நாட்டில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பின் போது பெரும் நம்பிக்கையுடன் ஒரு பதவியை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் அக்கரைப்பற்றுக்கும் கொழும்புக்கும் அலைந்து திரிந்த ஒரு அரசியல்வாதி அக்கரைப்பற்றில் இருக்கிறார் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் கிங்ஸ் போ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் இளைஞர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் இதற்காக தலைமைத்துவப் பயிற்சிகளை நடாத்துவதற்கு நாங்கள் திட்மிட்டுள்ளோம். இதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு இவர்களினால் பாரிய பங்களிப்பை செய்ய முடியும்.
கடந்த ஆண்டு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்திற்கு சுமார் 40 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கீடு செய்து முதற்கட்ட வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. மைதானத்தின் அடுத்த கட்ட நகர்வாக இயற்கை அழகுடன் புற்தரை அமைப்பதற்கு இம்முறையும் தேவையான நிதியை அவசரமாக ஒதுக்கீடு செய்கின்றேன்.
அட்டாளைச்சேனையில் பாரிய நிதிமூலம் பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதே போல் அதற்கு சமமான நிதியை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்திற்கும் வழங்கப்படும் என்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹக்கீமின் சொந்த நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபா கிங்போ அமைப்பிற்கு வழங்க்பட்டது.