ஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்வகத்தின் செயலாளர் ஏ.எல்.நஸார் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பிரதேச வாதங்களை விசமாக கக்குகின்றனர். ஓவ்வொரு ஊருக்கும் எம்.பி தேவைப்படுகின்றதே தவிர சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் இங்கே மழுங்கடிக்கப்படுகின்றது.
அரசியல் வாதிகள்தான் பிரதேச வாதங்களை முன்வைக்கின்றார்கள் என்று பார்த்தால் அதற்கு மேலாக படித்த நல்ல சிந்தனையுள்ளவர்களும் பிரதேச வாதத்தை தூண்டி விடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது.
இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் பல நெருக்குவாரங்களுக்குள் எமது சமூகம் மாட்டிக் கொண்ட போது இதற்கெதிராக கிளர்ந்தெழுந்தவர் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் என்பதை எல்லோருக்கும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கு பிற்பாடு தனிக்கட்சி தொடங்கிய ஒரு சிலர் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்தது மாத்திரமன்றி எம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்திய சம்பவங்கள் ஏராளம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யாரோ செய்த குற்றங்களுக்காக தனது அமைச்சுப் பதவிகளை துறந்து சமூகத்தின் பாதுகாப்புக்காக கடைசிவரை போராடியவர் சட்டத்தரணி ஹரீஸ் அவர்கள்
முஸ்லிம்களையும்,முஸ்லிம் காங்கிரஸையும் தோற்கடிப்பதற்காக களமிறக்கப்பட்ட சுயநலவாதிகளின் தலைவன் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் அகப்பட்ட போது முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவனுக்காக பாராளுமன்றத்தில் முதலாவதாக எழுந்து நின்று தைரியமாக குரல் கொடுத்து காப்பாற்றிய வரலாற்று நாயகன் சட்டத்தரணி ஹரீஸ் என்பதையும் சமூக துரோகிகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
அம்பாரை மாவட்டம் இலங்கை முஸ்லிம்களின் நிருவாக மாவட்டம் இக் கூற்றை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் கடந்த 15 வருடங்களாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதற்காகவே; இரண்டு அரசியல் விபச்சாரிகள் முகவர்களாக நியமிக்கப்பட்டு எமது பிரதேசத்தின் வாக்குகளை சூரையபட எத்தனிக்கின்றனர்.
அது மட்டுமா? கல்முனை மண் இன்று எதிரிகளின் கழுகுப் பார்வைக்குள் விழுந்திருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வாய்க்கால் வெட்டி கொடுப்பதற்கு எமது சமூகத்திலிருந்து ஒரு சிலர் முன்வந்திருப்பது அயோக்கித்தனமானது.
சுமார் 15 வருடங்களாக மறுக்கப்பட்டு வரும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம்,கரும்பு பயிர்ச் செய்கை நிலங்கள்,வட்டமடு விவசாய காணிகள்,பொத்துவில் முகுதுமகா காணிப் பிரச்சினை என்பன தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக தாரை வார்த்தது போல் மீதம் இருக்கின்றவற்றை புடுங்கி எடுப்பதற்கான மறுவடிவமே இத் தேர்தலில் தனித்து களமிறக்கப்பட்டமைக்கான பிரதான காரணமாகும்.
அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்ற சமூகத்திற்கு எதிரான சகல பிரச்சினைகளின் போதும் களத்தில் தன்னந் தணியாக நின்று தமது சமூகத்தின் இருப்புக்காக எதிரிகளின் முன் நெஞ்சை நிமிர்த்தி போராடிய ஒரு சமூகப் போராளி சட்டத்தரணி ஹரீஸ் அவர்களினால் மாத்திரமே மேற் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர முடியும் என்பது நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் நம்பிக்கை.
சமூகம் நசுக்கப்படும் அன்றைய பொழுதுகளில் எமக்காக குரல் கொடுக்க யார் வருவார்கள் என்று ஏக்கத்துடன் தவித்த பொழுது ஒடோடி வந்து கை கொடுத்தது சட்டத்தரணி ஹரீஸ் எம்.பிதான் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியமாகவுள்ளது.
எனவே ஒரு வலிமையான எதிர்காலத்தை எமது சமூகம் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய றிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
அடுத்த பாராளுமன்றம் சுகபோகம் அனுபவிக்கும் இடமாக இருந்த விடாது அங்கு கருத்தியல் யுத்தம் நடைபெறப் போகின்றது. அந்த களமுனைக்கு யாரை அனுப்ப வேண்டுமென்பதுதான் இப்போதைய ஆயிரம் ஆயிரம் கேள்விகள். இக் கேள்விகளுக்கு சட்டத்தரணி ஹரிஸின் பெயர் விடையாக மாறி உள்ளதை மறந்து விடாதீர்கள் என மேலும் தெரிவித்தார் ஏ.எல்.நஸார்.