பொரளை கேம்பல் மைதானத்தில் இன்று இடம் பெறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் அரசதலைவர் மைத்திரிபாலவுக்கு இணையாக மகிந்தவுக்கும் ஆசனம் ஒதுக்கப் படும். இருவரும் சமமாகவே நடத்தப்படுவர் என்று பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.
முன்னாள் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்த மாநாட்டுக்கு அழைத்திருப்பது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
திருமணத்துக்குத் தயாராகுவதுபோல் எமது கட்சி 66 ஆவது மாநாட்டைக் கொண்டாடுவதற்குத் தயாராகு கின்றது.எமது சுதந்திரக் கட்சி 66 ஆவது மாநாட்டை பொரளை கேம்பல் மைதானத்தில் நடத்துகின்றது.70 ஆவது மாநாட்டை சுதந்திரக் கட்சியின் தனி அரசின்கீழும் மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழுமே நடத்துவோம்.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் இந்நாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் ஒன்றிணைக்கும் காலம் வந்துவிட்டது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு நாம் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.அவரை மீண்டும் மீண்டும் மரியாதையுடன் அழைக்கின்றோம்.அவருக்குப் பொருத்தமான ஆசனம் மேடையில் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேடையில் மைத்திரி எந்த இடத்தில் இருப்பாரோ அதே இடத்தில்தான் மகிந்தவும் இருப்பார்.இருவரையும் ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம்.அவர்கள் இருவர் அல்லர்.ஒருவர்.ஏன் நாங்கள் இவ்வளவு கெஞ்சிக் கூத்தாடி மகிந்தவை அழைக்கின்றோம் தெரியுமா?அவர் இருப்பது பிழையான இடத்தில்.அவரின் தாய் வீடு அவரை அன்புடன் அழைக்கின்றது.
அவர் சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டால் மறுநாள் விடியும்வரை கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவிப்போம்.அவர் ஒரு வீரர்.அவர் சுதந்திரக் கட்சிக்குத் திரும்பிவிட்டால் 2020இல் சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியைக் கைப்பற்றுவதில் எந்தவொரு சிரமமும் இருக்காது.அவர் எமது சக்தி.
இரண்டு தலைவர்களும் ஆளுக்கொரு பக்கத்தில் இருந்து விளையாட்டுக் காட்டாமல் கட்சியின் நலன்கருதி ஒன்றிணைய வேண்டும். கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் – என்றார்.