அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறும்போது அமைச்சர்கள் செல்பேசி பயன்படுத்துவதை தான் தடை செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன அமைச்சரவை கூட்டங்கள் நடைபெறும்போது சில அமைச்சர்கள் செல்பேசிகளில் கைவிரல்களை வைத்துகொண்டு அதன் மீது கவனத்தை செலுத்தி வருவதை தான் பலமுறை கண்டுள்ளதாகக் கூறினார்.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் தெரிவிக்கும் கருத்துக்களை முறையாக கேட்பது இல்லை என்றும், அமைச்சரவை கூட்டத்தின் போது பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துக்களை சரியாக அறிந்துகொள்ளவும் தவறி வருகின்றதாக குற்றம்சாட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன் காரணமாக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் போது அமைச்சர்கள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதை தடைசெய்ய தனக்கு நேரிட்டதாக தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன எமது நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு செல்பேசி மற்றும் இணையதள பயன்பாடு ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
அதே போன்று சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இது ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக சிறிசேன தெரிவித்தார்.