News Update :

Sunday, September 24, 2017

TamilLetter

மஹிந்தவை மட்டம் தட்டிய சந்திரிக்கா : ரணிலுக்கு புகழாரம்



நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர்

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தில் இருந்து உறுப்பினர்களை பொது எதிரணியின் பக்கம் எடுக்கவுள்ளதாக ஒரு சிலர் கூறுகின்றனர், அருந்திக்க பெர்னாண்டோ விலகியதை அடுத்து இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் இந்த கருத்தினை கூறியுள்ளார்.
ஆனால் அவர்களால் அரசாங்கத்தில் இருக்கும் எவரையும் இணைத்துக்கொள்ள முடியாது.

மஹிந்த ராஜபக் ஷவினாலும் யாரையும் இணைத்துக்கொள்ள முடியாது. அதேபோல் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியுமா என சிலர் முட்டாள் தனமான கேள்விகளை கேட்கின்றனர்.

கடந்த ஜனவரி எட்டாம் திகதி இந்த நாட்டில் ஏன் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை முன்னெடுத்தனர்? ஏன் பொது அணியினருக்கு ஆதரவை தெரிவித்தனர்? அதுவரையில் 9 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இந்த நாட்டில் ஊழலை பரப்பி மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை சர்வதேச தரப்பிடம் விற்று
மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தமை காரணமாகவே மக்கள் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம் என்ற ஒரு காரணத்தை மட்டுமே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறி வந்தது. இன்றும் அதே கருத்தை மட்டுமே கூறி வருகின்றனர்.

ஆனால் யுத்தத்தின் முக்கால்வாசியை முடித்துவிட்டே நான் ஆட்சியில் இருந்து விலகினேன். இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இவர்கள் யுத்தத்தை முடித்ததாக தப்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். அதேபோல் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தால் மாத்திரம் மக்கள் அமைதியாக வாழ்ந்துவிட முடியாது.

பொருளாதாரம், மனித உரிமைகள், ஜனநாயகம் என்ற அனைத்துமே பலப்படுத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது.

ஆகவே மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க முடியாது. இந்த நாட்டினை காப்பாற்றவும் மீட்டெடுக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியை அமைப்பது கூட தவறில்லை. ஆனால் கொள்ளையர்களுடன் இனிமேல் கூட்டணி அமைக்கவே முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆதரித்த மக்கள் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாக வெறுத்தனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி தோல்வியை சந்திக்கவும் மக்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். ஆகவே மாற்றத்தை உருவாக்கவே நாம் களமிறங்கினோம்.

எம்மீது கொண்ட நம்பிக்கையில் மக்கள் எம்மை வெற்றிபெற வைத்தனர். அதேபோல் இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-