News Update :

Thursday, December 22, 2016

TamilLetter

விக்னேஸ்வரன்அவர்களின் கனடா வருகை தொடர்பான ஊடக அறிக்கை -இலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநாடு நடைப்பெற்றுள்ளது.

இந்த மாநாடு நேற்று மாலை ரொரண்டோவில் இடம் பெற்றது.
முதல்வரின் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக்குழுவினர் கனடியத் தமிழ் ஊடகங்களுக்கான சந்திப்பினை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
இதில் கனேடிய தமிழ் ஊடகத்தினைச் சார்ந்தோரும், சில ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முதல்வர் பயணம் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான உத்தியோகபூர்வான அறிவிப்பை முதன்முதலாக வெளியிடும் நிகழ்வாக இது அமைந்தது.
முதல்வருடனான நிகழ்வுகளை கனேடிய தமிழ் சமூகமாக ஒன்றிணைந்து பணியாற்றும் வகையில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து முதல்வர் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக் குழுவை அமைத்ததாக கனடிய தமிழர் சமூக அமையத்தின் சார்பில் பேசிய பிரணவசிறி தெரிவித்தார்.

இதுவே வடமாகாண முதல்வரின் விருப்பாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற இரட்டை நகர உடன்படிக்கையைத் தொடர்ந்து கனடாவிலும் மார்க்கம் மாநகரசபையுடன் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொண்டு நிறைவான இலக்கை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது.
ஜனவரி 7, 2017ல் நடைபெறவுள்ள அனைத்து ஊடகங்களுக்குமான சந்திப்பு குறித்து பொன்னையா விவேகானந்தன் விளக்கமளித்தார்.

ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள முதல்வருடனான ஒரு மாலைப் பொழுது என்ற நிதிசேர் நிகழ்வைப் பற்றி மோகன் இராமகிருஸ்ணன் தெரிவித்தார்.
முதல்வரின் வருகையில் முக்கியத்துவம் பெறுகின்ற நிகழ்வான இரட்டை நகர உடன்படிக்கை குறித்து மார்க்கம் நகர சபை உறுப்பினர் லோகன் கணபதி விரிவாகப் பேசினார்.

இரட்டை நகர உடன்படிக்கைக்கான தோற்றம், அதன் பயன்கள், எதிர்காலத்தில் அது பெறப்போகும் வளர்ச்சி என்பன அவரது உரையில் இடம்பெற்றன.
இவ் உடன்படிக்கையினூடாக போரினால் பாதிக்கப்ட்ட முல்லைத்தீவு நகர் மேம்படுத்துவதற்குரிய நகராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது எனவும் கூறினார்.
தொடர்ந்து பிரம்டன் மாநகரசபையுடனும் இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா நகரை பிரம்டன் மாநகர செயற்பாட்டுடன் இணைக்கும் திட்டத்தை பிரம்டன் மாநகரம் ஏற்றிருப்பதாகவும் சுபாஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட கனடிய தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் முதல்வரின் வருகை தொடர்பாக இந்த ஏற்பாட்டுக் குழுவிரோடு இணைந்து பணியாற்றுகின்றனர்.
இச்சந்திப்பில் லோகன் கணபதியுடன் கல்விச்சபை அறங்காவலர்களான பார்த்தி கந்தவேள், நீதன் சண் ஆகியோருடன் கரி ஆனந்தசங்கரியின் பிரதிநிதியாக கௌதமும் வந்திருந்தார்.

முதல்வரின் வருகையும் இரட்டை நகர உடன்படிக்கையும் எத்தனை முக்கியமானது எனபார்த்தி கந்தவேள், நீதன் சண் ஆகியோர் குறிப்பிட்ட கருத்துகள் சிறப்பாக இருந்தன.
வந்திருந்த ஊடகர்கள் வினாக்களைக் கேட்டு ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

முதல்வரின் வருகை தொடர்பாக உத்தியோக பூர்வமான தகவல்களை ஏற்பாட்டுக் குழுவினரோடு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு ஊடகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

வெளியிடப்பட்ட அறிக்கையில்,
2009க்கு பின்னரான தாயகத் தமிழ்த்தேசிய அரசியலில் வடமாகாண முதல்வர் பெற்றுவரும் முதன்மையினை அனைவரும் அறிவர்.
அவருடைய தெளிவான அரசியல் கருத்துகளுக்கும் செயற்பாடுகளுக்குமான ஆதரவும் அதற்கு வலுச்சேர்க்கும் போக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் தாயக வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கோடு பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் மாநகரோடு இணைந்து முன்னெடுக்கப்பட்ட இரட்டை நகர உடன்படிக்கை ஒரு முக்கிய நகர்வாக நோக்கப்படுகின்றது.
இவ்வாறான இரட்டை நகர உடன்பாடுகள் கனடா மாநகரசபைகளோடும் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் விளைவாக மார்க்கம் மாநகரசபையுடன் இணைந்து ஓர் உடன்படிக்கையினை உருவாக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

தாயகத்தில் தமிழர் நிலங்கள் 1987க்குப் பின்னர் மாகாண அலகு நிர்வாகங்களாக அதிகாரப் பகிர்வுக்குட்படுத்தப்பட்டன.
அதற்குப் பின், புலம் பெயர்ந்தோர் தாம் வாழும் நாட்டின் அரச நிர்வாக அலகு ஒன்றினூடாகத் தாயக அரச நிர்வாக அலகுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாய்ப்பு முதல் தடவையாக இந்த உடன்படிக்கைகள் வாயிலாக ஏற்பட்டுள்ளது.

பல அமைப்புகளையும் உள்ளடக்கிய கனடாத் தமிழ் சமூகமும் மார்க்கம் மாநகரசபையும் இணைந்து பல எதிர்வினைகளுக்கும் இடர்களுக்குமிடையே இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

கனடா அரசு தமிழர் மரபுரிமை மாதமாகத் தைமாதத்தை அங்கீகரித்திருக்கும் இந்த முதல் ஆண்டில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில் இந்த உடன்படிக்கை இருதரப்பாலும் கைசாத்திடப்படவுள்ளது.

முதற் தடவையாகக் கனடாவுக்கு வருகை தரும் வடமாகாண முதல்வர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் சீராகச் செயற்படுத்தவும் ஒர் ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருடைய வேண்டுகோளுக்கும் கனடாத் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோர் அனைவரும் இதில் பங்காற்ற வேண்டும் என்ற சிந்தனைக்கும் ஏற்ப, பலரும் அங்கம் வகிக்கின்ற இந்த ஏற்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கனடாத் தமிழரிடையே பல்வேறு அமைப்புகள் வெவ்வேறான பணிகளைச் செய்துவருகின்ற போதும் உடன்படக்கூடிய விடயங்களில் ஒன்றுபட்டுச் செயலாற்றுவதே வினைத்திறனை அதிகரித்து அவற்றைப் பயன்மிக்கதாக்கும் என ஏற்பாட்டுக் குழு கருதுகின்றது.

முதல்வர் இங்கு கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் பற்றிய விபரங்களை இங்கு தருகின்றோம்.

ஜனவரி 07 சனிக்கிழமை, 2017 ஊடகவியலாளர் சந்திப்பு அனைத்து ஊடகங்களுக்கும் இதில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படும்.
வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் முதல்வரோடு வருகை தந்திருக்கும் குழுவினரும் ஊடகங்களைச் சந்தித்துப் பேசுவார்.
ஜனவரி 08 ஞாயிற்றுக்கிழமை, 2017 முதல்வருடன் ஒரு மாலைப்பொழுது முதல்வர் அவர்களில் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் உதவிப்பாலம் என்ற திட்டத்தினூடாகத் தாயக மக்களுக்கு உதவும் நோக்கோடு நிதிசேர் நிகழ்வாக இது நடத்தப்படுகின்றது.

ஜனவரி 10 செவ்வாய்க்கிழமை, 2017 – பிரம்டன் மாநகரசபையுடன் சந்திப்பு எதிர்காலத்தில் தாயக மேம்பாடு சார்ந்த பல பணிகளை பிரம்டன் மாநகரசபையோடும் இணைந்து முன்னெடுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன. அதனை வலுப்படுத்தும் சந்திப்பாக இது அமையும்.
ஜனவரி 14 சனிக்கிழமை , 2017 – இரட்டை நகர உடன்படிக்கை கைசாத்து முதல்வர் வருகையில் முதன்மைபெற்ற நிகழ்வாக இது அமையும்.
மார்க்கம் மாநகரசபை மேயர் அவர்களும் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் இதில் கையெழுத்திடுவார்கள்.

ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை, 2017 – மார்க்கம் பொங்கல் விழா மார்க்கம் மாநகரசபையின் அனுசரணையுடன் நடத்தும் பொங்கல் விழாவில் முதல்வர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கின்றார்.
இதேவேளை பொதுமக்களுக்காக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல்வரின் இந்தக் கனடாப் பயணம் பலவகையிலும் தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் நிறைவான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கான வலுவூட்டலாகவும் அமைகின்றது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு
தொடர்பு எண ;:
001647 848 7744
001647 237 2052
நன்றி!
முதல்வரின் வருகைக்கான ஏற்பாட்டுக் குழு

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-