நாடாளுமன்றில் வாராந்தம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் அந்த கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாராந்தம் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வாராந்தம் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதும் உடனடியாக தெரிவுக்குழுவை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் நாடாளுமன்ற தெரிவுக் குழுவை ஐக்கிய தேசிய கட்சி ஆயுதமாக பாவிக்கின்றது எனக் கருதும் ஜனாதிபதி, அதனை உடனடியாக கைவிடவும் வலியுறுத்தினார். எனினும் ஐக்கிய தேசிய கட்சி அரசு அதை கைவிடவில்லை. இதையடுத்தே இன்றைய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் நேற்று விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்ட போதிலும் இன்று தெரிவுக்குழுவின் அமர்வு தொடரவுள்ளது.
இதன்மூலம் மீண்டும் ஜனாதிபதிக்கும் சட்டவாக்க நாடாளுமன்றத்திற்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
அத்துடன் அமைச்சரவை கூட்டங்களை கூட்டாது பிற்போடுவதால் புதிய முடிவுகள் எதுவும் அங்கீகரிக்கப்படாது.