மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச தலைமையிலான எமது கட்சியின் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 326 கிராமசேவையாளர் பிரிவிலும் விரிவுபடுத்தியுள்ளோம்.
எங்களது கடந்த ஆட்சிக்காலத்தில் தான் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சரை கொண்டுவந்தோம்.58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கினோம்
தற்போது இரண்டாயிரம் பட்டதாரிகள் எமது கட்சியுடன் இணைந்துள்ளனர். எமது ஆட்சி வந்தால் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவோம்.
தற்கொலை குண்டு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை பிரதமர் ரணில் வந்து பார்வையிட்டார் ஜனாதிபதி வந்து பார்வையிட்டார்.
எமது கட்சியின் இளைஞரணித் தலைவர் நாமல் ராஜபக்ஷ வந்து பார்த்துச் சென்றார் ஆனால் தமிழ் மக்களின் தலைவர் என்று சொல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று வரை வந்து பார்க்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜக்கிய தேசியக் கட்சிக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதம் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் இல்லை 75 வீதம் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே தலைவர்பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 24 வீதம் உள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு நான்கு தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி முஸ்லிம் கட்சிகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
எமது கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக தெரிவு செய்ய படுவார் என்பதுடன் தமிழர் ஒருவர் அமைச்சராக தெரிவு செய்யபடுவார் என்பதை எமது கட்சி தலைமை உறுதிப்படுத்தியுள்ளார்.எனவும் தெரிவித்துள்ளார்.