News Update :

Tuesday, May 21, 2019

TamilLetter

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்- அமைச்சர்ஹ க்கிமின் நிலைப்பாடும்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரனையே இன்று இந்நாட்டின் பேசு பொருள்.
சந்து பொந்துகளில் எல்லாம் அதே பேச்சைத்தான் கேட்க முடிகின்றது. ரிஷாட் மீது நம்பிக்கையில்லா பிரேரனை என்ற உச்சரிப்பில் மட்டும் அனைத்து இனங்களும் ஒன்றுபட்டுள்ளமை ஆறுதலை தருகின்றது.
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மர்ஹூம் அஷ்ரபுக்கு அடுத்து முஸ்லிம் சமுகத்திற்காக போராடியதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரனையை எதிர்கொள்ளும் இரண்டாம் முஸ்லிம் அரசியல் தலைவன் ரிஷாட் பதியுதீன் ஆகும்.
அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக அன்று நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்ட போது அதை துணிச்சலுடன் முதலில் எதிர்த்தவர் சிறுபான்மை கட்சித் தலைவரான மர்ஹூம் அஷ்ரப்தான்.
இப்போது, அமைச்சர் ரிஷாடுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரனையை அப்போது போன்று முதலில் பகிரங்கமாக எதிர்த்துள்ளவரும் மற்றொரு சிறுபான்மை கட்சித் தலைவரான- அமைச்சர் மனோ கணேசன் ஆகும்.
ஆனால், முதன் முதலில் பகிரங்கமாக எதிர்க்க வேண்டியவர்கள் இதுவரை மௌனம் காப்பதுதான் முஸ்லிம் சமூகத்தை ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது.
முகா தலைவர் ஹக்கீமும் அவரது 6 எம்பிக்களும் மொத்தமாக இப்பிரேரனையை கடுமையாக எதிர்க்க வேண்டும். அது தொடர்பில் ஊடக மாநாடு நடாத்தி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனைக்கு முகா எதிர்ப்புத்தான். ஆனால் அந்த எதிர்ப்பை முதலில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை உள்ளவர்கள் முகா தரப்பினர்தான். ஏனெனில், இந்த நம்பிக்கையில்லா பிரேரனை என்பது முஸ்லிம் சமுகம் சார்ந்த பிரேரனை என்பதனாலாகும்.
குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் பல பில்லியன் கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டு, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு, குர்ஆன் தீக்கிரையாக்கப்பட்டு, உயிர்ச் சேதமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாசகார செயல்களை எல்லாம் தணித்து நின்று துணிச்சலுடன் எதிர்த்தார், கண்டித்தார், பொங்கியெழுந்தார் என்பதற்காகவே ரிஷாட் மீதான இந்த நம்பிக்கையில்லா பிரேரனை என்பது முழு முஸ்லிம்கள் மத்தியிலுமுள்ள எண்ணப்பாடாகும்.
இவ்வாறு, முஸ்லிம்களுக்காக துணிச்சலுடன் போராடிய ரிஷாட் பதியுதீனையும் முஸ்லிம் சமுதாயத்தையும் இன,மதவெறி பிடித்த சதிகாரர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு - மற்றொரு முஸ்லிம் கட்சி என்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கின்றது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை பலத்த வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் படுதோல்வி அடையச்செய்வதற்கு முகா வும் அதன் தலைமையும் அன்று மர்ஹூம் அஷ்ரப் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி முன்னின்று அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.
இதற்கு மாறாக, முஸ்லிம் அரசியலின் எதிர் தரப்பு நிலையிலிருந்து அமைச்சர் ரிஷாதையும் அவர் தலைமையிலான மக்கள் காங்கிரஸையும் துடைத்தெறியவும் - தெற்கு பெரும்பான்மையினர் மத்தியில் ரிஷாட்டுக்குள்ள இனவாத தீயை நிரந்தரமாக்கி நீண்ட - அதிலும் குறுகிய காலத்தினுள் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, முஸ்லிம் அரசியல் ஆதிக்கத்தை தன்னகத்தே கையகப்படுத்த இந்த நம்பிக்கையில்லா பிரேரனையை ஹக்கீம் - சாதகமாக பயன்படுத்த, பிரேரனைக்கு எதிராக வாக்களிப்பதோடு நிறுத்திக்கொள்ள தீர்மானிப்பாராயின் அது அவருக்கு அவரே தோண்டிக்கொண்ட படுகுழியாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நம்பிக்கையில்லா பிரேரனை என்பது - இன்று ரிஷாட் பதியுதீனுக்கு. நாளை உங்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்படலாம். ஏனெனில், இன,மதவெறி பிடித்தவர்கள் இருக்கும் வரை இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரனைகள் தொடரத்தான் போகின்றது.
அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக அன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை விவாதத்தின் போது உரையாற்றிய மர்ஹூம் அஷ்ரப் எதிரணியினரைப் பார்த்து ஒரு கட்டத்தில் கீழ்வரும் கேள்வியை எழுப்பினார்.
"கௌரவ எதிர்த்தரப்பு உறுப்பினர்களே! மங்களவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை போன்று, நாளை உங்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்டால் - உங்கள் மனோநிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்" என்றார்.
இந்த கேள்வியால் நிலை தடுமாறிய சில எதிர்தரப்பு எம்பீக்கள் மங்களவுக்கு எதிரான நிலைப்பாட்டை கைவிட்டனர்.
முகாவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் அந்தக் கேள்வி தற்போதைய சூழலில் முகாவுக்கும் பொருந்தும், அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக கையொப்பமிட்டவர்களுக்கும் பொருந்தும்..

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-