நாக்குளிப்பாம்புக்கே பயந்து நடுங்குகிற ஆள்
முத்தப்பா. ஆனாலும் அவர் எண்பத்தாறு வயது வரையும் வன்னியில்
வாழ்ந்திருக்கிறார். அதுவும் வன்னியில் பிறந்து வன்னியில் வாழ்ந்து
வன்னியிலேயே இறந்திருக்கிறார். அவ்வளவு காலம் எப்படித்தான் முத்தப்பா
பாம்புகளைச் சந்திக்காமல் வாழ்ந்தாரோ! அதைப்போலப் பாம்புகளின் கண்ணில்
படாமலும் எப்படிச் சீவித்தாரோ! அத்தனை வயதிலும் ஒரு நாள் ஒரு விசம்
தீண்டியதில்லை முத்தப்பாவுக்கு.
முத்தப்பாவைப்போலப் பாம்புகளுக்குப் பயந்தவர்கள்
இருந்தால் பாம்புகள் அதிகமாக உள்ள ஊர்களை விட்டுச் சனங்கள் வேறு ஊர்களுக்கு
ஓடித்தான் போயிருக்க வேணும்! அப்படிப் பாம்புகளுக்குப் பயந்து
ஓடிப்போயிருந்தால் வன்னியில் இப்பொழுது சனங்களே இருந்திருக்காது.
அந்தளவுக்கு வன்னியில் எங்கே போனாலும் பாம்புகளைக் காணலாம். ஏராளம் வகையான
பாம்புகள். வெங்கிணாந்தி, செட்டிநாகம், பறநாகம், முத்திரைப்புடையன்,
கண்ணாடிப்புடையன், மணற்புடையன், கண்டங்கருவளை, சாரை, கொம்பேறி மூக்கன்,
நீர்க்கோதி, கோடலி, இரத்தவிரியன், சுருட்டை, முறியன், பச்சைப்பாம்பு,
நீலகண்டன் இப்படிப் பல.இலங்கையில் 200 க்கு மேற்பட்ட வகைப்பாம்புகள் உள்ளன
என்கிறது விக்கிபீடியா. வன்னியில் மட்டும் அறுபதுக்கு மேற்பட்ட வகையான
பாம்புகள் உண்டு என்கிறார் துரையர். விக்கிபீடியாவின் கணக்குப்
பிழைத்தாலும் துரையரின் கணக்குத் தப்பாது.
துரையர் கைராசியான விசகடி வைத்தியர். அவர்
மட்டுமல்ல, பரம்பரையே பாம்புக்கடி வைத்தியம் பார்த்தது. அதனால் பாம்புகளின்
வகை, தன்மை எல்லாம் அவருக்கு அத்துபடி.
துரையரைப்போலவும்
அவருடைய பரம்பரையைப்போலவும் ஏராளம் விசகடி வைத்தியர்கள் வன்னியெங்கும்
இருந்தார்கள். இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள்தான்.
ஆனால், இப்பொழுது விசம் தீண்டி விட்டால் முன்பைப்போல யாரும் அவர்களிடம்
வைத்தியத்துக்காகப் போவது இல்லை. அந்தரம், ஆபத்தென்று அவசர உதவியைப்
பெறுகிற அளவில்தான் யாரும் போவதுண்டு. மற்றும்படி ஆஸ்பத்திரிக்கே வைத்தியம்
செய்விக்கப்போகிறார்கள்.
வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,
மன்னார் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிற புள்ளிவிவரப்படி மாதமொன்றுக்குச்
சராசரி, முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் பாம்புக் கடிக்கு இலக்காகிறார்கள்.
இதில் எப்படியும் ஆறு தொடக்கம் பத்துப் பேர் வரையில் சாவதுண்டு. மற்றவர்கள்
மரணத்தின் விளிம்பில் நின்றாடிவிட்டுத் திரும்புகிறார்கள். இப்படிப்
பேராபத்துத் தருகின்ற பாம்புக் கடியை எப்படி நிறுத்துவது என்று யாருக்கும்
தெரியவில்லை. ஆனால், பாம்புக்கடி ஓரளவுக்குக் குறைந்திருக்கு.
முன்பென்றால் நாளொன்றுக்கே ஒன்றோ இரண்டோ என்று
பாம்புக்கடியினால் சாகின்ற நிலைமை இருந்தது. கைராசியான விசகடி வைத்தியர்கள்
இருந்தாலும் அவர்களுடைய கை மீறிப்போகும் சங்கதிகளும் இருந்தன. காடும்
வயலும் புதரும் நிறைந்த இடங்களில் பாம்புகள் தானாகப் பெருகாமல் என்ன
செய்யும்? அப்படிப் பெருகிக் கிடக்கும் பாம்புகள் எப்படியும் யாரையாவது
தீண்டத்தானே செய்யும்!
வன்னி என்றாலே காடும் வயலும் ஆறும் புதரும்
நிறைந்ததுதான். இதற்குள்தான் வன்னியர்களின் வாழ்க்கையும் செழித்தோ காய்ந்தோ
கிடந்தது. காடளையாத வன்னியர்கள் என்று யாரும் இல்லை. அதைப்போல
பிலவுக்குப்போகாதவர்கள், வயலுக்குப் போகாதவர்கள், புதர் அளையாதவர்கள்
என்றும் எவருமில்லை. இப்படிப் பலதிலும் புழங்கும்போது பாம்புகள் தீண்டாமல்
என்ன செய்யும்? பாம்புகள் தீண்டுகிற அளவுக்கு விசகடி வைத்தியர்களும்
ஒவ்வொரு ஊரிலும் பேர்பெற்றிருந்தார்கள். பாம்பு கடித்து விட்டால் (பாம்பு
கடித்தது என்று யாருமே சொல்லமாட்டார்கள். விசம் தீண்டி விட்டது என்று
சொல்லும் வழக்கமே வன்னியிலுண்டு. அந்தளவுக்குப் பாம்புகளின் மேல் மரியாதை
வன்னி மக்களுக்கு) காலில் கட்டுப் போட்டுவிட்டு, விசகடி வைத்தியரிடம் ஆளைக்
கொண்டு வருவார்கள். அப்படிக் கொண்டு வரும்போது, விசம் தீண்டியவரின்
முகத்தைப் பார்த்தவுடனேயே ஆள் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதைக்
குறிபார்த்துச் சொல்லி விடுவார்கள் வைத்தியர்கள். மட்டுமல்ல, என்ன பாம்பு
தீண்டியது என்று கூடச் சொல்லி விடுவார்கள். சிலர் விசம் தீண்டியவரின் கை
நாடியைப் பிடித்துப்பார்த்து முகத்தினாலேயே வியளம் சொல்லுவதுமுண்டு.
மருந்தென்றால்
பாம்புக் கல் என்ற ஒன்றைத் தலைக்கு வைப்பார்கள். விசம் தீண்டிய
இடத்துக்குச் சற்று மேலே ஒரு வளையம் சுண்ணாம்பினால் போடப்படும். அது விசம்
தலைக்கு ஏறாமல் இருப்பதற்கு என்றொரு ஐதீகம். வேப்பிலையும் திருநீறும்தான்
மருந்து. வேப்பிலையை விசுக்கி விசுக்கி ஏதோ மந்திரத்தை உச்சரிப்பார்கள்.
விசம் தீண்டியவர்கள் கண் மூடி நித்திரை கொள்ளக் கூடாது. அதற்காக விசம்
தீண்டியவரைச் சுற்றி உற்றாரும் நண்பர்களும் இரவிரவாக விழித்துக்
கொண்டிருப்பார்கள். சும்மா, விட்டேத்தியாக இரவிரவாக விழித்திருக்க
முடியுமா? அதற்காகத் தாயக்கட்டை உருட்டுவார்கள். பெண்கள் என்றால் கொக்கான்
வெட்டுவார்கள். அல்லது சோழி போடுவார்கள். பிற்காலத்தில் கடதாசிக் கூட்டம்
என்று காட்ஸ் விளையாடுவார்கள். கதைப்புத்தகம் வாசிப்பது,
கூத்துப்பாட்டுகளைப் பாடுவது, கதை சொல்வது என்று இரவுகளைக் கழிப்பதற்கென்று
ஆளாளுக்கு ஏதோ சரக்குகளை வைத்திருந்தார்கள். தேனீர்ப்பானை கொதித்துக்
கொண்டேயிருக்கும்.
இப்படிப் பெரிய தொல்லையைத் தருவதாக இருந்தாலும்
பாம்புகளைப் பெரும்பாலானவர்கள் அடித்துக் கொல்வதில்லை. அதிலும் நாக
பாம்பென்றால், பேசாமல் அவற்றை விலகியோ விலக்கியோ விடுவார்கள். பதிலாக ஊரில்
உள்ள நாகதம்பிரான் கோயிலுக்கு நேர்த்தி வைப்பார்கள். நேர்த்தி கூட
விசித்திரமானதே. நாகதம்பிரான் பொங்கலுக்கு கோழி கொண்டு வந்து தருவதாக ஒரு
சத்தியம். புளியம்பொக்கணை, புதூர் போன்ற இடங்களில் உள்ள நாகதம்பிரான்
கோயில்களில் நடக்கிற ஆண்டுப் பொங்கல்களுக்குப் போனால் எத்தனை விதமான
நேர்த்திகள் என்று பார்க்கலாம். இதை விட வயலோரங்களிலும்
ஆற்றுப்படுகைகளிலும் வளவுகளிலும் ஏராளம் நாகதம்பிரான்கள் ஊராள்கின்றனர்.
பாம்புகள் என்றால் எதிரி என்றுதான் பலருக்கும்
தோன்றும். ஆனால், பாம்புகளைத் தங்கள் தோழமை என்ற உணர்வே வன்னியில்
பலருக்கும் உண்டு. கேட்டால், அதுகள் தம்பாட்டில். நாம் நம்பாட்டில் என்று
சொல்வார்கள். வயலுக்குப் போகும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேணும்.
வரம்புகளில் தவளைக்கோ எலிக்கோ பூச்சி பூரானுக்கோ காத்திருக்கும்
பாம்புகளில் மிதித்தால் அவ்வளவுதான். அதைப்போல வளவுகளில் பழையதுகளை
அகற்றும்போது அல்லது விறகு எடுக்கும்போது குலைந்து தீண்டும். சிலவேளை
வளவில் உள்ள கோழிக்கூண்டுக்குள்ளேயே நுழைந்து விடுவதுமுண்டு. குஞ்சுக்காக
அடை வைத்த முட்டைகளை வந்து ஆட்டையைப்போடும் பாம்புகளுமுண்டு. இதைவிட
வீட்டுக்குள்ளேயே வந்து முகட்டிலேயோ மூலைக்குள்ளேயோ படுத்திருக்கிற
பேர்வழிகளும் இருக்கிறார்கள்.
வன்னி வாழ்க்கையே விசித்திரமான ஒன்றுதான். யானைத்
தொல்லை, பாம்புக்கடி, நுளம்புக்கடி என்று சவாலானது. ஆனால், அந்தளவுக்கு
இனிப்பானது. நெருக்கடிகள், சவால்களின் மத்தியில் வாழ்கின்ற வாழ்க்கைக்கே
இனிய நினைவுகளும் ருசியும் அதிகம்.
பாம்பை வைத்து வித்தை காட்டுகின்றவர்கள் ஒரு
காலம் ஊர் ஊராக வருவார்கள். பாம்புகளோடு வாழ்ந்தாலும் பாம்பாட்டிகளைச்
சுற்றிச் சனங்கள் வேடிக்கை பார்ப்பதுண்டு. குரங்குகளைத் தெரிந்தாலும்
குரங்காட்டியின் குரங்குக்கு மதிப்புண்டல்லவா!
முன்பு
வெள்ளிக்கிழமை விரதம் என்றொரு படம் வந்தது. சின்னப்பா தேவரின் தயாரிப்பு.
மிருகங்களை வைத்து படம் எடுத்த தேவர் பாம்பை வைத்தும் படம் எடுக்கலாம்
என்று வெள்ளிக்கிழமை விரதம் படத்தை எடுத்துக் காட்டினார். படம் எடுக்கிற
பாம்பை வைத்தே படம் எடுக்கிறார்கள் என்று சொல்லி இரத்தினசிங்கம் அண்ணர்
சிரித்தது இப்போதும் நினைவில் உண்டு. பிறகு தேவரையே மிஞ்சுகிற மாதிரி
“நீயா” என்று துரை ஒரு படம் எடுத்திருந்தார். ஒரு வருசத்துக்கு மேலாக ஓடிய
படம் அது. பாம்புக்கு அவ்வளவு மவிசு. அதைத் தொடந்து நானே வருவேன் என்று
நீயாவின் இரண்டாம் பாகமும் வந்திருந்தது.
பாம்புடன் செல்லம் கொஞ்சுகிற மாதிரி
விளையாடுகின்றவர்களை டிஸ்கவரிச் சனலில்க் காட்டுவார்கள். பாம்புகளைப்
பிடிக்கின்ற விதத்தையும் வித்தையையும் கூட அதில் பார்க்கலாம். அதை விட
விதவிதமான பாம்புகளையெல்லாம் காட்டுவார்கள். ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு
சூழலுக்குமான பாம்புகள் அவை. சில சாதுவானவை. சில படு மூர்க்கமானவை.
பார்த்தாலே நம்முடைய எலும்புகள் கரைந்து விடுமளவுக்குக் பயங்கரமானவை.
தொலைக்காட்சியில்தானே பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படாமல் ஏதோ நேரில்
பார்ப்பதைப்போலத் திகிலூட்டும்.
இப்படியே பாம்புகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே
போகலாம். இன்று காலையும் ஒரு பாம்பு எங்கள் வீட்டிற்குள்ளிருந்தது. என்ன
செய்வது, பாம்புக்குப் பயந்து பரதேசம் போக முடியுமா?
ஐயா ஒரு புத்தகம் வைத்திருந்தார். அதில் “ஆதிசேஷன்
முதலில் பிறந்தான், அதன்பிறகு வாசுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன்,
தனஞ்சயன், காலகேயன் {காளியன்}, மணி {மணிநாகன்} என்ற பாம்பு, பூரணன்
{ஆபூரணன்}, பிஞ்சரகன், ஏலாபத்ரன், வாமனன், நீலன், அநீலன், கல்மாஷன், சபலன்,
ஆர்யகன், உக்கிரன் {உக்கிரகன்} {சதிகன்}, கலசபோதகன்{சலபோதகன்}, சூரமுகன்
{சுமனோமுகன்}, ததிமுகன், விமலபிண்டகன், ஆப்தன், கரோடகன் {கோடரகன்}, சங்கன்,
வாலிசிகன், நிஷ்டானகன், ஹேமகுஹன், நஹுஷன், பிங்களன், பாஹ்யகர்ணன்,
ஹஸ்திபதன், முத்கரபிண்டகன், கம்பலன், அசுவதரன், காளீயகன், விருத்தன்,
சம்வர்த்தகன், பத்மன், மஹாபத்மன், சங்கமுகன், கூச்மாண்டகன், க்ஷேமகன்,
பிண்டாரகன், கரவீரன், புஷ்பதம்ஷ்டிரகன், பில்வகன், பில்வபாண்டுரன்,
மூஷிகாதன், சங்கசிரசன், பூர்ணபத்திரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜியோதிகன்,
ஸ்ரீவஹன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், விரஜசன், சுபாகு,
சாலிபிண்டன், பிரபாகரன், ஹஸ்திபிண்டன், பிடரகன், சுமுக்ஷன் {சுமுகன்},
கௌணபாசனன், குடரன், குஞ்சரன், குமுதன், குமதாக்ஷன், தித்திரி, ஹலிகன்,
கர்த்தமன், பகுமூலகன், கர்க்கரன், அகர்க்கரன், குண்டோதரன் மற்றும் மகோதரன்
ஆகியோர் பிறந்தனர்.(5-16) என்று ஏதோ பாம்புகளின் சரித்திரம்
எழுதியிருந்தது.
பாம்புகளைப் பற்றிய எண்ணத்தோடுதான் மனித குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது போலும்.