News Update :

Wednesday, April 3, 2019

TamilLetter

முள்ளும் மலரும் - இயக்குநர் மகேந்திரன்


நடிகர் கமல்ஹாசன் இல்லாவிட்டால் முள்ளும் மலரும் படம் நான் விரும்பியபடி  வெளிவந்திருக்காது என்று மறைந்த இயக்குநர் மகேந்திரன் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். 1966-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றத் துவங்கிய இவர், சிவாஜி நடித்த ‘தங்கப்பதக்கம்’ படம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

பின்னர் 1974-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் ஆனார்.  பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2004-ஆம் ஆண்டு ‘காமராஜ்’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் விஜய் நடித்த தெறி, உதயநிதியின் ‘நிமிர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக இயக்குநர் மகேந்திரன் புதன் மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய் காலை காலமானார்.

இயக்குநராக அவரது முதல் படமான முள்ளும் மலரும் அவர் விரும்பியபடி ரிலீஸ் ஆவதற்கு நடிகர் கமல்தான் உதவினார் என்பதை மகேந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார். நிகழ்வில் அவர் பகிர்ந்து கொண்டதாவது:
முள்ளும் மலரும் படத்துக்கு முன்னாடியே வசனகர்த்தாவா தமிழ் சினிமால அறிமுகமானேன். நிறைய படங்கள் பண்ணினேன். ஒருகட்டத்துல சில காரணங்களினாலே சினிமாவே வேணாம்னு முடிவு பண்ணினேன்.

அப்பல்லாம் ஆழ்வார்பேட்டைல இருக்கிற கமல் வீட்டுக்கு அடிக்கடி போய் சினிமா பத்தி நிறைய பேசிட்டிருப்போம். அந்த மாதிரி ஒரு சமயத்துல அவர் நடிச்ச மலையாளப் படத்தோட தமிழ் டப்பிங்குக்கு வசனம் எழுதச் சொன்னார்.
அப்புறம் அவரே தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச் செட்டியார்கிட்ட என்னை அனுப்பினார். அவர் தயாரிக்க நான் என்னோட முதல் படத்தை டைரக்ட் பண்றதா முடிவாச்சு. அதுதான் முள்ளும் மலரும். கமல் அதுல நடிக்கிறதா பிளான் பண்ணினோம். ஆனா அது நடக்கல.
படத்தில் எனது டேஸ்ட்டுக்கு கேமிராமேன் அமையலன்னு கமல்ட்ட சொல்லிப் புலம்பினேன். அடுத்தநாளே அவர் எனக்கு பாலுமகேந்திராவ அறிமுகப்படுத்தி வைச்சார்.

ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்தது. படத்துல ஒரு முக்கியமான சீனை எடுக்காம இருந்தோம். கடைசியா பேட்ச் அப் ஒர்க் பண்ணனும்னு வச்சிருந்தேன். அதுதான் செந்தாழம்பூவே பாட்டோட லீட் சீன். ஆனா தயாரிப்பாளர் வேணு செட்டியார் இதுக்கு மேல செலவு பண்ணமாட்டேன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார்.

அதை எடுக்காம  இருந்தா பாட்டை படத்தில பயன்படுத்த முடியாது.  ஆனா அந்தப் பாட்டை நீங்க பயன்படுத்துவைத்து பற்றிக் எனக்கு கவலை கிடையாதுனு வேணு செட்டியார் உறுதியா மறுத்துட்டாரு.

இந்த விஷயங்களை எல்லாம் ஆழ்வார்பேட்டை வீட்டுல பேசிட்டிருக்கும் போது கமல்கிட்ட சொன்னேன். உடனே அவர் வேணு செட்டியார்கிட்ட பேசினார்.எவ்ளோ சொல்லியும் வேணு செட்டியார் கேக்கவே இல்ல. உடனே கமல், ‘பரவாயில்ல செட்டியார். அந்த ஒரு சீனுக்கு என்ன செலவாகுமோ அதை நான் ஏத்துக்கறேன்னு கமல் உடனே சொன்னார்.

மறுநாளே சத்யா ஸ்டுடீயோவில   அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. நான் விரும்புன வடிவத்திலே அந்த படம் வந்தது. என்னைப் பொருத்தவரை கமல் ஒரு மகா கலைஞன்; மகா மனிதன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தனது 32 ஆண்டு கால திரைப்பட இயக்குநர் பயணத்தில் 12 படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார்.ஆனால் அவர் இறுதிவரை கமலஹாசனை வைத்து இதுவரை படம் இயக்கியதே இல்லை என்பதுதான் இங்கே சோகமான விஷயம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-