News Update :

Tuesday, May 7, 2019

TamilLetter

“மரணமே என்னை விடுதலை செய்யும் ” கவிஞர் மஜித் உடனான நினைவுகள் — – கருணாகரன்



“மரணமே என்னை விடுதலை செய்யும்” என்று சொல்வார் வே. பாலகுமாரன். பாலகுமாரனுக்கு நெருக்கமான கவிஞர் மஜீத்தும்  தன்னுடைய நீண்ட உத்தரிப்புகளிலிருந்து மணத்தின் வழியே  விடுதலையாகியிருக்கிறார். 

எப்படியோ மரணமே இருவருக்குமான விடுதலை வெளியாக உணரப்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தவர்கள். இருவரும் நெருங்கி உறவாடியவர்கள். இருவரும் சமூகம் மீதான கரிசனை மிகக் கொண்டவர்கள். இருவரும் பன்முக ஆளுமையுடையவர்கள். இருவரும் அன்பாளர்கள். இருவரும் நவீன சிந்தனையிலும் புத்திலக்கியத்திலும் ஈர்ப்புடையவர்கள். இருவரும் விடுதலை விரும்பிகள். இருவரும் எல்லாச் சமூகங்களோடும் ஊடாட்டம் கொண்டவர்கள். இருவரும் நண்பர்களாலும் பிறராலும் நேசிக்கப்பட்ட அளவுக்கு விமர்சிக்கவும்படுகின்றவர்கள். இப்படிப் பாலகுமாரனுக்கும் மஜீத்துக்குமிடையிலான ஒற்றுமையும் உறவும் பலவுண்டு.

கடுமையான வெயில் எறித்துக் கொண்டிருந்த ஒரு கோடைப்பகலில் “மஜீத் போய் விட்டார்” என்று  சொன்னபோது, நமது துயரங்களுக்கு அப்பால் மஜீத் விடுதலையடைந்து விட்டார் என்றே உணர்ந்தேன். இப்படி எண்ணுவது குரூரமானதாகச் சிலருக்குத் தோன்றலாம். 

ஆனால், மஜீத்தை அறிந்த எனக்கு இப்படியே உணர முடிந்தது. அந்தளவுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோயினால் உத்தரிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்தவர் மஜீத். தாங்கும் சக்திக்கு அப்பால் வலிகளைத் தாங்கிக் கொண்டிருந்தது அவருடைய உடல். அவருடைய குரலும் பேசும் தொனியுமே நோயினால் சிதைக்கப்பட்டிருந்தன. மஜீத்தின் மனமும் அப்படித்தான். 

வலிதின்று வாழ்ந்ததது. உடலின் வலியிலும் குடும்பம், சமூகம் என்பவற்றில் அளவற்றுக் கொண்டிருந்த கரிசனையின்பாலான மனவலியிலும் துவண்டு கொண்டிருந்த மஜீத்துக்கு இந்த மரணம் விடுதலையளித்திருக்கிறது என்பது உண்மையே. 

ஆனால், இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்வது கடினம். மஜீத்தின் குடும்பத்திற்கு இது இன்னும் கடினமானது. மஜீத்தைக் காப்பாற்றி விட வேண்டும். அவருடைய விருப்பங்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் அவரை வாழ வைக்க வேணும் என்ற தீராத வேட்கையோடு அவருடைய மனைவி (அவரை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை) போராடிக் கொண்டேயிருந்தார். வீட்டிலும் வெளியிலும் ஆஸ்பத்திரிகளிலும் என்று அவர் மஜீத்தோடு அலைந்து கொண்டிருந்த காட்சிகள் இந்தக் கணத்தில் மேலெழுகின்றன. ஒரு கட்டத்தில் மேலதிக சிகிச்சைகளுக்காக தமிழ்நாட்டுக்கு மஜீத்தை அழைத்துச் சென்று அங்கே மருத்துவம் செய்தார். அந்த நாட்களில் புதிய சூழலில் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. ஆனால் அவற்றை அவர் மஜீத்தின் வாழ்தலுக்கும் மகிழ்ச்சிக்குமாக எளியவையாக ஏற்றுக்கொள்வதற்கு  முயன்றார்.

 மஜீத்தின் துணைவியைப்போலவே மஜீத்தின் நண்பர்களும் தங்களால் இயன்ற வழிகளில் மஜீத்தைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபட்டனர். ஆனால், எல்லாக் கைகளையும் மீறிச் சென்று விட்டார் மஜீத். இது அவருக்கு வெற்றியா தோல்வியா என்று புரியவில்லை. ஆனால், நிச்சயமாக நமக்கெல்லாம் இழப்பும் தோல்வியுமே.

மஜீத்தின் மனம் ஒருபோதுமே சோர்ந்திருந்ததில்லை. ஏன் உடலும் கூடத்தான். இயலாது இயலாது என்று உடல் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனதில் ஆயிரம் குதிரைகளை எழுப்பி  உற்சாகத்தோடு அவற்றை இயக்கிக் கொண்டிருந்தார் அவர். நண்பர்கள் மட்டுமல்ல மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னுடைய உடலையும் மனதையும் இயக்கிக்கொண்டிருந்த அபூர்வி என்றே மஜீத்தைச் சொல்வேன். சிலபோது யாரும் நெருங்கவே முடியாது என்ற மாதிரி அத்தனை வேகத்தோடு  ஓடிக்கொண்டிருந்தார். 

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் அவர் பல பிரதிகளை எழுதிக் கொண்டிருந்தது இதற்கடையாளம். நினைக்கும் வேகத்துக்கு எழுதிவிடுவதற்கு அவருடைய உடல் தயாரில்லை. கைகளால் முடியாது என்றால் என்ன? மனம் எழுதத் தயாராக உள்ளதே என அவர் சொல்லச் சொல்ல அவருடைய மகளும் இணையும் எழுதி, எழுதிச் சில பிரதிகள் உருவாகியிருந்தன. அப்படி எழுதப்பட்ட வேகத்திலேயே அவை அச்சிடப்பட்டு நண்பர்களிடம் பகிரவும் பட்டது. எழுத்தின் மூலமே தன்னைப் பகிர்ந்து கொள்ள முடியும். தன்னை விட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில்தான் மஜீத் இப்படிச் செய்தாரோ என்று தோன்றுகிறது. ஆனால் இது கூட நம்முடைய எண்ணம்தான். மஜீத் எதை  எண்ணி இப்படியெல்லாம் செயற்பட்டிருப்பார்?

நோய்ப்பட்டிருந்த காலத்தில் நண்பர்களுடன் சலிக்காது பேசிக் கொண்டிருந்தார் மஜீத். நாம் அவரைத் தொடர்பு கொண்டு பேசுவதை விட அவர் நம்முடன் தொடர்பு கொண்டு பேசுவதே அதிகம். சிலவேளை ஒரு நாளைக்கு மூன்று நான்கு அழைப்புகள் கூட வரும். ஒவ்வொரு முறையும் ஆர்வத்தோடு நீண்ட நேரம் உரையாடுவார். அத்தனை உரையாடல்களிலும் அன்பிலிழைந்த வேண்டுதல்கள், கோரிக்கைகள், வலியுறுத்தல்கள், வற்புறுத்தல்கள், ஆலோசனைகள், தவிப்புகள்…கோபங்கள்.. இலக்கியத்தின் புதிய சாத்தியங்களைக் குறித்து, இன ஐக்கியம் பற்றி, தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் பற்றி, ஈழப்புரட்சி அமைப்போடு தனக்கிருந்த ஈடுபாடுகள் பற்றி, பாலகுமாரனைப் பற்றி, தன்னுடைய குடும்பத்தைப்பற்றி, மகளையும் மனைவியையும் பற்றி என… அவர் பேசுவதற்கு ஆயிரம் சங்கதிகளிருந்தன. தன்னைப் பிரகடனப்படுத்துவதைப் பெரும்பாலும் தவிர்த்தார். சிலவேளை சினமும் துக்கமும் நிரம்பிக் கதைத்ததுமுண்டு. வலியைக் கடந்து அல்லது வலியைச் சகித்துக் கொண்டு வாழத் துடிக்கும் கவிஞனின் ஆற்றாமைகள் அல்ல அவை. அவ்வளவும் மஜீத்தின் மனதில் பூத்துக் கிடந்த கடந்தகால, நிகழ்கால, எதிர்கால எண்ணவோட்டங்களே! ஆனாலும் இதையெல்லாம் எத்தனை நாளைக்குத்தான் பொறுதியோடு கேட்க முடியும்? நமக்கும் ஆயிரம் சோலிகள். வாழ்க்கை நெருக்கடிகள். களைப்புகள்.
உண்மையைச் சொல்கிறேன், சில சந்தர்ப்பங்களில் அவருடைய தொலைபேசி அழைப்பில் இணைய முடியாதிருந்திருக்கிறேன். எந்தச் சோர்வும் வெறுப்புமில்லாமல் மீண்டும் அழைப்பார் மஜீத். ஒரு சிறு துருத்தலுமில்லாமல் அதே தோழமை உணர்வோடு உரிமையோடு, அன்பொழுகப் பேசுவார். எனினும் சிலவேளை தவிர்க்கவே முடியாமல் சில வார்த்தைகளோடு உரையாடலை முடித்திருக்கிறேன். இரண்டு மூன்று தடவைகள் அவருடைய இணைப்பில் பொருந்திக் கொள்ளவில்லை என்றால் கடிதம் வரும். கடிதத்தைப் புறக்கணிக்க நம்மால் முடியாதல்லவா. அதற்காகவே கடிதம் எழுதுவார். அதிலே அன்பிலான கேள்விகளும் முறைப்பாடுகளும் இருக்கும். அதை எதிர்கொள்ளவே முடியாது நம்மால். இதிலே கொடுமையானது என்னவென்றால், இறுதிக்காலத்தில் சில நாட்கள் மஜீத்துடன் நான் பேசவேயில்லை. என் இயல்பொழுக்கத்தை மீறி இந்தத் தவறு நேர்ந்திருக்கிறது. மஜீத்துக்கும் இது கடினமானதாக இருந்திருக்க வேணும். இதையிட்ட வருத்தத்தோடு ஒரு கடிதத்தை எழுதி பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார். அதற்குப் பதிலே எழுதவில்லை நான். அந்தக் கடிதம்தான் இறுதிக்கடிதமாக இருக்கப்போகிறது என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அதுதான் மஜீத்தின் இறுதிக்கடிதம் என்றாகி விட்டது. இப்பொழுது பதிலளிக்கப்படாத அந்தக் கடிதம் பெரும் குற்றவுணர்ச்சியை முள்ளாக எழுப்பிக் கொண்டிருக்கிறது. துக்க ஊசிகளை மனசெங்கும் ஏற்றுகிறது. அது உண்டாக்கும் வெட்கத்தின் வலி தலையைத் தாழ்த்துகிறது
அதிலே அவர் கேட்டிருந்த கேள்விகளில் ஒன்று, “நான் பேசுவது எல்லோருக்கும் கசப்பாக இருக்கிறதா தோழர்?”
இதற்கு என்ன பதிலைச் சொல்வது?
பதிலுக்கான வார்த்தைகளில்லாத வெற்று நிலைக்குள்ளாகியிருக்கிறேன். எந்தக் காலத்திலும் அவருடைய இந்தக் கேள்விக்கான பதில் என்னிடமில்லை. வேண்டுமானால் மன்னிப்புக் கோரலும் துக்கத்தில் விம்முதலுமே சாத்தியம். அதுவும் பாதியிலும் பாதிக்குத்தான். மீதி, அடைக்கவே முடியாத கடன். தீராத்துக்கம். தணியா வருத்தம். மஜீத்தின் நினைவோடு  வாழ்க்கை முழுவதுமொரு முள்வழியே இது.
தன்னுடைய வாழ்வின் எல்லைக் கோட்டை உள்ளுர அறிந்தாரோ  என்னவோ அதற்கிடையில் எல்லோரிடத்திலும் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்றமாதிரி ஒரு முனைதல் மஜீத்திடமிருந்தது. இதனால் அவர் எல்லோருடனும் பேச முயன்றார். சிலர் மஜீத்தை அன்போடு ஏற்றனர். சிலர் அன்பைப் புறக்கணிக்க முடியாத நிலையில்  விலகினர். சிலர் மஜீத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினர். சிலர் மஜீத்துக்கு வெகு தொலைவிலேயே நின்றனர். ஆனால் எல்லோரோடும் மஜீத் அருகிலே நெருக்கமாகவே இருந்தார். இதுதான் மஜீத்தின் சிறப்படையாளங்களில் ஒன்று.

மஜீத்தை நான் ஈரோஸில் சந்தித்தேன். ஆனால் மிகப் பிந்திய நிலையில். 1989 அல்லது 1990 இன் முற்பகுதியாக இருக்க வேணும். அப்பொழுது நாங்கள் அதிகமாக உரையாடியதில்லை. அக்கரைப்பற்றிலிருந்து படிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் மஜீத். ஏற்கனவே திருகோணமலையைச் சேர்ந்த இன்னொரு தோழர் மஜீத் என்று பெயரில் ஈரோஸில் அறிமுகமாகியிருந்தார். என்னோடும் அவர் வலு நெருக்கம். ஆனால், அவர் தமிழர். பெயர்தான் மஜீத். அக்கரைப்பற்று மஜீத்தோ முஸ்லிம் தோழர். இந்த மஜீத்தைச் சந்தித்தபோது திருகோணமலை மஜீத்தைப்பற்றிச் சொன்னேன். அவரும் உங்களைப்போலத்தான் மிக மென்மையானவர். துயரங்களை வெளிப்படுத்தி, யாரையும் சங்கடப்படுத்தாமல் அதைத் தனக்குள்ளேயே வைத்துக் கடந்து போக முற்படும் ஞானி என்று.

“எல்லா மஜீத்துகளுக்கும் இதுவொரு விதிபோல?” என்று சிரித்தார்.
ஆனாலும் திருகோணமலை மஜீத்தைப்போலவே அக்கரைப்பற்று மஜீத்தும் அன்பில் பூத்துக் கிடந்தார். பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதோடு மஜீத்துடனான தொடர்புகள் விடுபட்டன. 1997 என நினைக்கிறேன், இருந்தாற்போல மஜீத்தின் முதலாவது கவிதைத் தொகுதி “வாழ்வின் மீது எளிய பாடல்கள்” வந்து சேர்ந்தது. விடியல் பதிப்பகத்தின் மூலமாக இந்தியாவில் அவற்றை மஜீத் வெளியிட்டிருந்தார். 

தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த புத்தகங்களிலிருந்து ஐம்பது பிரதிகளைக் கவிஞர் சு.வில்வரெத்தினம் வன்னிக்கு எடுத்து வந்திருந்தார். அந்த நாட்களில் மஜீத் பெருவெளி இலக்கியக் குழுவோடு செயற்பட ஆரம்பித்ததாக அறிந்தேன். பெருவெளி இதழில் பிரதிகளை எழுதினார். பெருவெளி பின்நவீனத்துவ உரையாடல்களைச் செய்த சூழல் அது. மஜீத் அதில் முனைப்போடு எழுதினார். அப்போது வெளிவந்தவை  சுள்ளிக்காடும் செம்பொடையனும்,  புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன, குகைவாசிகளும் ஒளித்தோற்றமும் எனப் பல. வடிவத்திலும் பொருணர்த்து முறையிலும் கவன மையத்திலும் வேறுபட்டவை என்ற அடிப்படையில் மஜீத்தின் பிரதிகள் கவனம் பெற்றன. பெருவெளியில் செயற்பட்ட ஆளுமைகளில் முக்கியமானவராக மஜீத் இருந்தார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு மேலாக மஜீத் பின்நவீனத்துவப் பிரதிகளை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார் எனப் படுகிறது. என்னுடைய பலவீனமான நினைவுகளின் நிமித்தமாக அவற்றை மீள் வாசிப்புச் செய்ய வேண்டும்.

இலக்கியம், சமூகப் பிரச்சினைகள், அரசியல், நட்பு எனப் பல தளங்களில் மஜீத்துக்கும் எனக்குமிடையிலான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ், முஸ்லிம் தரப்புகளில் நடந்த அரசியல் தவறுகள் மஜீத்தை ஆழமாகப் பாதித்திருக்கின்றன. புலிகளின் முஸ்லிம் விரோதப்போக்கையிட்டு ஆழ்ந்த கவலை மஜீத்துக்கிருந்தது. அதற்கு வன்மம் தீர்க்கின்ற மாதிரி முஸ்லிம்களில் சிலர் நடந்து கொண்டதையிட்டும் மஜீத் கவலைப்பட்டார். 

புலிகளுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான உடன்படிக்கை ஏற்பட்டபோது சற்று மகிழ்ந்த மஜீத், இந்த உறவு அரசியல் தேவைகளுடன் முடிந்து விடும்போலிருக்கு. சமூக உறவாக, வரலாற்றுறவாக மாறாது என்று சொல்லித் துக்கித்தார். அவர் எதிர்பார்த்தமாதிரியே அது அப்படித்தானாயிற்று. ஆனால் தமிழ்ச்சமூகத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு எப்போதும் ஆதரவான மனநிலையே அவரிடமிருந்தது. முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் சனங்கள் கொல்லப்பட்டதை வலிமையாக எதிர்த்தார். அதை அவர் தன்னுடைய எழுத்துகளிலும் சாட்சியமாக்க முற்பட்டிருந்தார். முஸ்லிம் சமூகத்தின் அரசியலிலும் அரசியல்வாதிகளிடத்திலும் மஜீத்துக்கு பெரிய அளவுக்கு உடன்பாடில்லை. அளவுக்கதிகமாக அதிருப்தியே இருந்தது. சில அரசியல்வாதிகளைப் பற்றிக் கடுமையான மனப்பதிவுகளை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களில் சிலர் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். நண்பர்கள். “தோழர், உங்களுடைய தோழர்களை எனக்குப் பிடிக்காது. அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்களை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்கள் சனங்களைப் பற்றிச் சிந்திப்பதை விடத் தங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை” என இதைப்பற்றி அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.

எப்போதும் தன்னை விரிந்த தளத்தில் சிந்திக்கக் கூடியவனாக ஒழுங்கமைத்தது ஈரோஸூம் பாலகுமாரனும் என்று நினைவூட்டிக் கொண்டிருந்த மஜீத்துக்கு பாலகுமாரனைப் பற்றிய இருள்நிலை பெரிதும் வாட்டியது. தன்னை நினைத்து நொந்ததை விடவும் அவர் பாலகுமாரனை நினைத்து நொந்ததே அதிகம் என்பேன்.

கடந்த ஆண்டு (2018) எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது பாலகுமாரனைப் பற்றியே நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தார். இடையில் நீண்ட மௌனத்தில் எழுந்து சென்று வெளியே இருளை வெறித்தபடி நின்றார். அந்த இருளே பாலகுமாரனின் இன்றைய நிலையாகிற்று என்று விம்மினார். ஒளியற்றுப்போனோம் நண்பா என்று ஓடி வந்து என் கைகளைப்பற்றினார். ஏது செய்வதென்றறியாது நின்றேன், இருள் மூடிக் கிடந்தது வெளியெங்கும்.
மரணத்துடன் இருபது ஆண்டுகளாக கண்ணாமூச்சியாட்டமோ சதுரங்க ஆட்டமோ ஆடிக் கொண்டிருந்த மஜீத் இப்படிச் சட்டென நம்மை விட்டுச் செல்வார் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கவேயில்லை. நான் மட்டுமல்ல, யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஏன் மஜீத் கூடத்தான். அவ்வளவுக்கு அவர் மரணத்துடன் பல தடவைகள் பகடையாடியவர். மரணத்தை முகர்ந்து விட்டுத்திரும்பியர். சூழ்ந்த இருளையெல்லாம் விலக்கிச் சுடர்ந்துகொண்டிருந்தவர்.  

அப்படியிருந்த ஒரு அழியாச்சுடர் இன்று நிச்சயமாக அணைந்து விட்டது. இனி நாம் அந்தச் சுடரைக் காணவே முடியாது. இனி நாம் மஜீத்துடன் பேச முடியாது. மஜீத்தின் புதிய கடிதங்கள் எங்களுக்கு வராது. எதிர்பாராத நேரங்களில் எல்லாம் உரிமையோடு வரும் தொலைபேசி அழைப்பொன்று வரவே வராது.  

அன்பும் கருணையும் நீதியுணர்வும் உள்ள ஒரு  குரலைக் கேட்க முடியாது. உரிமையோடு “தோழர்” என்றழைக்கும் நல்லதொருதோழமை நம்மிடமில்லை என்றாகியது.

ஆழமான இழப்புத் துயர் சூழ்ந்திறுக இருளின் முற்றத்தில் தவிக்கிறேன்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-