News Update :

Sunday, September 29, 2019

TamilLetter

சஜித் கைசாத்திட்டுள்ள ஒப்பந்தம் குறித்து வௌிப்படுத்திய பவித்ரா!மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்கனவே கைசாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ´ கோட்டாபயவை வெற்றிப்பெறச் செய்ய பொதுஜன பெரமுணவாகிய நாம் அர்பணிப்புடன் செயற்படுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தாங்கள் சுமூகமாக இருப்பதாக உலகிற்கு காண்பிக்க அவர்கள் முற்படுகின்றனர். அங்கு ரணில், சஜித் ஆகிய இருவருக்கும் இடையிலான பிரச்சினை தொடர்ந்து நீடிக்கும். கோட்டாபய ராஜக்ஷவை வெல்ல வைக்க எங்களுக்கு ஒரு விசேட திட்டம் தேவையில்லை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க திட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.

சஜித் பிரேமதாச என்பவருக்கு கட்சிக்குள் ஆதரவு இருந்தாலும் அது தேர்தல் செயற்பாட்டில் தீர்க்கமான காரணியாக அமையாது. வாக்காளர்களுக்கு சஜித் பிரேமதாச ஒரு ஜோக்கராக மாறியுள்ளார். உயரமானால் காவலாளி, குள்ளமானால் தொழிலாளி இவ்வாறு கூறியர் நாட்டுக்கு பொருததமற்றவர். இவ்வாறானவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என புத்தியுள்ளவர்களுக்கு தெரியும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தூர நோக்குடைய ஒரு திட்டம் தேவை. நாட்டை கட்டியெழுப்ப கூடிய நிகழ்ச்சி நிரலை முன் வைக்க வேண்டும். ஆனால் முன்பு தனது தந்தையின் யுகத்தை போன்றதொரு யுகத்தை ஏற்படுத்த போவதாக சஜித் கூறி வருகின்றார்.

அன்று இளைஞர்களுக்கு தொழில்வாய்பை தருவதாக கூறி ஏமாற்றினர். இன்று சஜித் பிரேமதாசவை சுற்றியுள்ள பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக கென்ரீமா விதரனவின் படுகொலை, ச்சரித லங்காபுர, சாகரிக்கா கோமஸ், மற்றும் பிரேம கீர்த்தி டி அல்விஸ் ஆகியோரின் கொலை தொடர்பில் என்ன சொல்ல போகின்றீர்கள் என கேட்க விரும்புகின்றேன்.

பிரேமதாச காலத்தில் இளம் வயதில் நாம் சந்தித்த கொடூரத்தை மீண்டும் எதிர்கொள்ளக்கூடும். வரலாறு புதுபிக்கப்படுகின்றது. எனவே இத்தகைய வன்முறையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என நாட்டின் தாய்மார்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சஜித் பிரேமதாச ஏற்கனவே கட்சியில் உள்ள கள்ளர்களுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அதற்கமைய மத்திய வங்கி பிணை முறி குற்றவாளிகளை தண்டிக்காமலிக்க ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றையது அரச சொத்துக்களை பயன்படுத்தி 10 சிமெந்து மூடைகளை பகிர்தளித்தமை மக்களின் ஜனநாயக உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அரசியலில் ஈடுபட்டமை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படாது.

சஜித் பிரேமதாசாவின் அரசியல் நண்பர்கள் அவரது கல்வி நிலை குறித்து பேசுவதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் இந்த சீமெந்து மூடைகளை பகிர்ந்தளித்தமையின் மூலம் அவரது இரண்டாம் தர செயற்பாட்டை விளங்கிக்கொள்ள முடியும்.

உலகமயமாக்கப்பட்ட நாட்டில் பத்து மூடை சீமெந்துகளை வழங்கி மக்களின் வாக்குகளை பெற முடியும் என சஜித் பிரேமதாச நினைக்கின்றார்.

ஆனால் புத்திசாலிகள் சரியான திட்டமும் பார்வையும் கொண்ட நபருக்கு வாக்களிப்பார்கள்.

ஆகவே கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு அனைத்து தரப்பினரும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளனர்´ என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-