அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்காது இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
கபீர் ஹாசிம் உட்பட பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை ஏற்பார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று முற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இவ்வாறு கூறிய போது எழுந்த அமைச்சர்கள் தலதா அத்துகோரள மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் “ இல்லை இல்லை.. கபீர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பாருங்கள் இரண்டு நிமிடங்களுக்கு அவசர குறுஞ் செய்து வந்தது”எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குழப்பமடைந்த பிரதமர், “ தற்போது பதவிப் பிரமாணம் செய்ய வேண்டாம் அனைவரும் ஒன்றாக பதவிப் பிரமாணம் செய்யுங்கள் என்று நான் கபீரிடம் நேற்று கூறினேன்” என கூறியுள்ளார்.
இது தெளிவாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என பிரதமர் தெரிவித்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமருக்கு தெரியாமல், ஜனாதிபதியால் அமைச்சரை நியமிக்க அதிகாரமில்லை அமைச்சர்கள் சிலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள செயற்குழுவின் உறுப்பினராக அமைச்சர் அஜித் பீ. பெரேரா, “ தற்போது இந்த சம்பவத்திலும் கட்சியின் தவிசாளரை கூட உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகியுள்ளது. இப்படியான தலைமைத்துவம் தொடர்ந்தும் எதற்கு” என காரமாக கூறியுள்ளார்.