News Update :

Thursday, March 14, 2019

TamilLetter

ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்


 எஸ்.ஐ.கீதபொன்கலன்

ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த மாதம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவின் வடக்கு நோக்கிய மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட விஜயம் கூட அந்த மூலோபாய நகர்வுகளில் ஒன்று. தமிழ் வாக்குகள் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கணக்குக் கூட்டலின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஸ 2015 ல் அவரது தேர்தல் தோல்வியில் முஸ்லிம் வாக்குகள் ஒரு கணிசமான பங்கினை வகித்ததை நன்றாக அறிந்து கொண்டதால், தற்போது முஸ்லிம் குழுக்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். ஆகவே நாங்கள் ஏற்கனவே ஒரு தேர்தல் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இயல்பாகவே, புதிய வரவு செலவு திட்டம் கூட இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.
இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வித்தியாசமான ஒரு தொகைப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப காலத்தில் தான் ஒரு தவணை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிப்பேன் என அவர் விடுத்த பொதுவான அறிவிப்புக்கு மாறாக, அவர் இரண்டாவது தவணைக்காகவும் போட்டியிடுவதில் ஆர்வமாக உள்ளார். இந்த நோக்கத்தை மனதில் வைத்துத்தான் ஒக்ரோபர் 2018ல் அவர் மகிந்த ராஜபக்ஸவை பிரதம மத்திரியாக நியமித்தார். அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை மற்றும் இரண்டு மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. ஒக்ரோபரில் விக்கிரமசிங்காவின் பதவியை பறித்தது, அடுத்த முறை ஐதேக வாக்குகள் தனக்குக் கிடைக்காது என்கிற உண்மை அதில் செல்வாக்கு செலுத்தியதுதான் காரணம்.
இந்தக் குழப்பம் மற்றக் கட்சிகளின் வாக்குகளை தேடுவதற்கு சிறிசேனவைக் கட்டாயப்படுத்தியுள்ளது. இயல்பாகவே அதற்கான தெரிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான். எனினும் ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளபடி, ஜனாதிபதி, தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (ஸ்ரீலபொபெ) தன்னுடன் கூட்டணியில் ஈர்ப்பதற்கு முயன்று வருகிறார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மகிந்த ராஜபக்ஸ, கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறி வருவதாகத் தெரிகிறது.
ஸ்ரீலசுக மற்றும் ஸ்ரீலபொபெ கூட்டணியில் சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராவது சாத்தியமா? இந்தக் கேள்விக்கான பதில் சாத்தியம் மிகக் குறைவு என்பதுதான். எனினும் ஏன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த விடயத்தில் சிறிசேனவை ஈடுபடுத்துகிறது? இதற்கான காரணம்தான் ஜனாதிபதியிடம் உள்ள “கெடுக்கும் சக்தி.”
இந்த பிரச்சினையில் முக்கிய பெரிய பங்குதாரர்கள் யாவரும் மறைமுகமாக 2018 உள்ளுராட்சித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே செயல்படுகிறார்கள். இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மொத்த வாக்குகளில் 44.69 வீத வாக்குகள் கிடைத்தன மற்றும் சிறிசேன தலைமையிலான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டணி மொத்த தேசிய வாக்குகளில் 13.38 வீத வாக்குகளைப் பெற்றது.
ராஜபக்ஸ பிரிவு கடந்த ஒரு வருட காலத்க்குள் ஏதாவது புதிய வாக்குகளைப் பெற்றுள்ளதா என்பதை ஆராய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக 2018 அரசியல் நெருக்கடி சமயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் கூட்டாளிகள் நடந்து கொண்ட விதத்தால் அவர்கள் சில வாக்குகளை இழக்கவும் நேரிடலாம். சந்தேகமில்லாமல் அந்த நெருக்கடி ஐதேக வுக்கு புதிய சக்தியை வழங்கியுள்ளது. கோட்பாட்டளவில் பிளவுபட்டிருந்த சில ஐதேகவின் அங்கத்தவர்கள் சிலர் ஒக்ரோபர் 2018ல் கட்சிக்கு திரும்பியிருக்கலாம்.
மறுபக்கத்தில், உள்ளுராட்சித் தேர்தலின்போது தமிழ்க் கட்சிகளுக்குக் கிடைத்த தமிழ் வாக்குகளையும் கூட ஐதேக தனக்கு கிடைக்கும் என்று கணக்கிட்டிருக்கலாம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இந்த வாக்குகள் போதுமானவை என்று யாராலும் சொல்ல முடியாது. சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பொறுத்தே ஐதேக வின் வாய்ப்புகள் பெருமளவில் தங்கியுள்ளன.
உண்மையில் முக்கியத்துவமாக உள்ளது, ஸ்ரீலசுக (மற்றும் ஜனாதிபதி சிறிசேன) உடன் ஓரு கூட்டணியில்லாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 45 விகித வாக்குகளை பெறமுடியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 விகிதத்தை (ஒரு வாக்கு கூடுதலாக) பெறுவதற்கு அதற்கு 5 விகித வாக்குகள் குறைவாக உள்ளன. ஆகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகமில்லாமல் ஸ்ரீலசுக வின் வாக்குகளில் ஆர்வம் கொண்டுள்ளது, மற்றும் ஒருவேளை ஜனாதிபதியுடன் கூட்டணி வைக்கவும் அது விரும்பலாம். கேள்வி என்னவென்றால் 5 விகித வாக்குகளைப் பெறுவதற்கு வேண்டி கட்சி அதற்குக் கிடைக்கவேண்டிய வெற்றிக் கிண்ணத்தை தியாகம் செய்யுமா என்பதுதான்? தொகுதி வாரியாக இந்தக் கட்சிகளின் பலத்தை மதிப்பிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையே அமையும் கூட்ணிக்கு கிடைக்கும் வாக்குகளில் பெருந்தொகையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குச் சொந்தமானவையாகவே இருக்கும். எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொது வேட்பாளராக சிறிசேனவை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு மிக அரிது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநேகமாக ஏன் சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்கக் கூடாது என்பதற்கான மற்றொரு முக்கிய காரணம் சமீபத்தைய அனுபவம்தான். தேர்தலுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மீது எந்த கட்டுப்பாட்டையும் கொண்டிருக்காது மற்றும் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வெற்றிபெற்றதின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பம் மற்றும் நிகழ்ச்சித் திட்டம் என்பனவற்றுக்கு எதிராக அவர் போகமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த கசப்பான பாடத்தை வெகு சமீபத்தில் ஐதேக படித்தது.
எனினும்,ஜனாதிபதி சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்கிற முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புகளை கணிசமானளவு குறைத்து விடும் ஏனென்றால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரின் வாக்குகளில் முக்கியமான சிறியளவு வாக்குகளை அவர் பெற்றுவிடுவார். எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி இறுதியாக அவர் தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைக் கெடுத்துவிட முடியும். இது ஜனாதிபதி சிறிசேனவின் கெடுக்கும் சக்தியாகும். எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஜனாதிபதி கூட்டணியைத தேடும்போது கெடுதலிற்கான அச்சுறுத்தல் இயல்பாக இல்லாமலாகிவிடும்.
மகிந்த ராஜபக்ஸ இந்த இக்கட்டான நிலையை புரிந்து கொள்கிறார் போலத் தெரிகிறது. அதனால்தான் பரிமாற்றம். ஜனாதிபதியுடனான அதன் கையாளுகை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஸன பெரமுன இரண்டு குறிப்பிட்ட நோக்கங்களை அடையவேண்டும் (1) ஜனாதிபதியை பகைத்துக்கொள்ளக் கூடாது (2) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும். இந்தக் கட்டத்தில் “பேசு ஆனால் சரியென்று ஒப்புக் கொள்ளாதே” என்பதுதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூலோபாயமாக இருக்கவேண்டும்.
அநேகமாக இது விளக்குவது, ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது சந்திப்புக்களை மேற்கொண்டாலும் அதேவேளை சிறிசேன ஜனாதிபதி பொது வேட்பாளர் என்கிற நிபந்தனையுடான கூட்டணி அமைப்பது தொடர்பான அவரது கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இந்த சூத்திரத்தின் அடிப்படையில் எவ்வளவு காலத்துக்கு பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதியுடன் சுமுகமான உறவைப் பேணமுடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சிறிசேன கணிக்கமுடியாத ஒருவராக இருக்கிறார். யதார்த்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒரு கூட்டணி அமைக்காமல் சிறிசேனவை தேர்தலில் போட்டியிட ஊக்குவிப்பதில் ஐதேக ஆர்வமாக உள்ளதினால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனமீது அழுத்தங்களை அதிகரிக்கச் செய்யும். அதே சமயம் ஐதேக கூட இந்த ஓட்டத்தில் ஜனாதிபதியை ஒரு சுயாதீன இயக்கத்தை நோக்கித் தள்ளும் வகையில் அவருடன் நட்புறவைப் பேணவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே கூட்டணி அமைவது தொடர்பான சாத்தியங்கள் எவை? வேட்பாளரை ஒப்புக்கொள்ளாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறிசேனவுடன் ஒரு கூட்டணியை முடிவு செய்வதாக இருந்தால், அது வேறு சில சலுகைகளை வழங்கவேண்டிய அவசியம் ஏற்படும். பல தெரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று 2020ல் நடக்கும் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை சிறிசேனவுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்குதல் ஆகும். சந்தேகமில்லாமல் தமது முன்னாள் ஜனாதிபதிகளை பிரதம மந்திரிகளாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ஸ்ரீலங்காவாசிகள் பரிணாம வளாச்சி பெற்றுள்ளார்கள். இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் தெரிவுகளிவ் இதுவும் ஒன்று.
சிறிசேனவினால் உருவாக்கப்படும் கெடுதல் சக்தியினால் தோன்றும் பிரச்சினைகளை எவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிறிசேனவின் முடிவுகளைப் பொருட்படுத்தாது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னோக்கிச் சென்று தானே தனித்து தேர்தலில் போட்டியிடுமா? ஸ்ரீலசுக வாக்குகளுடன் சூதாட்டம் நடத்துமளவிற்கு அதற்குத் தைரியம் உள்ளதா?விரைவிலேயே நாம் இதைத் தெரிந்து கொள்வோம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-