News Update :

Friday, May 31, 2019

TamilLetter

பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் கண்டனம்


அளுத்கம பிரச்சினையை முன்வைத்து அதாஉல்லாவை தோற்கடித்த மக்கள் இன்று என்ன சொல்லப் போகின்றீர்கள் என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.அஜ்மல் கேள்வியெழுப்பினார்.

அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு சமகாலம் தொடர்பில் உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

 மஹிந்த ஆட்சிக் காலத்தில் அதாஉல்லா மாத்திரம் அமைச்சராக இருக்கவில்லை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உட்பட இன்னும் பல முஸ்லிம் நபர்கள் அமைச்சராகவும் பிரதியமைச்சர்களாகவும் இருந்து வந்தனர்.

இந்த காலகட்டத்தில் அளுத்கம பிரச்சினை ஏற்பட்ட போது ஹக்கிமோ ரிஷாட்டோ அல்லது வேறு முஸ்லிம் அமைச்சர்களோ தனது அமைச்சுப்பதவியை இராஜினமா செய்து அரசாங்கத்தை விட்டு வெளியேறவில்லை.

ஆனால் இவர்களோடு ஒரே அமைச்சரவையில் ஒன்றாகவிருந்த அதாஉல்லாவை மாத்திரம் குறிவைத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அரசியல் சதுரங்கத்தை நடாத்தி அதில் வெற்றியும் கண்டார்கள்.

இப்படியான நிலையில் நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு பிரதான காரணியாக இருந்த முஸ்லிம் சமூகத்திள் உரிமைகள் ஒவ்வொன்றாக கழட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திருமண சட்டம், ஹபாயா வரை இன்று சட்டமாக்கப்பட்டுள்ளது.

சட்டமாக்கப்படும் அமைச்சரவையில் முஸ்லிம் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம் அமைச்சர்கள் வாய்மூடி மௌனமாக நிறைவேற்றப்படும் சட்டத்தை வேடிக்கை பார்த்து நிற்கின்றனர்.

தனது பதவிகளுக்கு ஆபத்து வரும் நிலைதோன்றினால் மாத்திரம் தமது குரல்களை ஒங்கி ஒலிக்கவிடுவார்கள் ஆனால் நமது சமூகம் சார்ந்த எந்த பிரச்சினைகளுக்கும் தனது பதவியைத்தாண்டி ஒருஅடி கூட எடுத்துவைக்கமுடியாத மக்கள் பிரதிநிதிகளாகவே இவர்கள் இருக்கின்றனர்.

சில நேரங்களில் இந்த அரசியல்வாதிகளின் மேல் ஏற்படுகின்ற கோபத்தை விட மக்கள் மீதே அதிகம் கோபப்பட வேண்டியுள்ளது.ஏனென்றால் இப்படியான மோசமான தலைவர்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு தொடர்ச்சியாக வாக்களிப்பதன் மூலம் அவர்களை இப்படி சுயநலவாதிகளாக மாற்றி வைத்துள்ளனர் என பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-