News Update :

Monday, October 9, 2017

TamilLetter

ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்! - அரசாங்கம் அறிவிப்பு







உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். மாநகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் மாநகரசபைகள் திருத்த சட்டமூலங்கள் சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அவை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும் என்றும் சபைக்கு அமைச்சர் அறிவித்தார். 


உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச்சட்டமூலத்துக்கு மேலும் திருத்தங்களைக் கொண்டுவந்து தேர்தல்களை மேலும் இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அமைச்சர், அவ்வாறான தேவை எதுவும் அரசாங்கத்துக்கு இல்லையெனக் கூறினார். மாநகர சபைகள் (திருத்த) சட்டமூலம், நகர சபைகள் (திருத்த) சட்டமூலம், பிரதேச சபைகள் (திருத்த) சட்டமூலம் என்பவற்றின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாக, மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபை சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய முறையில் நடத்தப்படவுள்ளது. அதாவது 60 வீத வட்டார முறையையும், 40 வீத விகிதாசர முறையுமுடைய கலப்புமுறையின் கீழ் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கமையவே சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருகின்றோம்.
கலப்பு முறைக்கு தேவையான நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கே திருத்தங்களைக் கொண்டு வருகின்றோம். எனினும், இவ்வாறான திருத்தங்கள் மூலம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அல்லது இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை. சில அரசியல்வாதிகள் இதனை தமக்கான அரசியல் களமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

தேர்தல்களை பிற்போடவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. ஜனவரி மாதத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்துவதென்ற உறுதிமொழியை பாராளுமன்றத்துக்கு வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-