News Update :

Sunday, June 2, 2019

TamilLetter

முஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது


குல்ஸான் எபி

பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள்   முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமில்லாமல் தடையேற்படுகின்றது.

தலைவர் அஷ்ரப்பின் பாசறைகளில் வளர்ந்த, அரசியல் முதிர்ச்சி பெற்ற  பலர் இன்று உறங்கிக் கொண்டிருக்கும் நிலையை முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது.

அரசியலில் கிடைத்த சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்தி சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் அரசியல்வாதிகள் நம்மில் இல்லாததது பலத்த பலவீனமாகும்.

அப்படியான பலவீனமான சந்தர்ப்பத்தில்தான்; முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இன்று நாடு பூராகவும்  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளோடு அடிப்படை உரிமைகளும் தான்   தோன்றித்தனமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்துவதற்கான எந்த அரசியல் பிரதிநிதிகளின் கைகளும் சுத்தமற்று போய்யுள்ளமை துரதிர்ஷ்டமே.

முஸ்லிம் பராளுமன்ற உறுப்பினர்களில் ஓர் இருவரைத் தவிர மற்றைய ஏனையவர்கள் எல்லோரும் தங்களுக்கு ஓதுக்கப்படும் நிதிகளை கொமிஸனுக்காக கொந்தராத்து செய்யும் வேலைகளை மாத்திரம் அழகாக செய்து வருகின்றனர்.

அதிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சென்று 13வது திருத்தச் சட்டம், 19வது திருத்த சட்டம், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பாக பேச முற்பட்டால் எந்தவித அடிப்படை அறிவு கூட இல்லாத நபர்களாகவே அவர்கள் இருப்பதையிட்டு முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

இப்படியானவர்களை குறை கூறுவதைவிட இப்படியானவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி பதவிகளை பெற்றுக் கொடுத்த முஸ்லிம் சமூகத்தையே நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

 வாக்காளர்கள் தமது சுயநலத்திற்காகவும் தமது பிரதேச வாதத்திற்காகவும்தான் அடிப்படை அறிவுகளற்ற நபர்களை தலைவர்களாகவும் அரசியல் பிரதிநிதிகளாகவும் தேர்வு செய்கின்ற பரிதாபத்தை என்னவென்று கூறுவது.

எத்தனையோ அரசியல் ஞானம் பெற்றவர்கள் கல்வியாளர்கள் சட்டம் தெரிந்தவர்கள் இருக்கத்தக்க ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட தகுதி இல்லாதவர்களை பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைக்கும் தெரிவு செய்து அனுப்பியதன் பயனாகவே இன்று முஸ்லிம் சமூகம் நடு வீதியில் அநாதரவாக நின்றுகொண்டிருக்கின்றது என்பதை நமது சமூகம் இன்னும் விளங்கவில்லையா? என்ற கேள்வியும் நிறையவே உள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் நான்கு வருடங்களை கடந்த நிலையில் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுத்தந்த விடயங்கள் என்ன என்பதை கூறமுடியுமா?  ஆத்தோடு முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க புறப்பட்ட வீரர்கள் இன்று நமது கோவனம் கழற்றப்பட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இதில் கொஞ்சமாவது சமூகத்திற்காக தனது பதவி இராஜினமா செய்துவிட்டு அரசாங்கத்திற்கு எதிராக தனது நிலைப்பாட்டை எடுக்க எத்தனித்த ஒருவரை அக்கட்சியின் தலைமை அச்சுறுத்தி பணிய வைத்ததை; நாம் காணக் கூடியதாகவும் உள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-