News Update :

Monday, September 11, 2017

TamilLetter

இருபதாவது சரத்து என்றால் என்ன? - மாகாண சபை உறுப்பினர் தவம் விளக்கம்



அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான சட்டத் திருத்தமே இருபதாவது சரத்து திருத்தமாகும்.
இருபதாவது சரத்தின் முந்திய நிலை:-

மாகாண சபைகள் அனைத்தினதும் தேர்தல்களை ஒரே நாளில் நடாத்தும் பொருட்டு மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தையும் மாகாண சபைத் தேர்தல்களின் தினத்தையும் பாராளுமன்றமே தீர்மானிக்கும் என்ற விடயம் கூறப்பட்டிருந்தது. அதனால், மாகாண சபைகளின் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு செல்வதான ஒரு விடயமாகப் பார்க்கப்பட்டது.
இப்போதைய திருத்தம் என்ன?

மிகத்தெளிவாக, காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளின் காலம் பன்னிரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு, அம்மாகாண சபைகளின் முடிவடையும் திகதி தீர்மானிக்கப்படும் எனவும், காலம் முடிவடையாத சபைகளின் காலம், மேலே தீர்மானிக்கப்பட்ட காலமாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது முடிவடையும் சபைகளின் காலம் ஒரு வருடமாக நீடிக்கப்படுகிறது.

அத்தோடு, காலம் முடிவடைவதற்குள் ஏதாவது சட்டரீதியிலான காரணத்தால் ஒரு சபை கலைக்கப்படுமாயின் அதன் தேர்தல் ஏலவே உள்ள சட்டங்களின் பிரகாரம் நடாத்தப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இத்திருத்தங்கள், இருபதாவது சரத்து எப்படி அமையப்போகிறது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறும் வண்ணம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணமாகும். இதனை வைத்தே இருபதாவது சரத்திற்கு பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தப்பட வேண்டுமா? என உச்ச நீதிமன்றம் கூறவுள்ளது.

அதனால் இத்திருத்தங்களுக்கு மாற்றமாக அதாவது உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள தகவலுக்கு மாற்றமாக, ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அல்லது மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரோ செல்ல முடியாது. வேறு மாற்றங்களைச் செய்யவும் முடியாது. இவ்வாறு திருத்திய 20 ஆவது சரத்திற்கே இன்று கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த சார்பான அரசியல்வாதிகளுக்கும் மகிந்தவோடு கள்ளத்தனமாக உறவு வைத்திருப்போருக்கும் எப்படியாவது இந்த அரசாங்கத்தை புரட்டியடித்து மீண்டும் மகிந்த சார்ந்தவர்களிடம் அதிகாரத்தைக் கொடுக்க இருபதாவது சரத்தை விமர்சித்து தோற்கடிக்கும் நோக்கமும் தேவையுமுள்ளது.
மாறாக, இத்திருத்தங்களுக்குப் பின்னர் என்ன அதிகாரங்களை பாராளுமன்றம் கையில் எடுக்கிறது? அல்லது எந்த வகையில் மாகாண சபைகளின் அதிகாரம் அரசாங்கத்தினால் கையடக்கப்படுகிறது? அல்லது என்ன வகையில் தமிழ் பேசும் சமூகம் பாதிக்கப்படுகிறது?

விமர்சிப்பவர்களில் சிலருக்கு தெளிவில்லாமல் விமர்சிக்கின்றனர். மற்றவர்கள் மகிந்த சார்பு ஆட்சியைக் கொண்டு வர கங்கணம் கட்டி குருட்டுத்தனமாக விமர்சிக்கின்றனரே தவிர வேறொன்றும் இல்லை.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-