ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக எப்பொழுது முடிவடைகிறது என்ற அப்பிராயத்தை உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி விரைவில் கோரவுள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா, ஆறு ஆண்டுகளா என்ற சர்ச்சை தோன்றியபோது, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடியிருந்தார்.
19வது திருத்தத்தின் பின்னர், தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலமா அல்லது இனிமேல் பதவியேற்கும் ஜனாதிபதிக்கு 5 வருட பதவிக்காலமா என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது.
தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலம்தான் என உயர்நீதிமன்றம் விளக்கமளித்திருந்தது.
இந்தநிலையில், மீளவும் உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளார் என தெரிகிறது.
ஜனாதிபதி பதவியேற்ற தினத்தில் இருந்து ஐந்தாண்டுகள் கணக்கிடப்படுமா அல்லது 19வது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்ட தினத்தில் இருந்து ஜனாதிபதியின் பதவிக்காலம் கணக்கிடப்படுமா என்ற சந்தேகத்தை தீர்க்கவே, உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளார்.
ஒருவேளை, சபாநாயகர் 19வது திருத்தத்தில் கையொப்பமிட்ட தினத்தில் இருந்து ஜனாதிபதியின் பதவிக்காலம் தீர்மானிக்கப்படுமெனில், அடுத்தாண்டு மே மாதம் வரை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதிக்கு சார்பாக வருமெனில், வரும் பெப்ரவரி அல்லது மார்ச்சில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பார்.
இதேவேளை, இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கிடையில் இரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
வரும் நவம்பரில் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடியாமல், நீட்டிக்கப்படுமானால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பதென இரண்டு தரப்பும் திரைமறைவில் உடன்பாடு எட்டியுள்ளன.
இரு தரப்பு உடன்பாட்டின்படி, நாடாளுமன்றத்தையும் அடுத்த வருட தொடக்கத்தில் கலைப்பதென்றும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.