ஏ.எல்.றமீஸ்
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதரண சூழ்நிலைக்கு பிரதான காரணமாக வெளிநாட்டு சக்திகள் உள்ளன.
அந் நாடுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கே இப்படியான வன்முறைகளை நம் நாட்டிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மெஸ்ரோ அமைப்பின் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்
நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களில் வடக்கு கிழக்கில் 40 வீதமானவர்களும் அதற்கு வெளியில் 60 வீதமானவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் 60 வீதமான முஸ்லிம்களின் எதிர்காலம் மற்றும் இருப்பு தொடர்பாக சிந்தித்தே அரசியல் ரீதியான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும்.
பெரும்;பான்மை சமூகம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் நிலையில் அத் தீர்மானத்திற்கு எதிராக சிறுபான்மை முஸ்லிம் சமூகம் இருக்குமாயின் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும். அப்படியான ஒரு நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இரண்டு பிரதான கட்சிகளிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்ததன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தினரால் மதிக்கப்பட்டிருந்தன.
இன்று ஒரு கட்சியிலே முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக தொங்கி கொண்டிருப்பதன் விளைவாக தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
சிங்கள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரசினாலோ அல்லது பொலிஸ் மற்றும் இராணுவத்தினராலோ வழங்கப்படுமென நம்ப முடியாது.முஸ்லிம்களின் பாதுகாப்பு அப்பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களாலும் பௌத்த மத குருமார்களாலும் அத்தோடு உள்ளுர் அரசியல்வாதிகளினாலும் மாத்திரமே எமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை எல்லோரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படியான பாதுகாப்பை நமது சமூகம் பெறவேண்டுமாயின் அரசியல் ரீதியான முடிவுகளை கட்சி எடுக்கும் போது உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் சட்டத்தரணி ஹரீஸ்