ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நீர்கொழும்பு பிரதேசத்தில் உத்தேச அசுத்த நீர் சுத்திகரிப்பு, திண்மக்
கழிவகற்றல் செயற்றிட்டம் என்பன முன்னெடுக்கப்படும்போது, சுற்றாடலுக்கு
எந்த விதத்திலும் பாதிப்பில்லாத வகையில், தாவரங்களுக்கும் கடலிலும் மகா
ஓயாவிலும் உள்ள மீன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், பறவை மற்றும்
விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத விதத்திலும், விஞ்ஞான
ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு உரியநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவுறுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவு நீர்
கட்டமைப்பு கருத்திட்டம் தொடர்பான முன்மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை
சமர்ப்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (07) ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற
போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, நவீன தொழில்நுட்பங்களை
பயன்படுத்தி கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, பக்றீரியா போன்ற ஆபத்தான
நுண்ணுயிர்கள் நீக்கப்பட்ட கழிவுநீரை அகழிகள் மற்றும் சிறிய சுரங்கங்கள்
ஊடாக செலுத்தி, பாதுகாப்பான முறையில் மகா ஓயாவிலும் ஆழ்கடலிலும் விடுவது
பற்றியும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த செயற்றிட்டத்துக்கான முன் மதிப்பீட்டு அறிக்கையை செகோ
டென்மார்க், கபினட் மேலின் பிரான்ஸ், கிரீன் டெக் முதலான நிறுவனங்கள்
கூட்டாக தயாரித்திருந்தன. இக்கருத்திட்டத்துக்கு 107.5 யூரோ மில்லியன்கள்
தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், பிரான்ஸ் அபிவிருத்தி
நிறுவனம், ஐரோப்பிய சங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன
இக்கருத்திட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பாரிய செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நிர்மாண வேலைகள் 2022ஆம்
ஆண்டில் நிறைவு செய்யப்படும்போது, குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 73
ஆயிரம் பேர் நன்மையவுள்ளனர். மேலும், 2050ஆம் ஆண்டளவில் இறுதி கட்ட
நடவடிக்கைகள் முற்றுப்பெறும்போது இதன்மூலம் 1,96,000 பேர் நன்மையடைவர்.
இரத்மலானை, ஜா–எல பிரதேசங்களில் நடைமுறையிலுள்ள திண்மக் கழிவகற்றல்
பொறிமுறைகளை விட, நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும்
அசுத்த நீர், மலத் திண்ம கழிவகற்றல் செயற்றிட்டம் முன்னேற்றகரமானதாக
இருக்குமெனவும் கருதப்படுவதாக இந்த கலந்துரையாடலின்போது அமைச்சரிடம்
சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, முக்கிய நகரங்களை அண்மித்த பகுதிகளில் சுகாதார மற்றும் சுக
நலப் பாதுகாப்பை மேன்படுத்தும் விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காலி –
உனவட்டுன மற்றும் களனி – பேலியகொட முதலான பிரதேசங்களில்
மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இக்கருத்திட்டங்களுக்கு பிரான்ஸ்
அபிவிருத்தி நிறுவனம் முதலீடு செய்ய ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
இந்த உயர் மட்ட கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் பிரியந்த
மாயாதுன்ன, தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர்
தீப்தி சுமனசேகர மற்றும் கருத்திட்ட ஆலோசனைகளுக்கான நிறுவனங்களின்
வெளிநாட்டு பிரதிநிதிகள், நீர்கொழும்பு பிரதேச அரச நிறுவனங்களின்
பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.