News Update :

Sunday, September 22, 2019

TamilLetter

தலைவர் அதாஉல்லாவினால் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்படனர்.

-ரீ.கே.றஹ்மத்துல்லா







அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய   மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக் கழகம் 'அதாஉல்லா வெற்றிக் கிண்ணம் 2019' ஐ தனதாக்கிக் கொண்டது.









 மேயர் அகமட் ஸக்கியின் அனுசரணையில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டி அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

 அம்பாறை மாவட்டத்தில் மிகவும் புகழ்மிக்க 8 உதைப்பந்தாட்ட விளையாட்டுக் கழகங்கள் இச் சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டன. இப்போட்டியின் அரை இறுதிச் சுற்றில் திருக்கோவில் விளையாட்டுக் கழகமும், அக்கரைப்பற்று சூ சிற்றி விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டதில் உதய சூரியன் விளையாட்டுக் கழகம் 4க்கு 2 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




 மற்றுமொரு அரை இறுதிப் போட்டியில் சம்மாந்துறை ஸ்பார்ட்னஸ் விளையாட்டுக் கழகத்துடன், அட்டாளைச்சேனை சோபர் கழகம் விளையாடியதில், சம்மாந்துறை ஸ்பார்டனஸ் கழகம் 2க்கு 1 என்ற கோள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதியானது.



இறுதிப் போட்டியானது (21) சம்மாந்துறை ஸ்பார்ட்னசுக்கும், திருக்கோவில் உதய சூரியனுக்குமிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் உதய சூரியன் அணியினர் 3க்கு பூச்சியம் என்ற கணக்கில் கோள்களைப் புகுத்தி அதாஉல்லா வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.



இச்சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக திருக்கோவில் உதய சூரியன் அணியைச் சேர்ந்த ரீ.சங்கர் தெரிவானார்.

 இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.



 அத்தோடு அக்கரைப்பற்றின் உதைப்பந்தாட்டத்துறைக்கு நீண்டகாலமாக அதிக பங்களிப்பை செய்த மூன்று மூத்த வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் முகமாக எஸ்.எல்.எம்.ஹனிபா,ஏ.எல்.றமீஸ்,ஐ.எல்.பஸீர் ஆகியோருக்கு நினைவுச் சின்னத்தை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா வழங்கி வைத்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-