News Update :

Wednesday, March 6, 2019

TamilLetter

வில்லனாக நடித்த மனிதன்!சரியாக நுாறு ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் பிறந்தார், தமிழ்த் திரை வானில், அரை நுாற்றாண்டுக்கும் மேல் கோலோச்சிய, எம்.என்.நம்பியார். சபரிமலைக்கு இப்போது, தமிழகத்திலிருந்து அதிகம் பேர் செல்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்டவர் அவர் தான்!

குழந்தையாக இருந்த போதே, தந்தையை இழந்த அவர், ஊட்டியில், தன் அக்கா வீட்டில் தங்கியிருந்து, பள்ளியில் படித்தார்.எதிலும் ஒழுங்கு, ஒழுக்கம்,நியதி என, தனக்கென தெளிவாக வகுத்த பாதையில் தயக்கமின்றி முன்னேறியவர்.அன்றைய நாடக உலகில் முடிசூடா மன்னராக விளங்கிய, நவாப் ராஜமாணிக்கத்தின் கலைக் குடும்பத்தில், சிறு வயதிலேயே அவர் இணைந்தார்.

அய்யப்பன் கதையை நாடக மாக்கி, 1942ல், கேரளாவின் ஆலப்புழை நகரில் அதை நடத்திய பின், நவாப் ராஜமாணிக்கத்துடன் முதன் முதலில், நம்பியார், சபரிமலைக்கு சென்றார். அதன் பிறகு, தன் ஆயுள் காலம் முழுதும் சென்று, அய்யப்பனை தரிசனம் செய்து வந்தார்.அவரைப் பல தடவை பேட்டி காணும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது, அவர் கூறிய தகவல்களை, அவரே கூற கேட்போம்.

நான் பிறந்தது கேரளா;ஆனால், வளர்ந்தது பூரா ஊட்டி.நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக கம்பெனி ஊட்டிக்கு வந்தது. அதில் சேர வேண்டும் என, எனக்கு ஆசை வந்தது. ஏனென்றால், அந்த நாடக கம்பெனியில் இருந்த சிறு பையன்கள், காலையில் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருப்பர். பள்ளிக்கு செல்லும் போது, நான் அதை பார்த்துக்கொண்டே போவேன்.
அது என்னமோ, என் நெஞ்சில் பட்ட மாதிரி இருந்தது. அதனால் தான், அந்த நாடக கம்பெனியில் சேர விரும்பினேன்.ஆனால், நாடகக் கம்பெனியில் சேருவதற்கு தேவையான நடிப்போ, பாட்டோ, தெரியாது. கொஞ்சம் அழகா இருப்பேன். அதனால் தான், என்னைச் சேர்த்துக் கொண்டனர் என, நினைக்கிறேன்.

அந்த குருகுலத்தில், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தனர். அதில் பெற்ற வாழ்க்கை நெறிமுறைகள், பெற்ற கல்வி, ஒழுக்கம் தான், வாழ்க்கை முழுவதிலும் நிறைந்து இருந்தது. நாடகத்துக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சியை அங்கு அளித்தனர். இன்று நான் நன்றாக இருக்கிறேன் என்றால், நவாப் ராஜமாணிக்கத்தின், மதுரை தேவி பால வினோத சங்கீத சபையில் கொடுத்த பயிற்சி தான் அடிப்படை. அங்கே, பூஜை மிக முக்கியம். அதுவும் வாத்தியார் நவாப், பூஜை செய்யத் துவங்கினால், இரண்டு, மூன்று மணி நேரம் கூட ஆகும்.
வாழ்க்கையில் பக்தி, எந்த அளவுக்குத் தேவையோ, அதை விட ஒழுக்கம் தேவை. மனதை ஒருமுகப்படுத்த முயன்று, ஓரளவுக்கு வெற்றி அடைய முடிந்தால், அது தான் கோவில். ஆயிரக்கணக்கானவர்களின் மனமும் எண்ணமும் ஒரு கோவிலில் போய்ச் சேரும் போது, அந்த இடத்துக்கு ஒரு சக்தி உண்டாகிறது.மனப்பூர்வமாக அங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு, அந்த சக்தி கொஞ்சம் கிடைக்கும் என்பது என் அபிப்பிராயம்.

எத்தனை முறை சபரிமலை சென்றுள்ளேன் என, கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. பல தடவை சென்றதால், எனக்கு எந்த பெருமையும் இல்லை. ஏனெனில், சபரிமலைக்கே போகாத வர்களில் பலர், என்னை விட நல்லவர்களாக இருக்கின்றனர்.

கடந்த, 1935ல், பம்பாய் ரஞ்சித் ஸ்டுடியோவில், நவாபின், 'பக்த ராமதாஸ்' படம் எடுத்தனர். அதில், நடிகைகளே கிடையாது; எல்லாரும் ஆண்கள் தான். உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என, -நான்கு மொழிகளிலும் பேசி நடிக்க வேண்டும்.படம் நன்றாக ஓடியது. எனக்கு, 'மாதண்ணா' என்ற அமைச்சரின் வேடம் கிடைத்தது; 40 ரூபாய் சம்பளம்.

அதற்குப் பிறகு, ஜெமினி ஸ்டுடியோ, மோஷன் பிக்சர் கம்பைன்ஸ் ஆக இருந்த போது, 'இன்பசாகரன்' என, தமிழிலும், 'பிரேம் சாகர்' என்று ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்தனர். ஆனால், படச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலானதால் படம் வெளிவரவில்லை. எஸ்.டி.சுந்தரத்தின், 'கவியின் கனவு' நாடகத்தில் ராஜகுருவாக நடித்த பின், 'மந்திரி குமாரி' யிலும் அவ்வாறே தோன்றினேன். அன்று முதல், வில்லாதி வில்லனாக வெற்றிப்பயணம் தொடர்ந்தது.

என்னை விட கெட்டிக்காரர்களும், திறமையானவர்களும், என்னை விட மோசமான நிலைமை யில் இருக்கின்றனர். நான் ஏதோ அதிர்ஷ்டவசமாக இந்த நிலையில் இருக்கிறேன்.வில்லனாக நடித்ததில் எனக்கு வருத்தம் இருந்ததில்லை. 'நம்ம எம்ஜியாரோடே நடித்தவர்டா இவர்' என, போகுமிடம் எல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நினைத்திருந்தால் ஹீரோவாகியிருக்க முடியும்.

கடந்த, 1946ல் திருமணமாகும் போது அவருக்கு, 600 ரூபாய் சம்பளம். அப்போது கலெக்டருக்கே அந்த சம்பளம் இல்லை!தெய்வம் தந்த தெய்வம் தான் என் மனைவி. அந்த அம்மாவுக்கு நான் நல்லா இருக்கணும்; நான் சந்தோஷமாக இருக்கணும் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் கிடையாது. பிழைக்கத் தெரியாதவங்க.பேரன், பேத்தியுடன் சந்தோஷமாக இருக்கலாம். அதை விட்டு, நான் போகும் இடத்துக்கெல்லாம், சட்டி, பானையைத் துாக்கிக்கிட்டு வந்து, சமைத்துப் போடுவார்.

நான் ஆறு ஜன்மம் செய்த புண்ணியத்தினால் அவள் வந்தாள். நான் சைவ உணவுப் பிரியன். இலையும் புல்லும் தான் என் முக்கிய ஆகாரம். உணவில், பூண்டு, பட்டை, சோம்பு சேர்த்துக் கொள்ள மாட்டேன். ஐஸ் கிரீம், ஓவல், கேக் எதுவும் கிடையாது. பால், மோர், நெய்யும் அப்படியே. அதனால் அந்த அம்மாவே சமைக்க வேண்டிய ஒரு நிர்பந்தம்.

சிரிப்பு ஒன்று தான் நரம்புக்குப் புத்துயிர் தருகிறது.சிரிக்கிறவங்க அநேகமாக நல்ல வங்களாக வும் இருப்பாங்க.அயோக்கியர்கள் சிரிப்பில் ஒரு வஞ்சகம் இருக்கும்.உடற்பயிற்சி செய்பவர்கள் என்றும் இளைமையாக இருப்பர். காட்டில் இருக்கும் விலங்குக்கும் நாட்டில் இருக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே இதைத் தெரிந்து கொள்ளலாம். ரத்த ஓட்டத்துக்காகவாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மனதைப் பொறுத்தவரையில், நிதானமாக,சாந்தமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அனாவசியமான சிந்தனைகள் இல்லாமல் இருந்தால், இன்னொருவனைக் கெடுக்கணும் என்ற எண்ணம் வராமல் இருந்தால், அதுவே மனதுக்கு ஒரு பெரிய பயிற்சி.இவ்வாறு, நம்பியார் கூறியுள்ளார்.

அவரது கனவுகள் எல்லாமே பிரமாண்டமானவை. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பக்கத்தில், பசிபிக் பெருங்கடலில், 40 ஆயிரம் அடி ஆழத்துக்குப் போக வேண்டும்; தென் துருவத்தில் நடந்து போக வேண்டும்; அமேசான் நதியில் பெரு நாட்டுக்கு செல்ல வேண்டும் என, பெரிய கனவுகள் பல அவருக்கு இருந்தன. சின்னக் கனவு ஏதும் இருந்ததில்லை.அவரது ஆசை, நல்லவனாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். 'மனிதனாக வாழ்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு உயிர் நான்' என, தன்னைப் பற்றி அடிக்கடி, நம்பியார் கூறிக் கொள்வார்.

ஹெச்.ராமகிருஷ்ணன்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-