தனக்கு நடந்த அநீதி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடந்துவிடுமோ? என்ற பயம் தனக்கு எழுந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் சஜித் பிரேமதாச மீண்டும் மக்கள் சந்திப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொரு தீ பொறியும் பற்ற வைக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதாக தெரிவித்தனர். இப்படியான பல விடயங்கள் வெளியாகின.
அதன் மூலம் கைகளையும், கால்களையும் கட்டி என்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியமையை மக்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
எனக்கு நடந்த அநீதி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடந்துவிடுமோ? என்ற பயம் எனக்குள்ளது. வாய்க்கு அருகில்வந்து அதை தருவதாகவும் இதை தருவதாகவும் கூறுவர்.
ஆகவே அனைத்து பொறுப்புகளையும் கையளித்தால் அவற்றை ஏற்றுக்கொள்ள தயார் என்பதை கூறிக்கொள்கின்றேன். அப்படியில்லாவிடின் நான் அதை பொறுப்பேற்ற மாட்டேன்.
எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கொள்ள விடமாட்டேன். அதனால் இன்று விடியற்காலை முதலே எனக்கு சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என்றார்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவில்லை என்றும், சஜித்தின் தோல்விக்கு ரணிலின் நடவடிக்கை தான் காரணம் என்றும் அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.