News Update :

Friday, September 27, 2019

TamilLetter

ஜனாதிபதி தேர்தல் - முஸ்லிம் சமூகம் பிழையாக வழிநடத்தப்படுகின்றதா?

ஏ.எல்.நஸார்.
செயலாளர்
முஸ்லிம் தேசிய ஆய்வகம்

பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவிற்கு பிற்பாடு முஸ்லிம் சமூகம் எடுத்துக் கொண்ட அரசியல் தீர்மானங்கள் பிழையான வழிக்கே இட்டுச் சென்றுள்ளது.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரித்து தோல்வியடைந்து விட்டு மீண்டும் மஹிந்தவின் அரசில் அமைச்சர்களாக தங்களை ஒட்டிக் கொண்டது.

அதே போன்று 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு துரோகம் செய்து விட்டு அடையாளம் மற்றும் இலக்கு தெரியாத வேட்பாளருக்கு ஆதரவளித்து முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட வைத்தது மாத்திரமல்ல மறுகனமே மீண்டும் மஹிந்தவின் காலடியில் சென்று மண்டியிட்டு அமைச்சை பெற்றுக் கொண்டது.

இனிமேல் மஹிந்த அரசாங்கத்தை விட்டு எக்காரணம் கொண்டு நாங்கள் வெளியேறமாட்டோம் எனக் கூறிய இவர்கள் 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டின் நலன்களுக்காக மூன்றாவது முறையாக முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக திசை திருப்பியது.

முஸ்லிம்களின் 95வீதமான வாக்ககளைப் பெற்ற நல்லாட்சி அரசாங்கம் பதிவியேற்று கொஞ்ச நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிரான தனது உண்மையான நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டிணைந்திருக்கின்ற ஜாதிக ஹெல உறுமய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழிப்பதற்கான திட்டத்தை நன்கு திட்டமிட்டிருந்தது.இதற்கு ரணிலின் அரசாங்கம் அமைச்சர் சம்பிக்கவுக்கு பக்கபலமாக நின்று செயற்பட்டது.

அதேபோல்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரத்னதேரரை வைத்து இஸ்ரேலின் கொள்கைகளை இலங்கையில் அமூல்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நன்கு திட்டம் தீட்டியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட சஜீத் பிரேமதாஸா தனது வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட தொழில் வழங்களில் எத்தனை தொழில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பார்த்தால் அது பூச்சியமாகவே காணப்படுகின்றது.

அதுமட்டுமா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது அவர்களை சிறையில் அடைக்க வேண்டுமென்று இனவாதத்தை கக்கிய சஜீத்தின் ஈரம் இன்னும் காயவில்லை.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சமூகம் சார்ந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.வேட்பாளரை எமது கட்சி தீர்மானிக்க முடியாது என்றும் தமிழர்களுக்கு பொறுத்தமான தீர்வுத் திட்டத்தை யார் வழங்க முன்வருவார்களோ அவர்களுக்கு தமிழர்களின் ஆதரவை வழங்குவதற்கு யோசிக்க முடியுமென்று தனது கொள்கையை அழகாகவும் திமிறாகவும் அறிவித்துள்ளது.

ஆனால் முஸ்லிம் சமூகமாகிய நாங்கள் ஒரு சாராருக்கு எதிராக நின்று கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்வதில் போட்டி போட்டுக் கொண்டு சண்டை பிடிக்கிறோம்.
முஸ்லிம் சமூகத்தின் எந்த பிரச்சினையை ஐக்கிய தேசியக் கட்சி தீர்த்துவிட்டது என்பதை எமது தலைவர்களால்; விளக்க முடியுமா? என்ற கேள்வி இல்லாமல் இல்லை.

கல்முனை,வாழைச்சேனை,தோப்பூர் போன்ற பிரதேசங்களின் பிரச்சினை இவர்களால் தீர்க்க முடிந்ததா?

அம்பாரை மாவட்டத்திலுள்ள பொத்துவிலுள்ள ஆயிரக்கணக்கான காணிகள் உட்பட வட்டமடு,நுரைச்சோலை கரும்புக் காணிகள் என எதை மீட்டுத்; தந்துள்ளார்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு சுமார் 15 வருடங்களாக வீடற்றுக் காணப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளைக் கூட இந்த அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்க முடியாதா கையாளாகாத அமைச்சர்களாக இருப்பதில் என்ன பிரயோஸனம்.

முஸ்லிம் பிரதேசத்தை பௌத்த ராஜ்ஜியமாக்க துடித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரினால் இறக்காமத்தில் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட சிலையை இந்த அரசாங்த்தினால் ஏன் அகற்ற முடியவில்லை?

நன்கு திட்டமிட்டு செயற்படுத்திய திகன,அம்பாரை கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் அதே போன்று நீர் கொழும்பு,குர்நாகல பிரதேசங்களில் காடையர்களால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன தீர்வை இந்த அரசாங்கம்  வழங்கியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் முஸ்லிம்கள் கடைப்பிடித்து வரும் மத விவகாரத்தில் வெளிநாட்டின் நிதியொதுக்கீட்டுக்காக அவர்களை திருப்திப்படுத்தும் முகமாக முஸ்லிம் சமய சட்டத்தை  சட்டரீதியாக மாற்றியமைக்க முன்வந்த இந்த அரசாங்கம்  முஸ்லிம்களின் திருமண சட்டம்,காதி நீதிமன்ற சட்டம், முஸ்லிம்; பெண்களின் ஆடை விவகாரம் என எத்தனையே சட்டங்களை நமக்கெதிராக கொண்டு வந்துள்ளது.

இப்படியான நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் இருக்கத்தக்க  விளக்கில் விட்டில் பூச்சி விழுவது போன்று எந்தவித எதிர்பார்ப்புமின்றி சஜீத்துக்கு அதரவாக கச்சை கட்டி கொண்டு நிற்பது நமது சமூகத்திற்கு எதைப்  பெற்றுத்தரப் போவது? 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-