நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கை
மேற்கு – மத்தியவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு ‘போனி’) 2019 மே 01ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு வடஅகலாங்கு15.2N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.1E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 750 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இத்தொகுதி வடக்கு- வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி இந்தியாவின் ஒடிஷா கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சில இடங்களில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும். மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை காணப்படும்.மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு100 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் உயர் அலைகளுடனும் காணப்படும்.
மேற்குறிப்பிட்ட தொகுதியின் மையப்பகுதியிலிருந்து 300கிலோ மீற்றர் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 150-160 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு200 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும். இலங்கைக்கு வடக்காகவும்,கிழக்காகவும், வடகிழக்காகவும், தென்கிழக்காகவும், வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
-தகவல் திணைக்களம்-