News Update :

Sunday, October 1, 2017

TamilLetter

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவைப் பற்றி தவம் இவ்வாறு சொன்னார்

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக இருந்து 70;30 என்ற விகிதாசாரத்தை உள்ளூராட்சித் தேர்தலில் கொண்டு வந்து, சிங்களவர்கள் வாழுகின்ற உள்ளூராட்சி மன்றங்களில் 75 சதவீதமானவற்றை மஹிந்த வெல்வதற்கு வழிசமைத்துக் கொடுத்து, வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களின் பிரதிநித்துவங்களை இல்லாமல் செய்ய முனைந்த அதாவுல்லா சமூகத்தைப் பற்றிப் பேச அருகதையற்றவர் எனக் கூறினார் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்பு இணைப்பாளருமான ஏ.எல்.தவம் அவர்கள்.

ஏறாவூரில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அக்கூட்டத்தில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் எந்த ஒரு விடயத்திலும், அது நேர்மறை விளைவினைத் தரும் விடயமாக இருந்தாலும், அதனை எந்தப் புள்ளியிலிருந்து சாதகமாகத் திசைமாற்றி சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களிலிருந்து மீண்டு எழலாம் என்பதில் கவனமாக இருக்கும் ஆளுமையுள்ள கட்சி. அதனையே மாகாண சபைகள் திருத்தச் சட்டத்திலும் செய்திருக்கிறது. 60:40 என்ற விகிதம் சமூகத்தின் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்து, அதனை 50:50 ஆக மாற்றக்கோரி நின்றது. அதில் விட்டுக்கொடுப்பில்லாமல் அரசாங்கத்தை இணங்க வைத்துள்ளது. ஏறாவூருக்கு வந்து அதாவுல்லா அதனை விமர்சித்திருக்கிறார். 

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக அவர் இருந்த காலத்தில்தான் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட நிலம் தொடர்பான அதிகாரங்களை திட்டமிட்டு வழக்குகளால் பறிக்கப்பட்டது. அப்போது அதற்கெதிராக அவர் ஏன் பேசவில்லை?

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் கைவைக்கும் வண்ணம் திவிநெகும சட்டம் இயற்றப்பட்டு, ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டிய சமூர்த்தி நிதி பகற்கொள்ளையிடப்படடது. அப்போது அதாவுல்லா எங்கு சென்றார்?

அதாவுல்லா மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த போதுதான் மாகாண சபைகளுக்கான சட்டவாக்கல் உரிமையைப் பறிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டுக்குச் சென்று சிறிய சத்திரசிகிச்சை செய்திருந்த நிலையிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் உடன் நாடு திரும்பி, விமான நிலையத்திலிருந்து நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்று சண்டையிட்டுத் தடுத்த போது, அதாவுல்லா எங்கிருந்தார்? 

மேலும், தான் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக இருந்து 70;30 என்ற விகிதாசாரத்தை உள்ளூராட்சித் தேர்தலில் கொண்டு வந்து, சிங்களவர்கள் வாழுகின்ற உள்ளூராட்சி மன்றங்களில் 75 சதவீதமானவற்றை மஹிந்த வெல்வதற்கு வழிசமைத்துக் கொடுத்து, வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களின் பிரதிநித்துவங்களை இல்லாமல் செய்ய முனைந்த அதாவுல்லா போன்றோர் சமூகத்தைப் பற்றிப் பேச அருகதையற்றவர்கள்.

இப்போது அவர்களுக்கு நிகழ்ச்சிநிரல் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதனூடாக சிறுபான்மைச் சமூகங்களை இன்றைய அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பி, மகிந்த சார்ந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த  விலை கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொந்தராத்தை கச்சிதமாகச் செய்ய களம் இறங்கியுள்ளனர்.

வடக்கு – கிழக்கு பிரிய வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுவதற்கு எப்படி அன்று கொந்தராத்துக் கொடுக்கப்பட்டதோ, அதேபோன்று இன்று சிறுபான்மைச் சமூகங்களை அரசிற்கு எதிராகத் திருப்புவதற்கு கொந்தராத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் கொந்தராத்தைச் செய்யட்டும். அவர்கள் அரசியலை வியாபாரமாக்கிப் பழக்கப்பட்டவர்கள்.

ஆனால், சமூகத்தைப் பலியாகக் கொடுக்க வரக்கூடாது. அதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ஏனெனில், மீண்டும் எமது சமூகம் பௌத்த கடும்போக்குத் தீவிரவாதிகளை உருவாக்கியவர்களின் கையில் அகப்பட்டு ஒடுக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. இன்னுமொரு மியன்மாராக இலங்கை மாறுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. ரோகிங்யா முஸ்லிம்களைப் போன்று நமது சமூகமும் கொல்லப்படுவதையும், அகதிகளாக அலைவதையும் நாம் பார்க்க விரும்பவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-