News Update :

Tuesday, September 19, 2017

TamilLetter

மெக்சிகோவில் நள்ளிரவில் கோர நிலநடுக்கம்: மக்கள் உயிர்ப் பலி! கட்டடங்கள் சரிவு!


மத்திய மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் இன்னமும் பலர் சிக்கிக் கொண்டிருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.


நேற்று நள்ளிரவு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், பியூப்லா ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.

மொர்லோஸ் மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில ஆளுனர் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. 
மின்சாரம், தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மெக்சிகோவில் கடந்த 1985-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே இந்த பேரழிவு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2-ஆவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் கூறுகையில், மெக்சிகோ சிட்டியை 'கடவுள் காப்பாற்றட்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-