வடக்கு, கிழக்கு உட்பட மேலும் ஐந்து மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை கண்டறியும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஒரு மாத காலத்திற்குள் நாட்டில் ஆயிரம் சோதனை நடவடிக்கைகளுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்குண்டு தாக்குதலையடுத்து பயங்கரவாத நடவடிக்கைகள் 95 வீதமானவை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
ஒரு மாத காலத்திற்குள் படை வீரர்கள் நம்ப முடியாதளவு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாதத்தை செயலிழக்கச் செய்துள்ளனர். படையினரின் 24 மணித்தியால கடும் அர்ப்பணிப்புள்ள உழைப்பே அதற்கு காரணமாகும்.
இந் நடவடிக்கைகளின்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்த நாட்டில் மூலை முடுக்கள் தோறும் சோதனைகளை நடத்தி சகல இடங்களிலும் தேடுதலை மேற்கொண்டு பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் தற்கொலை குண்டுதாரிகளையும் பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கிய பலரையும் கைது செய்ய முடிந்துள்ளது.
அத்துடன் அவர்களது இரகசிய நடவடிக்கைகளையும் வெளிக்கொணர்வதற்கு முடிந்துள்ளது. பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு, கம்பஹா, குருநாகல், களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தவிர மேலும் ஐந்து மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.