News Update :

Thursday, October 12, 2017

TamilLetter

சினிமா பாணியில் நடந்த 300 இலட்சம் கொள்ளை : அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் தொடர்பு : முழுமையான தகவல்





நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்கியின் தலைமையக கணினி கட்டமைப்புக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, தாய்வானின் ஈஷ்டன் இன்டர்னெஷனல் வங்கியின் பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலில முனசிங்கவுக்கு அக்கொள்ளையில் கிடைத்த பங்கில் ஒரு பகுதி அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் பலருக்கு பகிரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுகத் அமரசிங்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்ப்ட்டு வரும் விசாரணைகளில் இதுவரை வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக இந்த சந்தேகம் எழுவதாக  பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பணக் கொள்ளையில் தனக்கு கிடைக்கப் பெற்ற பங்கில் 20 இலட்சம் ரூபா மாத்திரமே தன்னிடம் இருப்பதாக சலில முனசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்கு மூலம் அளித்துள்ள நிலையிலேயே இந்த சந்தேகம் மேலெழுவதாக அந்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்த வங்கி கட்டமைப்பு ஊடறுப்பு மற்றும் பணக் கொள்ளையில் சலில முனசிங்கவுடன் தொடர்புபட்ட கொள்ளையின் பகுதி 300 இலட்சம் ரூபா என குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த பணத் தொகையை சலிலவும், முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியின் மகனான சமிந்த நம்முனியும் இனைந்து எடுத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்சிகளும் குற்றப் புலனயவுப் பிரிவின் பிடியில் உள்ள நிலையில் தன்னிடம் 20 இலட்சம் ரூபா மட்டுமே உள்ளதாக சலில வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளதால் மிகுதி 280 இலட்சம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுவதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

இந் நிலையில் இந்த நிதி கொள்ளை தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியின் மகனான சமிந்த நம்முனி மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலில முனசிங்க ஆகியோர் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்ப்ட்டனர்.
இதன்போது அவ்விருவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டுள்ள ஒவ்வொரு நபர் தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்துமாறும் அவர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறும் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.

இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளில், நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்கியின் தலைமையக கணினி கட்டமைப்புக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, தாய்வானின் ஈஷ்டன் இன்டர்னெஷனல் வங்கியின் கணக்கில் இருந்து மோசடியான முறையில் கொள்ளையிடப்பட்ட மொத்த பணப் பெறுமதி 69.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினர்.

எனினும் அதில் ஒரு சிறு நிதித் தொகையே இலங்கை வங்கியின் நியூயோர்க் கிளை ஊடாக இலங்கைக்கு பறிமாற்றப்பட்டுள்ளதாகவும், மற்றைய பணத் தொகை எந்த நாட்டுக்கு எவ்வாறு கடத்தப்பட்டன என்பது குறித்து துல்லியமாக அறிய கணினி ஆதாரங்களை மையப்படுத்தி
விசாரித்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கோட்டை நீதிவானுக்கு நேற்று அறிவித்தனர்.
கடந்த 6 ஆம் திகதி, ஜனக சமிந்த நம்முனி எனும் முதலாவது சந்தேக நபர் 80663687 எனும் தனது வங்கிக்கணக்கு அமெரிக்க டொல்ரகளில் பணம் கிடைக்கவேண்டி இருப்பதாகவும் அதனை பரிசீலிக்கவும் இலங்கை வங்கியின் தனியார் வங்கிகள் தொடர்பிலான முகாமையாளர் ஜகத் அனுரசிறி குருப்புவிடம் கோரியுள்ளார்.

இதனையடுத்து நம்முனியின் வங்கிக்கணக்கை பரிசீலனைச் செய்தபோது, 1103960 அமெரிக்க டொலர்கள் அந்த கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளமையை முகாமையாளர் கண்டுகொண்டுள்ளார்.

இந் நிலையில் அந்த பணத்தில் 3 கோடி ரூபாவை உடனே எடுக்கவும் மேலும் 5 கோடி ரூபாவை என்.டி.பி. வங்கியில் உள்ள கணக்கொன்றுக்கு மாற்றவும் இதன்போது நம்முனி வங்கியைக் கோரிய போதும் உடனடியாக அதனை செய்ய முடியாது எனக் கூரி அதற்கான விண்ணப்பத்தை நிரப்பித் தருமாறு முகாமையாளர் அவரை அன்றைய தினம் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து மறு நாள் அதாவது ஒக்டோபர் 5 ஆம் திகதி, இலங்கை வங்கியின் அமெரிக்க டொலர்கள் கணக்கை மேற்பார்வை செய்யும் நியூயோர்க் நகரில் உள்ள வங்கியின் கொழும்பு கிளையில் சேவையாற்றும் அசேல என்பவர், இலங்கை வங்கியின் தனியார் வங்கிகள் தொடர்பிலான முகாமையாளர் ஜகத் அனுரசிரியை தொடர்புகொண்டுள்ளார்.
இதன்போது நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவியுள்ள ஒருவர் 1103960 அமெரிக்க டொலர்களை 80663687 எனும் வங்கிக் கணக்குக்கு பறிமாற்றியுள்ளதாகவும் அந்த தொகையானது போலியான பறிமாற்று எனவும் அது தொடர்பில் சிட்டி வங்கி மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் அசேல, முகாமையாளர் ஜகத் அனுரசிரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இந் நிலையிலேயே இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்காம் திகதி வங்கிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ள முற்பட்ட, நம்முனி என்பவர் மீள வங்கிக்கு வந்த போது பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து குற்றப் புலனயவுப் பிரிவுக்கு வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந் நிலையில் தாய்வான் அரசாங்கம் சர்வதேச பொலிஸார் ஊடாக மின்னஞ்சல் ஊடாக, இலங்கை பொலிஸாரின் சர்வதேச கிளைக்கு தகவல் பறிமாற்றியுள்ளது. தாய்வானின் கொமர்ஷல் சர்வதேச வங்கியின் சர்வதேச கட்டமைப்புக்குள் ஊடுருவி நபர் ஒருவர் ரூசூ39; ஸ்விப்ட் தகவல் ரூசூ39; ஊடாக 6010400 டொலர்களை மோசடியான முறையில் பல வங்கிக் கணக்குகளுக்கு பறிமாற்றியுள்ளதாக அந்த மின்னஞ்சல் ஊடாக கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடாத்தி சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
அதன்பின்னர் தொடர்ந்த விசாரணைகளில், கைதான முதல் சந்தேக நபரான நம்முனியின் அமெரிக்க டொலர் கணக்கிற்கு இந்தியாவைச் சேர்ந்த டுட்டாலியா எனும் நபர் அமெரிக்க டொலர்களை வைப்பில் இடுவதாகவும், அதில் 50 வீதத்தை குறித்த இந்தியருக்கும் 20 வீதத்தை தனக்கு தருமாறும் மிகுதி 30 வீதத்தை தனக்கு வைத்துக்கொள்ளுமாறும் சலீல முனசிங்க முதல் சந்தேக நபரான நம்முனிக்கு தெரிவித்துள்ளமையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்தனர்.

இந் நிலையில் தலை நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரு இந்தியர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாவை சலீல முனசிங்க வழங்கியுள்ளமை தொடர்பிலும், அவை இந்த கொள்ளை தொடர்பிலேயே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்களை சேகரித்துள்ளதாக நீதிவானிடம் தெரிவித்த விசாரணையாளர்கள், அந்த இந்தியர்கள் இருவரும் தற்போது பணத்துடன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந் நிலையிலேயே தற்போது கணினி சாட்சியங்களை மையப்ப்டுத்தி விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் அனைத்து சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தர்விட்ட நீதிவான், குற்றத்தின் பாரதூரம் கருதி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்து அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-