பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த திங்கட்கிழமையே இராஜினாமாக் கடிதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகவே சமர்ப்பித்தோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் தனித்தனியாகவே இராஜினாமாக் கடிதங்களைக் கையளிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் நோன்பு பெருநாள் காணப்பட்டதனால், அதனைக் கொடுக்க தாமதமடைந்தது. இருப்பினும், தாம் கடந்த திங்கட்கிழமை முதல் இராஜினாமா செய்தவர்களாகவே இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை ஒப்படைக்கவில்லையென ஜனாதிபதி செயலக அறிவித்தல்களை வைத்து இன்று ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் எதிர்க் கட்சியினர் எழுப்பிய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.