண்டு நாம் அநியாயத்தைச் செய்கிறோமே, அல்லாஹ் தண்டிக்க நாடினால் நாம் தாங்க மாட்டோமே என்று கொஞ்சம் கூட அச்சமில்லாமல் எனக்கெதிராகச் சதி செய்தார். அல்லாஹ்சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன். அவனும் சதி செய்ய அன்றுதான் ஆரம்பித்தான்.அந்தத் தேர்தலில் என்னை வெல்ல வைத்து அதாவுல்லாவின் முகத்தில் கரியைப் பூசினான். என்னை அவரை விட்டும் வெளியேற்றி அக்கரைப்பற்றின் முதலாவது கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இன்று உயர்த்தி வைத்துள்ளான். தவம்தான் அக்கரைப்பற்றின் முதலாவது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என யாருமே மாற்ற முடியாத வண்ணம் வரலாற்றில் பதிய வைத்துள்ளான்.

அது மாத்திரமல்லாமல், எனக்குச் செய்த துரோகத்திற்காக அதாவுல்லாவையும் அவருடைய மகனையும் இன்னுமொரு மாநகர சபைத் தேர்தல் வருவதற்குள் அதிகாரமில்லாமல் ஆக்கிவிட்டு, இன்று எனது கையிலே அதிகாரத்தைத் தந்து வைத்துள்ளான். இதுதான் அல்லாஹ்வுடைய சக்தி. அதாவுல்லாவுக்கு அல்லாஹ் கொடுத்த அமானிதத்தைப் பிழையாகப் பயன்படுத்தியதற்கு கிடைத்திருக்கின்ற தண்டனையாகக் கூட இது இருக்கலாம். அதிகம் ஆட்டம் போடும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு பாடமாக அல்லாஹ் காட்டியுள்ளான். எனக்கும் சேர்த்தே இதனை நான் சொல்கிறேன்.

இவ்வாறுதன்னுடையமகனை மாநகர மேயராக ஆக்குவதற்காக தன்னோடு 
உயிருக்குயிராக தோள்கொடுத்து நின்ற எனக்கு முதுகில் குத்திய அதாவுல்லா இன்று நியாய தர்மங்களைப் பற்றிப் பேசுவது ‘’சாத்தான் வேதம் ஓதுவதைப்’’ போன்றுள்ளது. அவர் பெரும் தியாகியாக, உத்தமனாக, சமூகப் போராளியாக வேடம்பூண்டு மக்களுக்கு செய்யும் உபதேசங்கள்சகிக்க முடியாத நாராசமாக காதில் விழுகின்றன. அவருடைய பேச்சுக்களுக்கும் உள்ளத்திற்கும் தொடர்பே கிடையாது.இவ்வாறு தொடர்பில்லாமல் இருப்பது முனாபிக்குகளுக்குரிய அடையாளமே.

இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக அவர் இன்று நடாத்துகின்ற நாடகங்களை விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்களல்ல. பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போது ரசூல் (ஸல்)அவர்களுடையகாலத்திலும் பள்ளிகள் உடைக்கப்பட்டன. அதனால் அது ஒரு பொருட்டல்லஎன்று கூறிய அவரின் வார்த்தைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை.பேருவல - அழுத்கமவில் முஸ்லிம்கள் பள்ளிவாயல்களில் கொல்லப்பட்டதையும், சொத்துக்கள் அழிக்கப்பட்டதையும் பார்த்துவிட்டு வந்து, இது ஒருசர்வதேச சதியென்று பாராளுமன்றத்தில் உரையாற்றி, கொலைகாரர்களையும் அக்கிரமக்காரர்களையும் காப்பாற்றியதையும் முஸ்லிம் சமூகம் அவ்வளவு எளிதில் ஜீரணிக்காதுஎனவும் கூறினார் தவம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-