அரசாங்கத்தினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற கம்ரெலிய திட்டத்தில் சில பிரதேசங்களில் முறைகேடான முறையில் திட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் தினமும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரசேத்தில் கம்ரெலிய திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொங்கிரீட் வீதி புனரமைப்பில் முறையான திட்டமிடல் ஏதுமின்றி சில ஒப்பந்தக்காரர்கள் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக பொது மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்ரெலிய திட்டம் ஆரம்பிக்க பட்ட தினத்திலிருந்து புதிய ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தரகர்கள் அதிகளவில் அட்டாளைச்சேனையில் காணப்படுவதால் அவசர அவசரமாக பாதை அமைபபு வேலைத்திட்டம் சீராக நடைபெறவில்லை.
அத்தோடு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் ஆலோசனை பெறப்படாமல் தரமற்ற மூலப் பொருட்களை கொண்டு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வீதிகள் பழுதடைந்து விடுமென்றும் கூறப்படுகின்றது.
இப்படியான நிலையில் மக்களின் முறைப்பாட்டை கருத்தில் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்ல இவ் வீதிகளை கண்காணிக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.
இக்குழு புதிதாக அமைக்கப்பட்ட வீதிகளை பார்வையிட்டு நற்சான்றிதழ்கள் வழங்கும் பட்சத்தில் ஒப்பந்தக்காரர்களுக்கான கொடுப்பணவை வழங்க வேண்டுமென்று பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்புவதற்கு இன்று நடைபெறற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற வீதிகளை பொதுமக்கள் விழிப்பாக அவதானித்து ஏதும் முறைகேடுகள் நடைபெற்றால் பிரதேச சபையிடம் முறையிடுமாறும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றார் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா