News Update :

Thursday, July 20, 2017

TamilLetter

செளதி இளவரசர் கைது

செளதியின் ஒரு இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத், பலரை அடிக்கும் காணொளிக் காட்சி, சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அவரை கைது செய்ய செளதி அரசர் சல்மான் பின் அப்தெலாஜிஸின் உத்தரவிட்டார்.
இதுபோன்ற வேறு எந்தவிதமான மீறல்களிலும் இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரியாத் போலீஸால் கைது செய்யப்பட்டதாக செளதி அரேபிய அரசின் அல்-இக்பரியா தொலைகாட்சியின் @alekhbariyatv என்ற டிவிட்டர் செய்தி கூறுகிறது.
"அநீதி, சர்வாதிகாரம், துன்புறுத்தல் மற்றும் தீங்கு விளைவிப்பது போன்றவற்றை தடை செய்யும்விதமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது; இது ஷரியாவின் நியாயமான ஆட்சியை நடைமுறைப்படுத்தும் முறை என்றும் அல்-இக்பரியா தொலைகாட்சியின் அடுத்த டிவிட்டர் செய்தி விளக்கம் அளித்துள்ளது.
வீடியோவில் இளவரசருடன் காணப்படும் தனிநபர்கள், அவர்களுக்கு எதிரான சட்ட ஆணை வரும் வரை விடுவிக்கப்படமாட்டார்கள் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாக, செளதி அரசின் நிதியுதவி பெறும் அல்-அரபியா செய்தி வெளியிட்டுள்ளது.
செளதி அரேபியாவின் அரச குடும்பத்தை விமர்சிக்கும் செளதி செளதி சமூக ஊடகத்தைச் சேர்ந்த கென்னெம் அல்-துசாரி, ஜூலை 19ஆம் தேதியன்று ஒரு திருத்தப்பட்ட வீடியோவை ட்வீட் செய்தார், அதில், செளதி இளவரசர் பலரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, பெண்களையும், ஆண்களையும் அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ 2,600 முறை மறு ட்வீட் செய்யப்பட்டது.
ஆனால் இந்த காணொளிக் காட்சியை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.
@ALBARGAWYபடத்தின் காப்புரிமை@ALBARGAWY
செளதி குடிமக்களும், அங்கு வசிப்பவர்களும் பிரபலமான இரு முக்கிய அரபு ஹாஷ்டேக்களைப் பயன்படுத்தி செய்திகளுக்கு பதிலளித்தனர். "பொதுமக்களைத் தாக்கிய இளவரசர்" ("A prince attacks citizens") என்ற ஹாஷ்டேக் முதல் நாளில் 3,00,000 முறையும், "உறுதியான சல்மான் இளவரசரை சிறையில் அடைத்தார்" ("Decisive Salman imprisons a prince") என்ற ஹாஷ்டேக் அதே காலகட்டத்தில் 77,000 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"செளதி அரேபியாவில் சட்ட்த்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் விதிவிலக்கின்றி அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்தப்படுகிறது. சட்டத்தின்முன் சரி என்று நிரூபிக்கப்படும் வரை வலுவானவர்கள் பலவீனமாகலாம், அதேபோல், பலவீனமானவருக்கு உரிமை கொடுக்கப்பட்டிருக்கும் வரை அவர் வலுவாகலாம்" என்று செளதி அரேபிய செய்தி வலைதளத்தின் துணைத் தலைமை ஆசிரியரான அப்துல்லா அல் பர்காவி ட்வீட் செய்திருக்கிறார்.
டிவிட்டர் செய்திபடத்தின் காப்புரிமை@ALBARGAWY
Image captionடிவிட்டர் செய்தி
"முடிவெடுப்பதில் அரசர் காட்டும் வேகமானது, அவர் எல்லா விசயங்களிலும் மக்களுடன் நெருக்கமாக இருப்பதை காட்டுகிறது. துரிதமான முடிவெடுக்கும் திறன் கொண்ட, உறுதியான அரசரை கடவுள் காப்பாற்றட்டும்" என்று செளதி தொலைகாட்சியின் தொகுப்பாளர் மற்றும் நடிகரான அப்துல் கரீம் அல் ஹர்பி டிவிட் செய்துள்ளார்.
எனினும், தாக்குதல்கள் நடைபெற்றதாக காட்டப்படும் வீடியோ காட்சிகளில் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
"தாக்குதல் நடத்தியவர் இளவரசர்தான் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. மேலும், கடைசி காட்சியில் காட்டப்படும் வீடு இளவரசருடையதா? என்று கேள்வி எழுப்புபவர்கள், அந்த வீடு சாதாரண மக்களுடையதைப் போன்றே தோன்றுவதாகவும் சந்தேகங்களை எழுப்புகின்றனர். நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தாலும், வாகனம் சென்றுக் கொண்டேயிருக்கும்" என்று @Ma100Da கூறுகிறார்.
வீடியோவை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும் கைது நடவடிக்கையை செளதி ஊடகங்கள் உறுதிசெய்தன.
சவுதி அரேபியாவை சீர்திருத்துதல்
'விஷன் 2030' என்று பெயரிடப்பட்டுள்ள செளதி அரேபியாவின் பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, குற்றங்களிலும், ஊழலிலும் ஈடுபடுபவர்கள் சமூக அல்லது அரசியலில் உயர் நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செளதி அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
2016 அக்டோபரில் ஒரு பெரிய கலகத்தின்போது, ஒருவரை சுட்டுக் கொன்ற செளதி இளவரசர் 'துர்கி பின் செளத் அல் கபிர்' தூக்கிலிடப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு செளதி அமைச்சர் மீது குடும்பத்திற்காக தனது பதவியை, செல்வாக்கை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த அமைச்சர் தனது மகனுக்கு அதிக ஊதியத்துடன் அமைச்சகத்தில் பணி நியமனம் செய்த்தாக, நாட்டின் ஊழல் எதிர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகாரிகளுக்கு ஒரு குடிமகன் அனுப்பிய புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-