News Update :

Wednesday, June 26, 2019

TamilLetter

ஜனாதிபதியின் முடிவுக்கு ஆதரவளிக்க முடியாது: கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுதி


19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாக கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், ஜனாதிபதியின் இந்த முயற்சியை தோற்கடிக்க போவதாக தெரிவித்துள்ளன.
18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் என்று ஜனாதிபதி கூறியதை ஏற்றுக்கொள்வதாகவும் எனினும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாக சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அந்த கட்சிகள் கூறியுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு இருந்த வரையறையற்ற சர்வாதிகாரங்கள், 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரித்து, ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது.
சர்வாதிகாரத்தை இரத்துச் செய்து, ஜனநாயகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, ஜனாதிபதியிடம் இருந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க இணங்கி, திருத்தங்களை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இவ்வாறு ஜனநாயகத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டுக்கு சாபம் மட்டுமல்லாது இதனால், அராஜக நிலையும் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்கின்றது. இதனால், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த வகையிலும் இடமளிக்காது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இது தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதன் பிரதித் தலைவர் யு.டி.எம். அன்வர், ஜனாதிபதி தற்போதைய சூழ்நிலையில் செயற்படும் விதம் குறித்து எந்த வகையிலும் திருப்தியடை முடியாது.
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட அடிப்படை காரணம் அரசியலமைப்புச் சட்டம் அல்ல. ஆட்சியாளர்களின் பலவீனமே இதற்கு காரணம். நாடு வலுவாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் வலுவாக இருக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை ஜனாதிபதியே ஏற்படுத்தினார். ஜனாதிபதியின் தீர்மானம் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் அறிவித்தது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் வரம்பு மீறிய அதிகாரங்களை இரத்துச் செய்த காரணத்தினாலேயே உயர் நீதிமன்றம் இப்படியான தீர்ப்பை வழங்கியது எனவும் அன்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-