மஹிந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதானால்தான் சிங்கள பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இனரீதியான முறையில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே அதிகாரத்திலுள்ள மஹிந்த தரப்பினரை தோல்வியடையச் செய்வதன் மூலமே முஸ்லிம்கள் தனித்துவ அடையாளத்துடன் பாதுகாப்பாக வாழ முடியுமென கூறப்பட்டு நல்லாட்சி ஆரசாங்கத்திற்கு நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும்; வாக்களித்து மஹிந்தவின் குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பினோம்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி நான்கு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இன்னும் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என கூறுவது எவ்வளவு தூரம் பாரதூரமான விடயமாகும்.
இன்று நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம்; தினமும் அச்சத்துடன் வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவில் தனது காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கான தீர்வை இக்கட்சிகள் எடுப்பதில் ஏன் தயக்கம்காட்டி வருகின்றது.
பெரும்பான்மை சிங்கள பிரதேசத்;தில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள் இன்று தலைமையில்லாத கூட்டமாக பார்க்கப்படுகின்றனர்.
அண்மையில் அப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் கல்வியாளர் தொலைபேசி அழைப்பின் ஊடாக என்னோடு உரையாடினார். அப்போது அவர் கூறிப்பிட்டார் அன்று நாங்கள் பாதிக்கப்படும் போது மஹிந்தவின் ஆட்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் போர்க்கொடி தூக்கி எங்கள் வாக்குகளை மஹிந்தவிற்கு எதிராக பயன்படுத்தினார்.
ஆனால் இன்று அதைவிட படுமோசமான முறையில் நாங்கள் தினமும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு பரிகாரம் தேடுங்கள் என அரசை கேட்டால் இப்பவும் மஹிந்த தரப்பனிர்தான் அரசியல் நோக்கங்களுக்காக வன்முறைகளை தூண்டிவிடுகின்றனர் என்று அரசாங்கம் பதில் கூறுகின்றது
இப்படியான நிலையில் இதை வைத்துத்தான் சிங்கள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் அதிகாரம் ஆட்சி இருந்தும் பலவீனமான அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் நிற்பதைவிட பலமான பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு பின்னால் நிற்பது நமது முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பானது என அந்த நபர் தெரிவித்தார் என அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் தெரிவித்தார்.