News Update :

Saturday, February 4, 2017

TamilLetter

கால்பந்து உலகில் முதற்தர வீரர் யார்?மெஸ்சி கால்பந்து உலகின் ஜாம்பவான். அவரது காலத்திலேயே அவரை மிஞ்சி ஒருவன் நான்கு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை ( FIFA Ballon d'Or ) வாங்குகிறான் எனில், நிச்சயம் அவன் லெஜெண்ட்தானே? ஆம், கிறிஸ்டியானோ ரொனால்டோ (CR7) கால்பந்து உலகின் பீஷ்மர். போர்ச்சுகல் நாட்டின் முகவரி, தூதுவர், அடையாளம், ஐகான் எல்லாமே.
கால்பந்து உலகின் ஜாம்பவான் ரொனால்டோ
ரொனால்டோவைப் பெற்றெடுக்க அவர் தாயை விட, போர்ச்சுகல்தான் பெரும் தவம் செய்திருக்க வேண்டும். இது அதீத மிகைப்படுத்துதல் அல்ல. எங்கே… ரொனால்டோ தவிர்த்து, உலகெங்கும் தெரிந்த ஒரு போர்ச்சுகல் பிரபலத்தின் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாதல்லவா? அர்ஜென்டினா எனில் மெஸ்சிக்கு முன்னதாக மாரடோனாவின் பெயர் உச்சரிக்கப்படும். இவர்கள் இருவரையும் சேகுவாரா பீட் செய்துவிடுவார். ஆம் சே பிறந்த மண் அர்ஜென்டினா. அமைதி அமைதி. இது மெஸ்சியை தூற்றும் கட்டுரை அல்ல. போலவே, ரொனால்டோ அடித்த கோல்கள், கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக அவர் நடத்திய ராஜாங்கம், வென்ற கோப்பைகள், வாங்கிய விருதுகள் பற்றிய கட்டுரையும் அல்ல. அப்புறம்…?
ஜோஸே மொரினியோ, மான்செஸ்ட் யுனைடெட் அணியின் மேனேஜர். கால்பந்து உலகம் மதிக்கும் பயிற்சியாளர். இவரும் போர்ச்சுகல். நாக்கில் இருந்து வார்த்தைகளுக்குப் பதில் அனலைக் கக்கும் மொரினியோ ஒருமுறை, ரொனால்டோவின் இனத்தை வெளிப்படையாக விமர்சித்திருந்தார். பின்னர் வருத்தம் தெரிவித்தது வேறு விஷயம். ஆனால், இன்று ரெனோல்டோ, தன்னால்  போர்ச்சுலுக்குப் பேர் வாங்கித் தந்து அந்தப் பயிற்சியாளருக்குப் பதில் அளித்திருக்கிறார்.
இப்போதிருக்கும் போர்ச்சுகல் கால்பந்து அணியை விட பல மடங்கு சிறந்தது லூயிஸ் ஃபிகோ காலத்து அணி. அவர்களால் தேசிய அணிக்காக பெரிய அளவில் கோப்பை வெல்லமுடியவில்லை. ஆனால், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 2016ல் யூரோ கோப்பை சாம்பியன். இதற்கு ரொனால்டோ மட்டுமா காரணம்? நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால் ஃபைனலில் ரொனால்டோ 15 நிமிடத்திற்கு மேல் களத்திலேயே நிற்கவில்லை. காரணம் காயம். அவரால் பெஞ்சில் நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார முடியவில்லை. காலில் கட்டுப்போட்டபடி டெக்னிக்கல் லைனில் நின்று பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார் ‛உன்னால் முடியும், உன்னால் மட்டுமே முடியும்’ என, ஒவ்வொரு வீரனையும் உசுப்பேத்தினார். வியூகம் அமைத்தார். அதை எக்ஸ்கியூட் செய்தார். கோப்பையும் வென்றார். காலங்காலமாக போர்ச்சுகல் வீரர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ஆடாமலே ஜெயித்தார். இது எல்லோராலும் முடியாது. தன்னை அவமதித்த ஆசிரியர் மீது சேரைத் தூக்கி வீசி எறியும் குணம் படைத்தவரால் மட்டுமே முடியும். அது ரொனால்டோவால் மட்டுமே முடியும்.
ரொனால்டோ
இப்படி ரொனால்டோவால் மட்டுமே சாத்தியப்படும் விஷயங்கள் பல. 2013 சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மாட்ரிட் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதல். ஒரு கட்டத்தில் லெஃப்ட் விங்கர் டி மரியா கொடுத்த கிராஸை, அந்தரத்தில் பறந்து, காற்றில் ரெண்டு செகண்ட் மிதந்து, படு ஃபோர்ஸாக ஒரு முட்டு முட்டுவார் ரொனால்டோ. பந்து கோல் கம்பத்தின் வலது மூலையில் தெறித்து கோல்போஸ்டுக்குள் விழும். ஒட்டுமொத்த அரங்கமும் விக்கித்து நிற்கும். கால்பந்தை உன்னிப்பாக கவனிக்கும் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், ‛நான் பார்த்த பெஸ்ட் ஹெட்டர் கோல் அதுதான்’ என்று.
அப்போது மான்செஸ்ட் யுனைடெட் பயிற்சியாளராக இருந்தவர் சர் அலெக்ஸ் பெர்குசன். பயிற்சியாளர்களில் துரோணர். அவரால், இந்த கோலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் கோல் அடித்தது அவர் சிஷ்யன். ரொனால்டோ அவர் வளர்த்த பையன். ரியல் மாட்ரிட்டுக்குச் செல்லும் முன் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் ரொனால்டோவை செதுக்கியவர் பெர்குசன். இருக்கட்டும். அதற்காக, வளர்த்த கிடா மார்பில் முட்டுவதை தாங்க முடியுமா? தனக்கு எதிராக கோல் அடிப்பதைத்தான் ஏற்க முடியுமா? தோல்வியைத்தான் பொறுத்துக் கொள்ள முடியுமா?
ஆட்டம் முடிந்ததும் நேராக டிரெஸிங் ரூம் சென்றார். டிஃபண்டர் எவ்ராவிடம் ‛அதான் கிராஸ் வருதே. அவன் ஜம்ப் பண்ணுவான்னு தெரியும். அந்த கிராஸைத் தடுத்திருக்கலாம்ல’ என ரெய்டு விட்டார். கோபத்தில் அப்படிச் சொன்னாரே தவிர, மீண்டும் மீண்டும் ரீப்ளே பார்த்தபோதுதான், அவருக்கே நாம் பேசியது எவ்வளவு அபத்தம் என்று தெரிந்தது. ‛ஜம்ப் செய்யும்போது ரொனால்டோவின் முழங்கால்கள், எவ்ராவின் தலைக்கு மேலே இருந்தன. அப்படி ஜம்ப் செய்யும்போது யாரால்தான் என்ன செய்து விட முடியும்’ என சமாதானம் அடைந்தார் பெர்குசன்.
கூடைப்பந்து வீரர்களையும் மிஞ்சும் ஜம்ப், சமயத்தில் உசைன் போல்ட்டை மிஞ்சும் ஓட்டம், லெஃப்ட், ரைட் என இரு கால்களிலும் புல்லட் வேகத்தில் பறக்கும் ஷாட், பந்து காலில் அகப்பட்டதும் மின்னல் வேகத்தில் டிரிபிளிங், சொடுக்குப் போடும் நேரத்தில் ஹெட்டர் கோல், திகைக்க வைக்கும் செட் பீஸ் கோல் என சகல விதத்திலும் ஒரு ஃபுட்பால் வீரனுக்குரிய, கம்ப்ளீட் பேக்கேஜ் ரொனால்டோ. உடம்பையும் அதற்கேற்ப வைத்திருப்பார். இல்லையென்றால் இத்தனை சாகசங்கள் சாத்தியப்படுமா என்ன? 32 வயதுக்காரனின் உடம்பா அது. சான்ஸே இல்லை. இப்படியே மெயின்டன் செய்தால், அவர் சொன்னதுபோல 40 வயது வரை விளையாடலாம். யாரும் நெருங்க முடியாது.
ரொனால்டோவின் பியூட்டியே அவரது கன்சிஸ்டன்ஸி. நம்பர்-1 என்பதை விட அதைத் தக்க வைப்பது கடினம். 22 வயதில் இருந்து இன்னும் ரேஸில் நம்பர்-1. மெஸ்சி அவ்வப்போது ஜொலித்து, காயத்தில் சிக்குவார் (மீண்டும் அமைதி). ரொனால்டோ அப்படி அல்ல. உடம்பை வைத்துதான் தொழில் என்பதால் அதற்கு கூடுதல் அக்கறை காட்டுவார். அவரது தொடைகளை கவனித்திருக்கிறீர்களா? பயிற்சியின்போது வேண்டுமென்றே கால் சட்டையை தொடை வரை மடித்து விட்டு, வேடிக்கை காட்டுவார். பளிங்கு போல இருக்கும். இப்படி இருந்தால்தான் அப்படி ஜம்ப் செய்ய முடியும். காற்றில் ரெண்டு செகண்ட் நிற்க முடியும்.
ரொனால்டோ
கால்பந்து வீரன் களத்தில் இரண்டு மணி நேரம் பம்பரமாக சுழல வேண்டுமெனில், மீதமுள்ள 22 மணி நேரம் அதற்கேற்ப உழைக்க வேண்டும். ரொனால்டோவைப் போல உடம்பு மீது அக்கறை கொண்ட வீரரைப் பார்க்க முடியாது. ‛இரவு 2 மணிக்கு ஐஸ் பாத் எடுப்பார். பயற்சிக்கு முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக வெளியேறுவார். இதுதான் அவரது சக்சஸ் சீக்ரெட்’ என்றார் ஒருமுறை பெர்குசன். ‛ஐ ஆம் தி பெஸ்ட்’ எனச் சொல்வது மட்டுமல்ல, அதை செயல்படுத்த எல்லா வழிகளிலும் மெனக்கிடுபவர் ரொனால்டோ.
ஆங், இதுவும் ரொனால்டோவால் மட்டுமே முடியும். யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், ஃபுட்பால் பிளேயர் என்பதைத் தாண்டி ரொனால்டோ ஒரு பிளே பாய். மளிகைக் கடை பட்டியல் போல நீளும் அவரது கேர்ள் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட். கல்யாணம் ஆகவில்லை. குழந்தை உண்டு. அப்பன் இருந்தும், அம்மா யாரெனத் தெரியாமல் வளர்வது ரொனால்டோவின் குழந்தை மட்டுமாகத்தான் இருக்கும். ‛எனக்கு தந்தை ஆக வேண்டும் என ஆசை இருந்தது. குழந்தை பெற்றுக்கொண்டேன். ஆனால், என் மகனின் தாய் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரம் வரும்போது என் மகனிடம் மட்டும் அதைச் சொல்வேன். அவனும் புரிந்து கொள்வான் என நம்புகிறேன்’ என விளக்கம் சொன்னார்.
ஜூனியர் ரொனால்டோ மட்டுமா? கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறப்பும் விசித்திரமானது. CR7 வயிற்றில் இருக்கும்போது, அந்த கருவைக் கலைக்க நினைத்தாராம் அவர் தாய். ஆம், கருவிலேயே கலைக்க நினைத்த குழந்தைதான் இன்று கால்பந்து உலகை ஆள்கிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-