போதைப்பொருளை ஊக்கப்படுத்தும் வகையில் சீன சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், ஜனாதிபதியும் தானும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கடந்த அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலம் முதலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிராக உலக சுகாதார தாபனத்துடன் இணைந்து பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அந்தவகையில் புகைத்தல் ஒழிப்பு தொடர்பில் உலக சுகாதார தாபனம் 22 கொள்கை திட்டங்களை வகுத்துள்ளது. அதில் 20 கொள்கைகளை இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
மேலும் புகைத்தல் பாவனையே போதைப்பொருள் பழக்கத்திற்கு முதல் காரணம். இந்நிலையில் தேசிய வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் விதத்தில் சீன சிகரட்டை இறக்குமதி செய்யும் யோசனை நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலாப நோக்கத்திற்காக மக்களின் எதிர்காலத்தை பாதிப்படைய செய்ய முடியாது என்பதுடன் எதிர்ப்புக்களுக்கு பின்னரும் சீன சிகரட் இறக்குமதி செய்யப்படுமாயின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம்” என ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.