மஹிந்தவின் கேள்விக்கு
ரணில் பதில்
உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரே நடத்தப்படும் என்றும், மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க முடியும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் வரவு செலவுத் திட்டம் மற்றும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கபொத சாதாரண தரத் தேர்வு என்பனவற்றினால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்.
டிசெம்பரில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.” என்று கூறினார்.
அப்போது முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச, மாகாணசபைத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் “மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை வரும் டிசெம்பரில் நடத்தலாம் என்று தேர்தல்கள் திணைக்களம் கூறியுள்ளது.
கபொத சாதாரண தரத் தேர்வு மற்றும் வரவுசெலவுத் திட்டம் என்பன இதற்கு இடையூறாக இருக்கும். இதுபற்றி அரசியல் கட்சிகளுடனும், தேர்தல்கள் ஆணையாளருடனும் பேச்சு நடத்த வேண்டியுள்ளது.” என்றும் கூறினார்.