News Update :

Thursday, January 24, 2019

TamilLetter

சூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்

சூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி

ஏ.எல்.றமீஸ்








கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்சாளர்களையும் தன்னகத்தைக் கொண்ட ஒரு பிரதேசம் அக்கரைப்பற்று .இப் பிரதேசத்தின் கௌரவத்திற்கும் வளர்ச்சிக்கும் பல பேர் பல வகையான தியாகங்களை செய்துள்ளனர்.

அந்த அடிப்படையில் அக்கரைப்பற்றின் புகழை சர்வதேசம் மூழுவதும் கொண்டு சென்ற பெருமை அலியார் நவாஸிக்கு உண்டு.

சிறு வயது முதல் உதைப்பந்தாட்ட துறையில் மிகவும் ஆர்வம் காட்டிவந்த நவாஸ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாடசாலை மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்ட நவாஸ் தனது பாடசாலையின் பல வெற்றிகளுக்கு காரணமானார்.

உதைப்பந்தாட்டத்தில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி புதிய நுணுக்கங்களை களத்தில் பிரயோகித்து எதிரணியின் கோல் கம்பங்களை பதம் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்த பெரும் கழகங்கள் இவரை உள்ளீர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டியது.

பெரும் உதைப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றிய சுற்றுப் போட்டிகளில் 13 வயதினிலே அக்கரைப்பற்றை பிரதிநித்துவப்படுத்தும் கழகத்திற்கு விளையாடி தன் புகழை மாகாணம் முழுவதும் நிலை நிறுத்திக் கொண்டார்.

இப்படியே  பாடசாலை அணியிலும்,வெளி கழங்களுக்கும் விளையாடி வந்தார் நவாஸ்.

இச் சமயத்தில்  19 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய உதைப்பந்தாட்ட அணியை தெரிவு செய்வதற்கான போட்டிகளை அரசாங்கம் தலைநகரில் நடாத்தியது.

தேசிய அணியில் இடம் பிடிப்பதற்கு நாடு பூராகவும் 4ஆயிரம் உதைப்பந்தாட்ட வீரர்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.இதில் கழகம் சார்பாகவும் பாடசாலை சார்பாகவும் அக்கரைப்பற்றிலிருந்தும் சில வீரர்கள் இப் தெரிவுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு,இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம்,பாடசாலை உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தெரிவுக் குழு உறுப்பினர்களாக கடமையேற்றனர்.

பல சுற்றுக்களின் அடிப்படையில் இலங்கை தேசிய அணியை தெரிவு செய்திருந்தனர்.இதில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த அலியார் நவாஸ்,ஏ.ஜீ.அன்வர் ஆகிய இரண்டு வீரர்கள் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டு வெளிநாடுகளில் இலங்கை சார்பாக போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இப்படியான நிலையில் தேசிய வீரரான நவாஸ் அவர்களை கல்வித் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் என்று பல நிறுவனங்கள் தம்மோடு இணைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த போது பொலிஸ் துறையை தேர்ந்தெடுத்தார்.

உதவிப்  பொலிஸ் பரிசோதகராக கடமையேற்ற நவாஸ் தமது கடமையை நீதியாகவும் நேர்த்தியாகவும் செய்து வந்தார்.அதே வேளை பொலிஸ் உதைப்பந்தாட்ட அணியை பலம் பொருந்திய அணியாகவும் மாற்றியமைத்தார்.

இவரின் திறமையை வியர்ந்து பாராட்டிய பொலிஸ் தலைமையகம் பொலிஸ் பரிசோதகர்,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் பதவிகளை வழங்கியது.

நீண்டகாலம் பொலிஸ் துறையில் சேவை புரிந்து வந்த நவாஸ் தனது சொந்த பிரதேசத்தின் உதைப்பந்தாட்ட வளர்ச்சியல் மிகவும் அக்கறை செலுத்தி வந்தார். ஒரிரு நாட்கள் வழங்கப்படும் ஒய்வு நாட்களை தனது குடும்பத்தோடு கழிக்காமல் தலைநகரிலிருந்து அக்கரைப்பற்றுக்கு வந்து இளம் உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சியளித்து வந்தார்.

இப் பங்களிப்பானது போதிய பயனைத் தராது எனறு உணர்ந்த நவாஸ் தனது சொந்த மாவட்டம் அல்லது மட்டக்களப்பிற்காவது இடமாற்றம் ஏற்பட்டால் இன்னும் கூடுதலான பங்களிப்பை தனது மண்ணின் வீரர்களுக்கு வழங்கலாம் என நினைத்து இடமாற்றத்திற்கும் விண்ணப்பித்திருந்தார்.

இவரின் விண்ணப்பம் தலைமைக் காரியாலயத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக மாற்றம்பெற நாளும் குறிக்கப்பட்டிருந்தது.

இதே சந்தர்ப்பத்தில் சூடான் நாட்டில் ஏற்பட்டு வரும் யுத்தத்தினால் அந்நாடு பல அழிவுகளையும் உயிர்ச்சேதங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.யுத்தத்தின் உக்ரத்தால் நாடே வறுமையின் பிடியில் அகப்பட்டது.

இந்த நாட்டில் அமைதியை நிiநாட்டி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் மேற் கொண்டிருந்தது. இதற்காக பல திட்டங்களை வகுத்த ஐநா சூடானுக்கு அமைதிப்படையை அனுப்ப முன்வந்தது. இதற்காக இலங்கை அரசாங்கத்திடம்; பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 4 ஆயிரம் படைவீரர்களை கோரியது.

ஐநாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இங்கிருந்து சமாதான படைகளை சூடானுக்கு அனுப்பியது இலங்கை அரசாங்கம்.இதில் ஒரு படைப்பிரிவுக்கு தலைமையேற்று வழிநடாத்த நவாஸூக்கு கட்டளையிட்டது பொலிஸ் தலைமையகம்.

சூடானுக்கு சென்ற நவாஸ் அங்கு வாழும் மக்களோடு மிகவும் கன்னியமாகவும் அன்போடும் பழகி வருவதோடு பல மனிதபிமான உதவிகளையும் செய்து வருகின்றார். அத்தோடு  தனது கீழ் பணியாற்றும்  வீரர்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்ற கட்டளையையும் அவர் அடிக்கடி இட்டு வருகின்றார்.

அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் உதைப்பந்தாட்ட பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார். இவரின் இச் செயற்பாடு பல வெளிநாட்டு படைகளையும் ஆச்சிரயப்பட வைத்துள்ளது மட்டுமல்ல இதற்காக பல விருதுகளையும் நவாஸ் பெற்றுள்ளார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-