ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டுவதற்கு மறுப்புத் தெரிவித்துவரும் நிலையிலேயே தனக்கிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமர் ரணில் இந்தச் செயலில் ஈடுபடவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்துவரும் தெரிவுக்குழுவை இரத்துச் செயவேண்டுமென்று கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடுமையாக வலியுறுத்தியதுடன் ரத்துச் செய்யும்வரை தான் அமைச்சரவையைக் கூட்ட அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இதனடிப்படையில் நேற்றைய தினம் இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதியின் அனுமதியின்மையால் நடைபெறாமல்போனதுடன் நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பான சமரசப் பேச்சுவார்த்தைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியை அழைத்தபோதும் அந்த அழைப்பையும் அவர் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவைக் காரணம் காட்டி அமைச்சரவையைக் கூட்டாவிடில் அதற்கு எதிராக நாடாளுமன்ற அதிகாரங்களையும் பிரதமருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையைக் கூட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.