இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால்  மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததைத் தெடர்ந்தே நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளது.

இலங்கையில் பிறந்த ரோகிஞ்சா முஸ்லிம் குழந்தைகள் உட்பட 31 முஸ்லிம்கள் 3 மாதகாலத்துக்கு மேல் மீரிஹான சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து வருட காலமாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் இவர்கள் தங்கியிருந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் நாட்டிலிருந்து படகு  மூலம் வேறொரு நாட்டிற்கு இலங்கை கடல் எல்லையினூடாக சென்று கொண்டிருக்கும் போதே  கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இவர்களுக்கு புகலிடம் வழங்க முடியாத நிலைமையை கருத்தில்கொண்டு வேறொரு நாட்டில் புகலிடம் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஈடுபட்டுள்ள நிலையிலேயே குறித்த பிரிவினருக்கு தற்கால நலன்புரி நடவடிக்கையாக முகாமிற்கு வெளியே வைத்து பராமரிப்பதற்கான அனுமதியை கோரி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டது.