News Update :

Tuesday, April 30, 2019

TamilLetter

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் அவர்கள் அதிரடி தீர்மானம்ஊடகப் பிரிவு


நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்து, நாட்டில் இரத்த ஆற்றை ஏற்படுத்த முயன்ற சர்வதேச பயக்கரவாதக் கூலிப்படையின் செயற்பாடுகள் மிலேட்சத்தனமானது, இச்செயலை நிந்தவூர் பிரதேச சபை வன்மையாக கண்டிக்கிறது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்
கடந்த 29.04.2019 அன்று இடம்பெற்ற நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த (13 ) அமர்வின் போது நிர்தவூர் பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் அலுவலர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிட சுய பிரார்த்தனையின் பின்னர் கண்டனத் தீர்மானத்தினத்தினை நிறைவேற்றிப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த ஈனச்செயலை செய்தவர்களை இன மத ரீதியாக பார்த்து ஒரு சமுகத்தையே குற்றவாளியாக்க முனையும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு இன மத பேதங்களுக்கு அப்பால் குற்றவாளிகளை குற்றவாளிகளாக பார்க்க வேண்டும்.
குற்றவாளிகளையும் அவர்களது பின்புலத்தையும் கண்டறிந்து அவர்களுக்கான உச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும் என்பதே பொறுப்புவாய்ந்த இலங்கை பிரஜை என்ற வகையில் எங்கள் ஒவ்வொருவரதும் கோரிக்கையாகும்
இப்படியான படுகொலைகளையும் வன்முறைகளையும் செய்யுமாறு எந்த மதமும் போதிக்கவில்லை, குறிப்பாக இஸ்லாமானது ஒரு சிறு எறும்புக்கு கூட அநியாயம் செய்து விடாதீர்கள் என்று போதிக்கிறது அது போல அன்பைப் போதிக்கும் மதமே கிறிஸ்தவம் அப்படியான மக்கள் மீது வணக்க வழிபாடுகளின் போது நடத்தப்பட வெறியாட்டங்களை பார்க்கும் போது எங்களை நிலைகுலையச் செய்கிறது.
பாதிக்கப்பட்ட மற்று உயிர் இழந்த மக்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் நிந்தவூர் மக்கள் சார்பாகவும், நிந்தவூர் பிரதேச சபை சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறித்த சந்தர்ப்பத்தில் மக்களை அமைதிப்படுத்தி மக்களுக்கு அன்பின் வழியில் போதித்து நிலமையை சுமூகமாக்க முயன்ற கண்ணியத்துக்குறிய காடினல் மல்கம் ரஜ்ஜித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் தலைவர்களின் முன்மாதிரி எமக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பார்க்கிறோம்.
அப்படியான சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு போன்ற விடயங்கள் நமது நாட்டையும் நாட்டு மக்களின் மனநிலையையும் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் கட்டியெழுப்ப சிறந்த முன்மாதிரியாகும்.
எனவே இது சம்பந்தமாக நிந்தவூர் பிரதேச சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் எழுத்து மூலமாக அனுதாப செய்திகளை உரிய தரப்பினருக்கு அனுபிவைக்க தீர்மானித்துள்ளோம்.
மற்றுமொரு பக்கம் சில அரசியல் வாதிகளும் இனவாத சக்திகளும் சர்வதேச சதியாக இருக்கும் இந்த தீவிரவாத தாக்குதல்களைவைத்து குறுகிய மனநிலையோடு முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு சேறு பூசும் வகையில் நடந்துகொள்வதும், பேசுவதும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
குறிப்பாக அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம் ஹிஸ்புல்லாஹ், ஆளுநர் அஷாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களை மோசமாக சித்தரிக்கும் வகையில் தீவிரவாதத்தோடு முடிச்சுப்போட முனைவது ஒரு நாகரீகம் அற்ற அரசியல் பாங்கு என்பது வெளிப்படை ஆகும்.
குறித்த சம்பவங்கள் சர்வதேச அரசியல் பின்னணியுடன் நடாத்தப்பட்ட தீவிரவாத செயல்கள் என்பது அரசியல் வாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அறிந்திருக்கும் நிலையில் குறித்த வக்கிரச் செயலை ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் பெயரால் அடையாளப்படுத்துவதாலும் குறித்த சமூகத்தின் தலைவர்கள் மீது அபாண்டமாக சேறு பூசும் நடவடிக்கைகளாலும் இவர்கள் அடைந்துகொள்ள நினைப்பது தான் என்ன? குறித்த அரசியல் வாதிகளின் கீழ்த்தரமான அரசியலை நிந்தவூர் பிரதேச சபை வன்மையாக கண்டிக்கிறது.
எதிர்காலக்களில் நிந்தவூர் பிரதேச மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வழிதவறி செல்லாமல் இருக்கவும் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை செய்வதற்கும் கடந்த சில தினங்களாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர், உப. தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நிந்தவூர் ஜூம்மாப் பள்ளிவாசல், உலமா சபை உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள், புத்தி ஜீவிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பல செயற்பாடுகளை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது.
குறித்த தீவிரவாத செயலுக்குப் பின்னர் தளர்வு கண்டிருக்கும் நமது நாட்டின் இன ஒற்றுமை, மக்களின் மனநிலை, இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மீண்டும் சரியான நிலைக்கு கொண்டுவர நிந்தவூர் பிரதேச சபையும் நிந்தவூர் மக்களும் கடமையாகக் கருதி பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம். அதுபோன்று இலங்கையின் பொறுப்பு வாய்ந்த பிரஜைகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது அவர்கள் மீதான தார்மீக பொறுப்பாகும் என தெரிவித்தார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-