மதவாத சர்ச்சைகளால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தமது மண்ணை பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது.
இலங்கை முஸ்லிம்களுக்கென அடையாளமாக திகழ்கின்ற கல்முனை பிரதேசத்தை இல்லாதொழிப்பதற்கான பாரிய இரகசிய திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்காக முஸ்லிம்கள் மத்தியில் பிரதேச வாதத்தையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் தமது திட்டங்களை இலகுவாக வெற்றியாக்கிவிடலாம் என்பது அவர்களது இலக்காக உள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவுள்ள பெரும் ஆபத்தை உணர்ந்து கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் தயாரில்லை என்பதோடு தனிநபர் அரசியலை இதன் மூலம் எப்படி வீழ்த்தலாம் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கல்முனை பிரதேசத்தின் பாதுகாப்பு கல்முனை மக்களினதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களினதும் பொறுப்பாகவே ஒரு சில அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகின்றது. ஒரு சிலரின் சுயநல சிந்தனைகளின் காரணமாகத்தான் எதிரணின் திட்டங்கள் வலுப்பெற்று வருவதுடன் இத்திட்டத்தை முறியடிப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் தனியாக களமாடுவதின்; உண்மை நிலை இதுவாகும்.
ஆளும் தரப்பு மூன்றில் இரண்டை கோரி நிற்கின்ற இத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென்பதற்கான போராட்டத்தையும் முதலில் ஆரம்பித்தது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள்தான். இதற்காக மாற்று தலைமைகளோடும்,தனி நபர்களோடும், புத்திஜீகளோடும் கலந்துரையாடி வருவதைக் கூட கிண்டல் அடிக்கின்ற சமூகமாக நாம் மாறிக் கொண்டிருக்கின்றோம்.
புத்திஜீவிகளையும்,அரசியல் மற்றும் சட்ட மேதைகளையும் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்ற குறைந்த பட்ச சமூக சிந்தனையைக் கூட மறந்து கொந்தராத்துக்காகவும்,கோடினேற்றர் பதவிகளுக்காகவும் வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற கலாச்சாரம் முஸ்லிம்களின் சமூக வீழ்ச்சிக்கு வித்திடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இனப் பிரச்சினை தொடர்பாக சகோதர சமூகங்கள் ஆளுமையோடும் ஆவணங்களோடும் தயாராக காத்திருக்கின்ற சூழ்நிலையில் 13வது சட்ட திருத்தம்,19வது சட்டத் திருத்தம் என்ன? என்பது கூட தெரியாத நபர்களை நமது சமூகம் நம்பியிருப்பது வெட்கித் தலைகுணிய வைக்கின்றது.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்துகின்ற சமூகவியலாளர்களினதும்,புத்திஜீளினதும் கடமையாகும்
எமது மண்ணை பாதுகாப்போம் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்போம்.