News Update :

Sunday, January 27, 2019

TamilLetter

தனிப்பட்டவர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் பழி சுமத்தக் கூடாது: அமைச்சர் ரிஷாட்


தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்தக்கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, தாமரைத்தடாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முஸ்லிம்களை, ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, அவர்களின் இருப்பை இல்லாமற் செய்யும் பயங்கரமான சதியொன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இஸ்லாமியச் சட்டங்களை எல்லோரும் விமர்சிக்கும் நிலை இன்று இந்த நாட்டிற்கு வந்துள்ளதுள்ளமை வேதனையானது. இன்று சிலர் முஸ்லிம்களை வேண்டுமென்றே வன்முறைக்கு இழுக்கும் வியூகங்களில் இறங்கியுள்ளனர்.

அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற நோக்கிலும் சில அரசியல்வாதிகள் முஸ்லிம்களைக் குறித்து தவறாகக் கூறிவருகின்றனர்.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் காட்ட வேண்டிய தேவை சில அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் எழுந்துள்ளது .

இவ்வாறான இனவாதிகளின் தேவைகளுக்கு தீனி போடும் வகையில் பெரும்பான்மையான ஊடகங்களும் செயற்படுகின்றன.

வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரங்களையும் உடமைகளையும் அழிக்கவேண்டும் என்பதையும் நமது சமூதாயத்தையும் பெரும்பான்மை சமூதாயத்தையும் முட்டி மோத வைப்பதையும் இலக்காக கொண்டு கபடத்தனமாக காரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாம் மிகப்பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துக்கொள்வதே எமது சமூகத்தை பாதுகாக்கும் வழிமுறைகளாகும்” என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-